காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன் - எப்படி செயல்படுகிறது?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்

உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.

பட மூலாதாரம், Deagreez

காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன்

எந்நேரமும் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு இருந்தாலே தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாதவர்கள் பலருள்ள இந்த காலத்தில் ஒருநாளின் பெரும்பகுதியை கேமிங் என்னும் கணினி சார்ந்த விளையாட்டில் செலவிடுபவர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

பட மூலாதாரம், HP

வெகுநேரம் தொடர்ந்து கேம் விளையாடுபவர்களுக்கு பெரும் தொல்லை மனிதர்கள் அல்ல; குறிப்பிட்ட சில மணிநேரத்தில் காது வலிக்க செய்யும் ஹெட்போன்கள்தான். விலையுயர்ந்த ஹெட்போன்களை பயன்படுத்தினால் அசௌகரியம் வேண்டுமானால் குறையலாம். ஆனால், ஹெட்போன்களிலிருந்து உண்டாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தவே முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், ஹெட்போன்களிலிருந்து வெளியாகும் வெப்பத்தை அறவே நீக்கும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் முதல் ஹெட்போனை எச்.பி. நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், HP

எச்.பி ஓமென் மிட்பிரேம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கேமிங் ஹெட்போனின் இருபுறமும் (காதில் சொருகுமிடம்) கணினிகளின் நினைவகமான சிபியு-வை குளிர வைக்க பயன்படுத்தப்படும் தெர்மோஎலெக்ட்ரிக் கருவியை பயன்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த எச்.பியின் கேமிங் விழாவில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த ஹெட்போனை, அக்டோபர் மாத இறுதியிலிருந்து பொது மக்கள் வாங்க முடியும்.

பட மூலாதாரம், Kevork Djansezian

படக்குறிப்பு,

எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தை தனதாக்கும் முடிவை கைவிட்டார் எலான் மஸ்க்

பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பங்களிப்பில் செயற்பட்டும் வரும் உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவை முழுவதுமாக வாங்கும் முடிவை அதன் தலைமை செயலதிகாரியான எலான் மஸ்க் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை என அனைத்திலும் உலகளவில் முன்னிலை வகித்து வருகிறது.

பட மூலாதாரம், JERRY LAMPEN

படக்குறிப்பு,

எலான் மஸ்க்

இந்நிலையில், அதன் தலைமை செயலதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், அந்நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், முதலீட்டாளர்கள் ஒன்று நிறுவனத்திலேயே தொடரலாம் அல்லது ஒரு பங்குக்கு தலா 420 டாலர்களை பெற்றுக்கொண்டு விற்றுவிடலாம் என்றும் அறிவித்திருந்தார்.

இது அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது முடிவுக்கு பின்னர் கிடைத்த எதிர்மறையான கருத்துக்களை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து தரப்பினரிடமும் எலான் மஸ்க் கடந்த ஒரு வாரகாலமாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், முதலீட்டாளர்களின் நலன், டெஸ்லாவின் எதிர்காலம் போன்றவற்றை கருத்திற்கொண்டு டெஸ்லாவை தனியார் நிறுவனமாக்கும் முடிவை கைவிடுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

"தனியார் நிறுவனமாக்குவதற்கான செயல்முறை சவாலானதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட இது இன்னும் அதிக நேரம் பிடிப்பதாகவும், நிறுவனத்தின் கவனத்தை திசைத்திருப்பக்கூடிய வகையில் உள்ளதாகவும் கருதுகிறேன்" என்று இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வலைப்பதிவில் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்தவார சிறப்பு தகவல்: "கூகுள் மேப்ஸூம், செயல்படும் விதமும், உங்களது பங்களிப்பும்"

அலைபேசி என்றைக்கு நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகியதோ, அன்றைக்கே அதுசார்ந்த தொழில்நுட்பங்களின் பிடியில் நாம் சிக்கிவிட்டோம்.

உதாரணமாக, கடந்த நான்கைந்து வருடங்களுக்கு முன்புவரை இருசக்கர அல்லது நான்குசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களுக்கு தெரியாத இடமொன்றிற்கு செல்வதென்றால் வழியில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார்கள்.

ஆனால், தற்போதெல்லாம் நமக்கு மிகவும் பரீட்சயமான ஓரிடத்திற்கு செல்வதென்றாலும் கூட அலைபேசியில் 'கூகுள் மேப்ஸ்' சேவையை உபயோகித்து 30 நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு 20 நிமிடத்தில் செல்ல வாய்ப்புள்ளதா என்று போக்குவரத்து நெரிசலை பார்த்து முடிவு செய்கிறோம்.

நமது லொகேஷனை ஆன் செய்துவிட்டு, போகவேண்டிய இடத்தை தெரிவித்தால் உடனடியாக, அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு உள்ள பல வழிகளை அங்குள்ள ட்ராபிக்கின் அளவு, விரைவில் செல்லக்கூடிய பாதை, சுங்கச்சாவடி உள்ளிட்ட பல விவரங்கள் உங்கள் கண் முன்னே வருகிறது.

இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி உங்களது மனதில் எழாமல் இருந்திருக்காது. அந்த கேள்விக்கான பதிலை அளிக்கிறது பிபிசி தமிழின் வாராந்திர தொழில்நுட்ப தொடரின் இந்த வார சிறப்பு பகுதி.

கூகுள் மேப்ஸ் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் சேவை கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குள்ள தொலைவை மட்டுமே தெரிந்துகொள்ள முடிந்தது. கூகுள் மேப்ஸின் தொடக்கக்காலத்தில் அளிக்கப்பட்ட டிராபிக் குறித்த தகவல்கள் அந்த குறிப்பிட்ட இடத்தின் நீண்டகால தரவுகளை மையமாக கொண்டுதான் அளிக்கப்பட்டதே தவிர நிகழ்கால டிராபிக் குறித்த தகவல்களை அளிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

கூகுள் மேப்ஸின் டிராபிக் சேவை எப்படி வேலை செய்கிறது?

கூகுள் மேப்ஸின் நிகழ்கால (Real time) டிராபிக் குறித்த தகவல்களை அளிக்கும் சேவை கடந்த 2007ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நீங்கள் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்வதற்கு உங்களது அலைபேசியில்/ மடிமேற்கணினியில் ஜிபிஎஸ் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் உங்களது இடத்தை தெரிந்துகொண்டு நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கான பாதையை கூகுள் மேப்ஸ் காண்பிக்கும்.

கூகுள் மேப்ஸில் நிகழ்கால டிராபிக் குறித்து அறிவதற்கு தேவையான தரவுகள் கிரௌட்சோர்சிங் என்னும் முறையின் வாயிலாக பெறப்பட்டு, பல கணினி சார்ந்த கணக்கீடுகளை மேற்கொண்டு நொடிக்கும் குறைவான நேரத்திற்கொருமுறை அப்டேட் செய்யப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

சுருங்க சொல்லவேண்டுமென்றால் கூகுள் மேப்ஸின் நிகழ்கால டிராபிக் குறித்த சேவையை வழங்குவதற்கு நீங்கள்தான் காரணம்!

நீங்கள் எப்படி கூகுள் மேப்ஸுக்கு உதவுகிறீர்கள்?

நீங்கள் சென்னை அண்ணா சாலையிலிருந்து மீனம்பாக்கத்திலுள்ள விமான நிலையத்திற்கு கூகுள் மேப்ஸை பயன்படுத்தி காரில் செல்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் கண்டிப்பாக அலைபேசியிலுள்ள ஜிபிஎஸ்ஸை ஆன் செய்து வைத்திருப்பீர்கள். நீங்கள் ஜெமினி மேம்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருக்கும்போது, தேனாம்பேட்டை சிக்கனல் அருகே சிவப்பு நிறத்தில் நந்தனம் சிக்கனல் வரை டிராபிக் இருப்பதை போன்று காட்டுகிறது.

ஜெமினி மேம்பாலத்தில் செல்லும்போது நீலநிறத்தில் காலியாக இருந்த சாலை, சரியாக தேனாம்பேட்டை சிக்கனல் அருகே செல்லும்போது முன்னர் காட்டியதை போன்று போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும்!

பட மூலாதாரம், Getty Images

இது எப்படி சாத்தியமாகிறது தெரியுமா?

உங்களை போன்றே கூகுள் மேப்ஸை பயன்படுத்தி பலரும் அதே சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்றுகொண்டிருப்பார்கள்தானே? அதுபோன்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாகனமும் செல்லும் வேகத்தை, நிறுத்துமிடத்தை கூகுள் நிறுவனம் பெற்றுக்கொள்ளும். அவ்வாறு பெறப்படும் தகவலை கணக்கிட்டு எங்கிருந்து எவ்வளவு தூரத்திற்கு வாகன நெரிசல் உள்ளது, அதை கடப்பதற்கு எவ்வளவு நேரமாகும் போன்ற பல தகவல்களை கூகுள் மேப்ஸ் வழங்குகிறது.

அதாவது, இதேயளவு ட்ராபிக்கில் சிக்கிக்கொண்ட வாகனங்கள் தேனாம்பேட்டையிலிருந்து நந்தனம் வரை செல்வதற்கு எடுத்துக்கொண்ட சராசரி நேரத்தை, வேகத்தை கணக்கிட்டு உங்களுக்கான உத்தேச நேரத்தை கூகுள் மேப்ஸ் வழங்குகிறது.

மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில், நேரத்தில் பொதுவாக ஏற்படும் டிராபிக் குறித்த தரவையும் கணக்கில் எடுத்து கொள்வதாகவும் கூகுள் நிறுவனம் கூறுகிறது.

எனவே, கூகுள் மேப்ஸின் நிகழ்கால டிராபிக் சேவை செயல்படுவதற்கு உங்களை போன்ற ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியமானது!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :