சுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா?

தயிர் (யோகட்) வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றை உண்பவர்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவைதான் உண்டு வருவதாக பொது மக்கள் எண்ணிவிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டன் சந்தைகளில் விற்கப்படும் 900 தயிர் (யோகட்) வகைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது.

ஆர்கானிக் தயிர் வகைகள் கூட அதிக சர்க்கரையுள்ள வகைகள் என்பதை இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய லீட்ஸ் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.

இயற்கையான மற்றும் கிரேக்க பாணி தயிர் வகைகளை மட்டுமே சர்க்கரை அளவு குறைந்தவை என்று கூறலாம் என பிஎம்ஜே ஓபன் சஞ்சிகை தெரிவிக்கிறது.

பொது மக்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

சர்க்கரையை குறைப்பதில் முன்னேற்றம் காண வேண்டும் என இங்கிலாந்து சுகாதாரத்துறை விரும்புகின்ற உணவு வகைகளில் ஒன்று தயிர் ஆகும்.

உணவு வகைகளில் சர்க்கரை குறைப்பு நடவடிக்கையை அரசு தொடங்கிய சில நாள்களில் இந்த ஆய்வு தொடங்கியது.

தயிரைக் கொண்டு தயாரித்த இனிப்புப் பண்டங்களில் அதிகபட்ச சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது. 100 கிராம் தயிர் இனிப்பு வகையில் சராசரியாக 16.4 கிராம் சர்க்கரை உள்ளது.

அடுத்ததாக, அதிக சர்க்கரை இருந்த தயாரிப்பு பொருள் ஆர்கானிக் தயிர் (யோகட்). 100 கிராம் ஆர்கானிக் தயிரில் 13.1 கிராம் சர்க்கரை உள்ளது.

படத்தின் காப்புரிமை Joe Raedle/Getty Images

குழந்தைகளுக்கான தயிர் வகைகளில் 100 கிராமுக்கு இரண்டு சர்க்கரை துண்டுகளுக்கு சமமான 10.8 கிராம் சர்க்கரை உள்ளது.

நான்கு முதல் ஆறு வரையான குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராமுக்கு மேலாக அல்லது 5 சர்க்கரை கட்டிகளுக்கு மேல் பயன்படுத்த கூடாது என்று தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.

ஏழு முதல் பத்து வயது வரையான குழந்தைகள் தினமும் 24 கிராமுக்கு குறைவாகத்தான் சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

100 கிராமுக்கு 5 கிராம் சர்க்கரை இருந்தால் மட்டுமே குறைவான சர்க்கரை உள்ளது என்று ஒரு பொருள் வகைப்படுத்தப்படும்.

படத்தின் காப்புரிமை Bryan Chan/Los Angeles Times via Getty Image

தயிர் வகைகளில் இருக்கும் சர்க்கரை அளவு

டெசர்ட் (இனிப்பு)தயிர் - 100 கிராமில் 16.4 கி. சர்க்கரை

ஆர்கானிக் தயிர் - 100 கிராமில் 13.1 கி. சர்க்கரை

சுவையூட்டப்பட்ட தயிர் - 100 கிராமில் 12 கி. சர்க்கரை

பழத்தயிர் - 100 கிராமில் 11.9 கி. சர்க்கரை

குழந்தைகளுக்கான தயிர் - 100 கிராமில் 10.8 கி. சர்க்கரை

பால் மாற்றுப்பொருட்கள் - 100 கிராமில் 9.2 கி. சர்க்கரை

தயிர் பானங்கள் - 100 கிராமில் 9.1 கி. சர்க்கரை

இயற்கை மற்றும் கிரேக்க பாணி தயிர் - 100 கிராமில் 5 கி. சர்க்கரை

இந்த ஆய்வுக்கான கள ஆய்வு 2016ம் ஆண்டு முடிவில் நடத்தப்பட்டதால், தயிர் சாப்பிடுவதால் அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வதை குறைக்கும் நடவடிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

தயிர் மூலம் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவு முதலாண்டில் 6 சதவீதம் குறைந்துள்ளதை கடந்த மே மாதம் வெளியான அறிக்கை காட்டுகிறது. 5 சதவீதம் என்று இலக்கு வைக்கப்பட்டதைவிட அதிகமாக சர்க்கரை அளவு குறைந்திருக்கும் உணவு வகையாக தயிர் உள்ளது.

படத்தின் காப்புரிமை NIKOLAY DOYCHINOV/AFP/Getty Images

இது நேர்மறை நடவடிக்கைகளை காட்டுவதாக இங்கிலாந்து பொது சுகாதார தலைமை உணவியல் வல்லுநர் டாக்டர் அலிசன் டெட்ஸ்டோன் கூறியுள்ளார்.

இந்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டாலும், தயிர் வகைகள் இன்னும் குறைவான சர்க்கரை அளவு கொண்டதாக இல்லை என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டாக்டர் பெர்னொடெட் மூர் கூறுகிறார்.

பெற்றோர் உள்பட அனைவரும், தயிர் வகைகளில் இவ்வளவு சர்க்கரை இருக்கிறதா என்பதை அறிய வரும்போது ஆச்சரியமடைவர்" என்று அவர் கூறியுள்ளார்.

"இயற்கையான தயிரை வாங்கி உங்களுடைய பழத்தில் சேர்த்து சாப்பிடுங்கள் என்பதே எனது அறிவுரை" என்கிறார் மூர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்