பூச்சிகளை அழிக்காமல் நேசியுங்கள்: சொல்கிறார் ‘பூச்சிகளின் காதலன்’ வெங்கட்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
பூச்சிகளை அழிக்காதீர்கள்; நேசியுங்கள்

பட மூலாதாரம், VENKAT

கரப்பான்பூச்சியில் தொடங்கி காண்டாமிருக வண்டுகள் வரை பல விதமான பூச்சிகளை கடந்த முப்பது ஆண்டுகளாக புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த பூச்சி வெங்கட்.

பூச்சிகள் இருந்தால்தான் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான உணவு கிடைக்கும் என பூச்சிகளின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நுட்பமாக புகைப்படங்களை எடுத்துவருகிறார் பூச்சிவெங்கட்.

நன்மை செய்யும் பூச்சிகள், தீமை விளைவிக்கும் பூச்சிகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆனால், பொதுப்புத்தியில் பூச்சிகள் என்றால் அருவருப்பானவை என்றும், அவற்றால் நோய் தொற்று ஏற்படும் என்ற சிந்தனை இருப்பதால், நன்மை செய்யும் பூச்சிகளையும் நாம் அழிக்கிறோம் என்கிறார் வெங்கட்.

பட மூலாதாரம், VENKAT

புலிகளுக்கு பூச்சிகள் தேவை

இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள், தன்னார்வலர்கள் என பலரும் புலி,சிங்கம்,யானை,மயில், என பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்கள்.

வனவிலங்குகளை பாதுகாக்க அரசும் நிதி அளிக்கிறது. உண்மையில், பூச்சிகள் இருந்தால்தான், அவற்றில் இருந்து தொடங்கும் உணவுச் சங்கிலி மூலம் பெரிய விலங்குகளின் பசிதீரும்,'' என்கிறார் வெங்கட்.

''நம்மில் பலரும் பூச்சிகள் என்றால் அச்சத்துடன், உடனே அதை விரட்டவேண்டும் என்று நினைக்கிறோம். சிலர் அடித்து கொல்கிறார்கள்.

பட மூலாதாரம், VENKAT

இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் பிறப்பதற்கும், இறப்பதற்கும் இயற்கை ஒரு காரணத்தை வைத்துள்ளது.

டைனோசர் காலத்தில் இருந்து ஜீவித்த உயிர்கள்தான் பூச்சிகள். மனித இனம் மறைந்துவிட்டாலும் கூட இந்த உலகில் தன்னை தக்கவைத்துக்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் பெற்றவை பூச்சிகள்'' என்றார் வெங்கட்..

''ஒரு வண்டு இருப்பதால்தான் நமக்கு கனிகள் கிடைக்கின்றன. பூக்களில் மகரந்த சேர்க்கையை வண்டுகள் நிகழ்த்துவதால்தான் பல விதமான செடி,கொடிகள் வளர்ந்து வனம் செழிக்கிறது.''

''தாவரஉண்ணிகள் செழித்தால்தான், பெரிய விலங்குகளுக்கு உணவு கிடைக்கும். வண்டுகள் சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்பதற்கு சான்றுகள் உள்ளன,''என பொதுவாக பலருக்கும் தெரிந்த பூச்சிகளின் சிறப்புகளை வெங்கட் விளக்க தொடங்கினார்.

பட மூலாதாரம், VENKAT

கடவுளாக பார்க்கப்படும் பூச்சிகள்

திடீரென திசைகளை மாற்றிக்கொண்டு பறக்கும் தட்டான்பூச்சிகளைப் பற்றி பேசிய வெங்கட், அந்த பூச்சியிடம் இருந்து விமான பொறியாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன என்கிறார்.

''தட்டான்பூச்சிகளில் கிட்டத்தட்ட 3,000 இனங்கள் இருக்கும். தட்டான்கள் பெரும்பாலும் வெப்பநாடுகளில் காணப்படும். தட்டான் வகையில் கடல் கடந்தும் இடம் பெயரும் பூச்சிகளும் உள்ளன.

ஜப்பானில் பருவநிலை குறியீடாக பார்க்கப்படும் தட்டான்பூச்சி, இலையுதிர் காலத்துடன் தொடர்புடையது என்ற கருத்து உள்ளது.

கூட்டமாக தட்டான்கள் பறந்தால், மழை வரும் என்ற நம்பிக்கை நம் ஊர்களிலும் உள்ளது,''என்கிறார் வெங்கட்.

பட மூலாதாரம், VENKAT

வெட்டுக்கிளி என்று அறியப்படும் இடையன்பூச்சிகள் பற்றி பேசும்போது வெங்கட் நெகிழ்ந்து போகிறார்.

''ஆறு மாதங்கள் உயிர்வாழும் இடையன்பூச்சி உயிருடன் இருக்கும் இரையை உண்ணும். சீனதற்காப்பு கலையான குங்ஃபூவில் இடையன்பூச்சியை அடிப்படையாகக் கொண்டு சண்டையிடும் உத்திகள் உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் இடைபூச்சியை கடவுளாக கும்பிடுகிறார்கள். வனப்பகுதியில் மாட்டிக்கொண்டு உணவு இல்லாத சமயத்தில் இடையன்பூச்சியை எந்தவித பயமும் இல்லாமல் நீங்கள் உண்ணலாம்,''என சிரிக்கிறார்.

பறவைகள்,வௌவால்கள்,தவளைகள்,பல்லிகள்,சிலந்திகள் என அனைத்தும் ஈக்களை விரும்பி சாப்பிடும். வீட்டு ஈக்கள் அழுகும் கரிமப் பொருட்கள் மக்குவதற்கு உதவும் துப்புரவாளர்கள் என்றே கூறவேண்டும். மருத்துவதுறையில் ஈ முட்டைப்புழு காயத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது என்கிறார் வெங்கட்.

பூச்சி வெங்கட் ஆனது எப்படி?

பட மூலாதாரம், VENKAT

படக்குறிப்பு,

பூச்சி வெங்கட்

விலங்கியல் துறையை பாடமாக படிக்காவிட்டாலும், தனது வேலையின் காரணமாக இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேடி படித்து,புகைப்படங்கள் எடுத்து பூச்சிகள் தொடர்பாக விரிவாக தெரிந்துகொண்டுள்ள வெங்கட் தனது பெயரே பூச்சி வெங்கட் என்று ஆன கதையை பகிர்ந்துகொண்டார்.

1990களின் ஆரம்பத்தில் சென்னையில் ஒரு அறிவியல் ஆய்வாளர்கள் குழுவுக்கு பூச்சிகளின் மாதிரிகளை புகைப்படம் எடுத்துக்கொடுக்க இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெங்கட் எடுத்த படங்கள் நேர்த்தியாக இருந்ததால், தங்களது ஆராய்ச்சிக்கு தேவையான பூச்சி மாதிரிகளை படம் எடுத்துக்கொடுக்கும் பணிகளை தொடர்ந்து வெங்கட்டிடம் கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, தன் வீட்டில் உள்ள பூச்சிகளை படமெடுப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பூச்சிகள் உலகத்திற்குள் பயணிக்கத் தொடங்கிய வெங்கட் பூச்சி ஆர்வலராக மாறிவிட்டார்.

பட மூலாதாரம், VENKAT

''கிண்டி பூங்காவில் உள்ள பூச்சிகளை படம் எடுப்பதற்காக சுமார் ஒரு மாத காலம் அங்கு தொடர்ந்து செல்லவேண்டியிருந்தது. நானும் எனது நண்பர்களும் தினமும் காலை ஆறு மணிக்கு செல்வோம். தூக்கத்தில் இருக்கும் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் சாவி எடுத்துவர உதவியாளர் ஒருவரிடம் பூச்சியை படம் எடுக்கும் வெங்கட் வந்திருக்கிறார் என்று சொல்லத்தொடங்கி, ஒரு கட்டத்தில் பூச்சி வெங்கட் வந்திருக்கிறார் என்று சொல்லிவந்தார். இந்த பெயர் என் நண்பர்கள் வட்டத்திலும் பிரபலமாகிவிடவே, இந்த பெயரையே பயன்படுத்த தொடங்கிவிட்டேன்,''என்று விவரித்தார்.

''பூச்சிகளை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்''

தற்போது இயற்கை மன்றங்கள், சந்திப்புகள், குடியிருப்போர் நலசங்கங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பூச்சிகளின் தேவையை வலியுறுத்தி பேசிவருகிறார். வண்ணமயமான பூச்சிகளின் படங்களை கண்காட்சியாக வைக்கிறார். பூச்சிகளின் அழகான தோற்றத்தை டிஜிட்டல் ஓவியங்களாக வரைந்து இணையத்தில் விற்கிறார்.

பட மூலாதாரம், VENKAT

''பூச்சிகள் அழகானவை என்று உணர்த்தவிரும்புகிறேன். ஒரு மயில் அல்லது புலியின் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ள விரும்பும் நாம் அழகான பூச்சிகளும் இயற்கையின் ஒரு அங்கம்தான் என்று புரிந்துகொண்டு அவற்றின் அழகை போற்றவேண்டும். தற்போது என்னுடைய படங்களை வாங்கிய பலரும் என்னிடம் பூச்சிகள் குறித்த விவரங்களை ஆர்வமாக கேட்டுத்தெரிந்துகொண்டு அவர்களும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. பல பள்ளிக் குழந்தைகள் நன்மை செய்யும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை வாழவிடவேண்டும் , துரத்தக்கூடாது என பெற்றோர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள் என்று தெரியவரும்போது கிடைக்கும் நிம்மதிக்கு இணை வேறு எதுவுமில்லை,''என உணர்ச்சிபூர்வமாக விளக்குகிறார் பூச்சி பிரியர் வெங்கட்.

பட மூலாதாரம், VENKAT

பூச்சிகளை அனைவரும் நேசிக்கவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வெங்கட், பல சுவாரசியமான மற்றும் அபாயமான அனுபவங்களை கடந்துவந்துள்ளார்.

பூச்சிகளால் அனுபவித்த சிறைவாசம்

படம் எடுக்கும் சமயங்களில் பூச்சிகளால் காயமடைந்த நிகழ்வுகளும் வெங்கட் வாழ்வில் நடந்துள்ளன. அதனையும் தனக்கு சாதகமாகவே பார்க்கிறார். ''ஒரு வாரம் டாப் ஸ்லிப் பகுதியில் படம் எடுக்கச் சென்ற எனக்கு அற்புதமான படங்கள் கிடைத்தன. அதைவிட வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் கிடைத்தது.

வனப்பகுதியில் இருந்து சென்னை திரும்பிய எனக்கு உடல் முழுவதும் சிறு கொப்புளங்கள் தோன்றின. அந்த கொப்புளங்கள் உடைந்து வெளியாகும் நீர் தோலில் பட்டால் புதிய கொப்புளங்கள் ஏற்பட்டன. நான் வீட்டில் உள்ளவர்களை தொடமுடியாதவாறு கொப்புளங்கள் என்னுடலில் பரவத் தொடங்கின.''

''மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதற்காக ஒரு அறையில் என்னை நானே சிறைவைத்துக்கொண்டேன். பல மருத்துவர்கள் சோதித்தபோதும் இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் என்ன விதமான சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சொல்லமுடியவில்லை என்று கைவிரித்துவிட்டனர்.

பட மூலாதாரம், VENKAT

ஒரு முறை பயன்படுத்திய துணியை மீண்டும் பயன்படுத்த முடியவில்லை. கிருமி பரவுகிறது என்பதை மட்டும் கணிக்கமுடிந்தது. தினமும் உடுத்தும் ஆடையை தீயிட்டு கொளுத்தவேண்டியிருந்தது,''என்று நினைவு கூர்ந்தார்.

''இறுதியாக என்னை சோதித்த ஒரு முதிய மருத்துவர் ஒருவர், டாப் ஸ்லிப் பகுதியில் கடித்த ஒரு பூச்சியின் வைரஸ் என் உடலில் பரவியுள்ளது என்றும் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் குணமாக ஒரு மாதம் தேவை என்றார்.''

''மருத்துவமனைக்குச் செல்ல என்னை ஒரு பிளாஸ்டிக் கவரால் சுற்றிக்கொண்டு காரில் பேப்பர்களை விரித்து எதிலும் கொப்புளங்களின் நீர் படாதவாறு செல்லவேண்டியிருந்தது. ஒரு மாதம் நான் அனுபவித்த சிக்கல்கள் ஏராளம். ஆனால் குணமடைந்த பிறகு, என் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருந்தது. அன்றில் இருந்து மற்ற எந்த பூச்சிகள் கடித்தாலும், எனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதில்லை. எந்த பயமும் இல்லாமல் என் வேலையை செய்யமுடிகிறது,''என இயல்பாய் பேசுகிறார் பூச்சி வெங்கட்.

பட மூலாதாரம், VENKAT

வெங்கட் எடுத்த படங்களை கலம்க்ரியா நிறுவனம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. பூசிக்கள் -இயற்கையின் பாதுகாவலர்கள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில்,13 வகையான பூச்சிகளின் வாழ்வியல் குறித்து விரிவாக எழுதியுள்ளார். தற்போது தனது இரண்டாவது புத்தகத்திற்காக பயணிக்க தொடங்கியுள்ளார் இந்த பூச்சிகளின் காதலன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :