'2022க்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவார்கள்': என்ன சொல்கிறார் ராகேஷ் ஷர்மா?

  • 17 ஆகஸ்ட் 2018
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராகேஷ் ஷர்மா

இந்தியாவின் சுதந்திரத்தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியிலுள்ள பழைமைவாய்ந்த செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, வரும் 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா எப்படி பார்க்கிறார் என்பதை பிபிசி அறிய முயன்றது. பிபிசி இந்தி சேவையின் வானொலி பிரிவு ஆசிரியர் ராஜேஷ் ஜோஷியிடம் ராகேஷ் ஷர்மா நடத்திய உரையாடலின் எழுத்து வடிவம் இது.

மற்ற இந்தியர்களை போன்று நானும் இந்த தருணத்திற்காக கடந்த 30 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்தேன். வரும் 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் என்பதை அறியும்போது மகிழ்ச்சிகரமாக உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சித்துறையில் நமக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் அவசியத்தை நான் கடந்த 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் நான்தான் என்றாலும், நமது நாட்டின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சொந்த தொழில்நுட்பத்தில் விண்வெளிக்கு செல்வது என்பது வேறுவிதமான அனுபவம்.

விண்வெளிக்கு செல்லும் பயணம் என்பது சவாலானது, அதைப்பற்றி நினைக்கும்போதே இதயம் வேகமாக துடிக்கிறது. இது மிகவும் கடினமான வேலை. நான் முதல்முறையாக விண்வெளிக்கு சென்ற பிறகு, விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது? என்று என்னிடம் இந்திரா காந்தி கேட்டார். நான் "நமது நாடு மற்ற நாடுகளை காட்டிலும் நன்றாக உள்ளது" என்று பதிலளித்தேன்.

படத்தின் காப்புரிமை TWITTER

நான் விமானப்படையில் விமானியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, பல விமானிகள் இருந்த நிலையிலும், விண்வெளிக்கு செல்வதற்கு நான் மட்டுந்தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது தொழில்நுட்பம் பல வகைகளிலும் மாறிவிட்டது.

இந்தியா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்பட்சத்தில் என்ன சாதனை நிகழ்த்தப்படும்?

நாட்டில் அறிவியல் துறையிலுள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், விண்வெளி மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, அறிவியலுக்காக மட்டுமல்லாமல், மற்ற நன்மைகளுக்காகவும்தான் நாம் இதை செய்கிறோம்.

நமது நாகரிகத்தின் எதிர்காலம் விண்வெளியில்தான் தொடரும் என்பதை மறந்துவிடாதீர்கள். பூமியில் வளங்களின் குறைபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாம் வேறெங்காவது செல்ல வேண்டியிருக்கும். மக்கள்தொகை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பூமியை தவிர்த்து மற்றொரு இடத்தை கண்டறிவது அவசியமாகிறது.

Image caption ராகேஷ் ஷர்மா

ராகேஷ் ஷர்மா தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?

நான் நாடெங்கிலும் உள்ள ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் உரையாற்றி வருகிறேன். என்னுடைய அனுபவத்தை மக்களிடம் எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னால் இயன்றவரை இதைத்தொடர்வதற்கு முயற்சி செய்வேன். உங்களுக்கு ஒருவேலை கொடுக்கப்பட்டால் அதன் மீதுதான் உங்களது எண்ணம், செயல்பாடு என அனைத்தும் இருக்க வேண்டும். விண்வெளியை பற்றிய நமது சிறிதளவு அறிவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: