தென்னாப்பிரிக்கா: பாறையில் கிடைத்த 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்

  • 14 செப்டம்பர் 2018
படத்தின் காப்புரிமை Reuters

மனித குலத்தின் மிகப் பழமையான ஓவியத்தை தென்னாப்பிரிக்காவிலுள்ள மிகச் சிறிய பாறை துண்டின் மீது கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியமாக கருதப்படும் இது, ஒரு கல்லின் மீது குறுக்குக்கோடு போன்று சிவப்பு நிற களிமண் கலவையை கொண்டு வரையப்பட்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் தெற்கு கடலோர பகுதியிலுள்ள ப்லோம்போஸ் என்ற குகையில் கிட்டத்தட்ட ஹேஸ்டேக் (#) வடிவில் காணப்படும் அந்த ஓவியத்தின் சிறு துண்டை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு மனித குலத்தின் "நவீன அறிவாற்றலின் ஒரு பிரதான உதாரணம்" என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பழமையான ஓவியங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள ஓவியம்தான் ஆதிகால அருவ ஓவியம் என்று நேச்சர் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

பாறையின் மீது இந்த ஓவியத்தை வரைவதற்கு "களிமண்ணால் செய்யப்பட்ட நிறமியை வண்ணம் தீட்டும் கோல்" கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூமியில் இயற்கையாக காணப்படும் ஒச்ரே என்னும் களிமண் நிறமியை சுமார் 2,85,000 ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஓவியம் "மிகவும் சிக்கலானதாக" இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஹென்ஷில்வுட் கூறினார்.

"கண்டெடுக்கப்பட்ட கல்லின் மீதுள்ள குறுக்குக்கோடுகள் ஒழுங்கன்றி முடிவடைவது இந்த ஓவியத்தின் பரப்பு மிகப் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த தொல்பொருள் ஆராய்ச்சி குழுவின் தலைவரான கிறிஸ்டோபர், நார்வே மற்றும் தென்னாப்பிரிக்காவிலுள்ள பல்கலைக்கழங்களில் பணிபுரிந்து வருகிறார்.

ராய்ட்டர்ஸிடம் பேசிய விஞ்ஞானிகள், இந்த ஓவியத்தை "கலை என்று அழைக்கவே தயங்குவதாகவும்", ஆனால் "ஏதோ ஓர் அர்த்தத்துடனே இதை உருவாக்கியிருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ப்லோம்போஸ் குகையில் சிவப்பு நிற களிமண்ணால் சுற்றப்பட்ட மணிகள், செதுக்கப்பட்ட களிமண் துண்டுகள் ஆகியனவும், 1,00,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாயம் தயாரிக்கும் தொகுப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

அறிவியலில் ஹோமோசெபியன்ஸ் என்றழைக்கப்படும் தற்கால மனிதர்கள், தற்போதைய ஆஃப்பிரிக்காவில் 3,15,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கூறப்படுகிறது.


நைஜீரியாவின் மழை மனிதர்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :