ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா?

பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

`வியூ அஸ்` (view as) எனும் அம்சத்தின் மூலம் ஹாக்கர்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடிவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் திருட்டு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் லாக்கின் (log in) செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பயனாளிகளின் கணக்குகள் மீட்டமைக்கப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்படாத 40 மில்லியன் பயனாளர்களின் கணக்குகளும் மீட்டமைக்கப்பட்டதாகவும் ஃபேஸ்புக்கின் தயாரிப்பு நிர்வாக பிரிவின் துணைத்தலைவர் கை ரோசன் தெரிவித்துள்ளார்.

இதனால் வெள்ளியன்று ஃபேஸ்புக்கின் பங்குகள் 3 சதவீதம் வரை குறைந்தன.

ஃபேஸ்புக் கணக்கை மூலமாக கொண்டு பயன்பாட்டாளர்கள் புகுபதிகை (Sign In) செய்துள்ள ஏர்பின்பி மற்றும் டிண்டர் ஆகிய பிற சில முக்கிய தளங்களிலும் ஹாக்கர்கள் இதன்மூலம் ஊடுருவியிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

யாரெல்லாம் இதில் பாதிக்கப்பட்டனர்?

உலகின் எந்த பகுதியில் இந்த 50 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கவில்லை, இருந்த போதிலும் அயர்லாந்து தகவல் கட்டுப்பாட்டாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மீண்டும் லாக்கின் செய்ய வலியுறுத்தப்பட்ட பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச்சொற்களை மாற்ற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதால், இந்த கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறேதும் தகவல்கள் எடுக்கப்பட்டதா என்று கண்டறியவுள்ளோம். மேலும் இந்த தாக்குதலுக்கு யார் காரணம், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியவரவில்லை" என ரோசன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"பயன்பாட்டாளர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியம்; இந்த தகவல் திருட்டு குறித்து மிகவும் வருத்தம் அடைகிறோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 50 மில்லியன் பயன்பாட்டாளர்களில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பக் மற்றும் அதன் தலைமை இயக்க அதிகாரி சாண்ட்பெர்க் ஆகியோரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

`வியூ அஸ்` (view as) என்றால் என்ன?

தங்களது கணக்கில் உள்ள தகவல்கள் பிற பயன்பட்டாளர்களுக்கு எவ்வாறு காட்சியளிக்கிறது என்பதைக் காட்டும் அம்சம் தான் ஃபேஸ்புக்கின் `வியூ அஸ்`.

ஃபேஸ்புக்கில் ஒருமுறை நுழைந்தவுடன் மீண்டும் மறுமுறை கடவுச்சொல்லை பொருத்தி நுழையத் தேவையில்லை, இது `ஆக்சஸ் டோகன்` எனப்படும் அம்சத்தால் சாத்தியமாகிறது. ஹாக்கர்கள் இந்த ஆக்சஸ் டோகன்ஸை திருடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலில் ஃபேஸ்புக்

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் பாதுகாப்பு குறித்து ஃபேஸ்புக் நிரூபிக்க வேண்டிய சூழலில் உள்ளது இம்மாதிரியான தகவல் திருட்டு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தீய எண்ணம் கொண்டவர்களால் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாவதாகவும், ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பை தீவிரமான ஒரு விஷயமாக கருதுவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டபோது, தகவல்கள் திருட்டு குறித்தும், இதற்கு நிறுவனத்தில் யாரேனும் பொறுப்பாளர்களா என்றும் பதிலளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்