பெண் விலங்குகளிடம் தலைமைப் பண்பைக் கற்றுக்கொள்வது எப்படி?

female leadership

கழுதைப் புலி, யானைகள், சிங்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக இருக்கும்.

உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5000க்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுபவை என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

பெண்களைத் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர மனிதர்கள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இருக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்கள்.

பிரிட்டனில் உள்ள மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனிஃபர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் மூவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் ஓர்கா வகைத் திமிங்கலங்கள், கழுதைப்புலிகள், புள்ளிக் கழுதைப் புலிகள், சிங்கங்கள், யானைகள், பொனோபோ வகை மனிதக் குரங்குகள், லெமூர்கள் ஆகியவற்றுக்கு பெண்களே தலைமைப் பொறுப்பில் தெரியவந்துள்ளது.

தலைமைத்துவத்துக்கான குணாதிசியங்களை வெளிக்காட்டும் விலங்குகளில், சமூக வாழ்க்கை வாழும் 76 விலங்குகளின் வாழ்க்கைமுறையை இந்தக் குழுவினர் கண்காணித்தனர். அந்த விலங்குகளின் இடப்பெயர்வு, இரை தேடும் முறை, மோதல்கள் உண்டாகும்போது தீர்வு காணுதல் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.

அந்த விலங்குகளுக்கு தலைமை தாங்கும் பெண் விலங்குகளின் நடத்தைகள் குறித்து ஆய்வு செய்தனர் இந்தக் ஸ்மித் தலைமையிலான குழுவினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்த விலங்குகள் சமூகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது," என்கிறார் ஸ்மித்.

தலைமை தாங்குதல் மற்றும் அடக்கி ஆளுதல் ஆகியவற்றை குழப்பிக்கொள்ளக் கூடாது. "ஒரு பிரச்சனைக்கு கூட்டு முயற்சியின் மூலம் தீர்வு காண வழிநடத்திச் செல்லுதலே தலைமை தாங்குதல்," என்கிறார் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வி.யு பல்கலைக்கழத்தில் உளவியல் பேராசிரியர் மார்க் வான் வுட்.

உணவு தேடுதல், வேட்டை விலங்குளை தவிர்த்தல், விலங்குகளுக்கு இடையே நிலவும் பிரச்சனைகளைத் தீர்த்தல் ஆகியன தலைமை பண்புக்கான உதாரணங்கள். அடக்கி ஆண்டு மேலாதிக்கம் செலுத்துதல் என்பது ஒரே குழுவுக்கும் இருக்கும் விலங்குகளின் இடையே மோதல் உண்டாகும்போது நிகழ்வது.

வெற்றிகரமான தலைவர்களுக்கு அவர்களை விரும்பி பின்பற்றும் தொண்டர்கள் இருப்பார்கள். அந்தத் தொண்டர்களைத் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகளை நம்ப வைக்க சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

சரி. பெண் விலங்குகளிடம் தலைமைப் பண்பு குறித்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

பொனோபோ குரங்குகள்

மனிதர்களின் டி.என்.ஏ-வின் 99% நமக்கு நெருக்கமான சிம்பன்சி மற்றும் பொனோபோ வகை மனிதக் குரங்குகளைப் போலவே இருக்கும். சிம்பன்சி குரங்கில் ஆண்கள் தலைமையில் இருந்தாலும் பொனோபோ குரங்குக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது பெண் குரங்குகள்தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

இடப் பெயர்வுக்கான திட்டங்களைத் தீட்டுவதும், உணவுகளை முதலில் உண்டு பரிசோதிப்பதும் பெண் பொனோபோ குரங்குகள்தான் என்கிறார் காங்கோ ஜனநாயகக் குடியரசில் இந்தக் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்த கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டகேஷி ஃபுரூச்சி.

"பொனோபோ குரங்குகளுக்குள் சண்டை வரும்போது தலையிட்டு சமரசம் செய்யும் பணியை பெண் குரங்குகளே செய்கின்றன. ஆண் குரங்குகளுடன் தனியாக மோதும்போது தோல்வியைச் சந்தித்தாலும், ஒன்றுக்கும் மேலான பெண் குரங்குகள் ஒன்றாக இணைந்து ஆணை எதிர்கொண்டு, இவை வெற்றியைச் சுவைக்கின்றன," என்கிறார் டகேஷி.

பெண்கள் குழுவின் தலைமையாக இருக்கும் பொனோபோ குரங்குகள், வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் பாலுறவு கொள்கின்றன. இது சண்டையைக் குறைக்க உதவுகிறது.

யானைகள் மற்றும் ஓர்கா திமிங்கலங்கள்

யானைகள் மற்றும் ஓர்கா திமிங்கலங்களின் சமூகத்தில் வயது முதிர்ந்த பெண் தலைமைப் பொறுப்பில் இருக்கும். ஓர்கா திமிங்கலங்களின் 'பாட்டிகள்' இரை இருக்கும் இடத்தை நோக்கி தனது குழுவை அழைத்துச் செல்லும்.

படத்தின் காப்புரிமை Getty Images

"வளங்கள் குறைவாக இருக்கும் சமயத்தில் சிறப்பான நினைவாற்றல் உள்ள யானைகளின் திறன் உதவும். வறட்சியான காலங்களில் தனது குழுவை நீர்நிலையை நோக்கி அழைத்துச் செல்லும் பணியை தலைமைப் பெண் யானை மேற்கொள்ளும்," என்கிறார் கென்யாவில் உள்ள யானைகள் ஆய்வாளர் விக்கி ஃபிஷ்லோக்.

மனிதர்கள் தந்தைவழிச் சமூகத்தைப் பின்பற்றி வாழ்வதைப்போல யானைகள் தாய்வழிச் சமூகத்தைப் பின்பற்றி வாழ்கின்றன. ஆண்கள் வயதுக்கு வந்ததும் தனியாக வாழச் சென்றுவிடுவதால், பெண் யானைகளுக்கு ஆண் யானைகளுடன் பதவிச் சண்டை நடக்காது என்கிறார் 1970கள் முதல் யானைகளை ஆராய்ச்சி செய்து வரும் சிந்தியா மோஸ்.கென்யாவிலுள்ள ஆம்போசெலி யானைகள் அறக்கட்டளையின் இயக்குநர் இவர்.

கழுதைப் புலிகள்

கழுதைப் புலிகள் வேட்டையின்போது ஆண்கள்தான் முன்னின்று தாக்கும். ஆனால் வேட்டையைக் கட்டுப்படுத்துவது பெண் கழுதைப் புலிகள்தான்.

தங்கள் குழு எங்கு வேட்டையாட வேண்டும் என்று வழிநடத்திச் செல்வது பெண் கழுதைப் புலிகளே ஆண் கழுதைப் புலிகளை விடவும் உடல் வலிமை மிக்கவையாக இருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

குட்டியிட்டு பாலூட்டும் பெண் கழுதைப் புலிகளே குட்டிகள் மற்றும் இளம் ஆண் விலங்குகளை வேட்டைக்கு அழைத்துச் செல்லும்.

குழுக்களுக்கு இடையே எல்லை மோதல் உண்டாகும் சமயங்களிலும் பெண் கழுதைப் புலிகளே மோதலின் முன்னின்று தாக்கி தங்கள் எல்லையை காக்கும்.

பெண் கழுதைப் புலிகள் ஒன்றுக்கு ஒன்று அவற்றின் உடலிலுள்ள அந்தரங்க பிரதேசத்தை நுகர்ந்து பார்த்தால் அது கட்டியணைத்துக் கொள்வதை போல என்கிறார் ஸ்மித். இவ்வாறு நம்பகத்தன்மை வாய்ந்த பிற பெண் விலங்குகளுடன் நட்பை உண்டாக்கிக்கொண்ட பின் தாக்குதலில் ஒன்றாக ஈடுபடும்.

கற்றுக்கொள்ள என்ன உள்ளது?

தலைமைப்பொறுப்பில் இருக்கும் பெண் விலங்குகளிடம் முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டியது உங்களின் சமூகக் குழுக்களில் இருப்பவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது. அதற்கான திறன் அனுபவம் மற்றும் வயது அதிகரிக்கும்போது மேலும் அதிகரிக்கும்.

பெண் விலங்குகள் கூட்டாக இணைந்து செயல்படும்போதுதான் பெண் தலைமை உருவாகிறது என்பது விலங்குகளை கண்காணிக்கும் புலனாகிறது.

இதற்கு தங்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளான பெண்கள் #MeToo இயக்கம் மூலம் தாங்கள் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்தி உலக அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியதை ஸ்மித் உதாரணமாகக் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

உலகெங்கும் உள்ள பெண்கள் சமூக வலைத்தளங்களில் கூட்டாக செயல்பட்டது ஏற்கனவே இருக்கும் சமூக நியதிகளை கேள்விக்கு உள்ளாகியது. பொனோபோ குரங்குகள், கழுதைப் புலிகள் ஆகியவற்றில் பெண் விலங்குகள் இணைத்து செயல்பட்டதை போலவே இதுவும் என்கிறார் ஸ்மித்.

காட்டில் வாழும் விலங்குகளுடன் நாகரிக சமூகத்தில் வாழும் பெண்களை ஒப்பிட்டுக் கூறுவது முறையா எனும் கேள்விக்கு பதில் அளிக்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழத்தில் கூட்டு நடத்தை மற்றும் தலைமைப் பண்பு குறித்து ஆய்வு செய்யும் கிறிஸ்டோஸ் லொன்னோ. "இது சர்சைக்குரியது. மனித சமூகம் பல சிக்கலான பிணைப்புகளைக் கொண்டது. இங்குள்ள சமூக அடுக்குகள் வேறு. இந்த ஒப்பீடு கடினமானது."

உள்ளார்ந்த பொருள்

ஆனால் தங்கள் தரப்புக்காக ஜெனிஃபர் ஸ்மித்தின் குழு வாதிடுகிறது. அரசாங்கம், தொழில் நிறுவனங்கள், ராணுவம் ஆகிய பெரிய குழுக்களுடன் மட்டுமே தலைமைப் பண்பு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதாகவும், குடும்பங்கள் மற்றும் சிறு குழுக்களில் பெண்கள் ஆற்றும் பங்கு கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் ஸ்மித் குழுவினர் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆண்கள் மேலாதிக்கம் செலுத்தும் விலங்குகளில் கூட பெண் விலங்குகளின் தலைமை பண்புகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்கிறார் ஸ்மித்.

நமது உயிரியல் பாரம்பரியமும் பெண்களை தலைமைப் பொறுப்புகளில் குறைவாக இருப்பதற்கான ஒரு காரணமாக உள்ளது. கலாசாரம் இன்னொரு காரணம்.

நமது சமூகச் சூழலை மாற்றியமைக்கும் கலாசார புதுமைகளை வரவேற்பதில் மனிதர்கள் திறன் வாய்ந்தவர்கள் என்று கூறும் ஸ்மித் குழுவினர் வரும் காலங்களில் பெண்கள் அதிக அளவில் தலைமை பொறுப்புக்கு வர வழிவகுக்கும் என்கின்றனர்.

இந்த ஆய்வில் வலுவான ஆதாரங்களை விடவும் ஆக்கபூர்வமான கருத்துகளே கிடைத்துள்ளதால், தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்கும் ஆய்வுகளை முன்னெடுக்க ஸ்மித் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்