பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டுமா?

  • 1 செப்டம்பர் 2018
பால் படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/AFP/GETTY IMAGES

ஐஸ்கிரீம், பன்னீர், பால்கோவா போன்ற பால் பொருட்களை ரசித்து உண்ணும் விருப்பம் உடையவரா நீங்கள்? ஆம் என்றால் பரிணாம வளர்ச்சிக்கு நன்றி சொல்லுங்கள்!

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான குழந்தைகள் பால் சர்க்கரையை (லாக்டோஸ்) ஜீரணிக்கும் லாக்டோஸ் நொதியை இயல்பாகவே பெற்றிருந்தனர். ஆனால் இணை உணவுகள் ஆரம்பித்தவுடன் இந்தத் தன்மை மெதுவாகக் குறைந்துவிடும். அதனுடன் பால் அருந்தும் பழக்கமும் குறையும்.

கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் வெவ்வெறு மக்கள், வட ஐரோப்பா, கிழக்கு ஆஃப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் கால்நடைகள் அல்லது ஒட்டகங்கள் வளர்ப்பது வழக்கத்திற்கு வந்தது.

இதன் விளைவாகவும் மற்றும் சில மரபணுக்களின் பயனாகவும், குழந்தை பருவத்திற்கு பிறகும், வாழ்க்கை முழுவதிலும் பால் மற்றும் பால் பொருட்களை ஜீரணிக்கும் திறனை சிலர் பெறத் தொடங்கினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

லாக்டோஸ் ஏற்புத்தன்மை இந்த மக்களுக்கு ஒரு தீர்க்கமான நன்மையை வழங்குகிறது என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த மானுடவியல் நிபுணர் ஹென்றி ஹர்பெண்டிங்.

இந்த பரிணாம வளர்ச்சிக்கு முன்பு வரை, பசு அல்லது ஒட்டகப் பாலில் இருந்த சர்க்கரையை அகற்றிய பின்பே மக்கள் அவற்றை அருந்தினர். இதன் மூலம் அதில் இருக்கும் 20 முதல் 50 சதவீதம் வரை கலோரிகள் நீக்கப்பட்டது.

ஆனால் பால் ஜீரணத் திறன் கொண்ட மனிதர்கள், சர்க்கரை நீக்கப்படாத பாலை உண்டு அந்த அதிகபட்ச கலோரிகள் மூலம் கிடைக்கும் கூடுதல் ஆற்றலை பெறமுடியும் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல, பால் ஜீரணத் திறன் கொண்டவர்கள், கடந்த காலங்களில் ஏற்பட்ட பஞ்சங்களை சிறந்த முறையில் எதிர்கொண்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்த பத்தாயிரம் ஆண்டுகளில் உலகம் முழுவதும், குறைந்தது நான்கு பிரதேசங்களில் மட்டுமே பால் ஜீரணத் திறன் காணப்பட்டது. இன்று 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு லாக்டோஸ் ஏற்புத்தன்மை ஓரளவிற்கு உள்ளது. மரபணு வகை மற்றும் மரபணுக்களின் பிரதிகளை சார்ந்தே லாக்டோஸ் ஏற்புத்தன்மை அமைந்திருக்கும்.

படத்தின் காப்புரிமை YOSHIKAZU TSUNO

உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்களால் பால் சர்க்கரையை (லாக்டோஸ்) முழுவதுமாக ஜீரணிக்கமுடிவதில்லை. அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல், ஏப்பம், அஜீரணக்கோளாறு போன்ற அறிகுறிகள் இயல்பாகவே காணப்படும்.

சிலருக்கு அதிலும் குறிப்பாக, ஆஃப்ரிக்கா அல்லது ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு லாக்டோஸ் ஜீரணத் திறன் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

நான்கில் மூன்று பங்கு இந்தியர்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளதாக சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிலைய நிபுணர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Jananani Tamizhvanan
Image caption ஜனனி தமிழ்வாணன்

பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பதே இதற்கான சரியான வழி என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். இது ஓரளவிற்கு உண்மை என்றாலும், முற்றிலுமாக சரியல்ல. இவர்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் விட்டமின் 'டி' தேவைகளைப் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதைத்தவிர சில உணவுப் பொருட்களில் நமக்கு தெரியாமலேயே பால் சேர்க்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள், சலாட்களில் உபயோகிக்கப்படும் அலங்கார சேர்வைகள், சாக்லெட் பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், ஸிரப்புகள் மற்றும் பொடிகளில் லாக்டோஸ் கலந்திருக்கலாம்.

எனவே லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் அந்த உணவுகளை உண்ணும்போது, அதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்த பிறகு சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

லாக்டோஸ் ஒவ்வாமை கொண்டவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்:

  • தற்போது புழக்கத்தில் இருக்கும் லாக்டோஸ் இல்லாத பாலை (lactose free milk) பயன்படுத்தலாம்.
  • சோயா பால், தேங்காய் பால், பாதாம் பால் போன்ற பிற பால் வகைகளை தேர்ந்தெடுக்கலாம்.
  • ராகி, ஆரஞ்சு, கீரை போன்ற கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

உங்களுக்கு லாக்டோஸ் ஏற்புத்திறன் இருக்கிறதா இல்லையா என்பதை, மரபணு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். இதைத்தவிர, ரத்தப் பரிசோதனை (lactose tolerance test), மல பரிசோதனை (stool acidity test) மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்கள் உடலின் தேவையறிந்து உணவை எடுத்துக் கொள்ளலாம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நாளொன்றுக்கு 60 லிட்டர் பால் தரும் பிரேசில் பசு - பின்னணியில் குஜராத் பசுக்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்தச் செய்தி குறித்து மேலும்