11,943 செயற்கைக்கோள்கள்; அதிவேக இணையம் - எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்

எலான் மஸ்க் படத்தின் காப்புரிமை KEVORK DJANSEZIAN
Image caption எலான் மஸ்க்

கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது இந்த கட்டுரை.

அதிவேக இணையதள சேவைக்காக 11,943 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது ஸ்பேஸ்எக்ஸ்

உலகம் முழுவதும் எவ்வித வேறுபாடுமின்றி அதிவேக இணையதளத்தை வழங்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டத்தின் மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி, தொலைத்தொடர்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, உலகின் அனைத்து பகுதிகளிலும் சீரான அதிவேக இணையதள சேவையை வழங்கும் 'ஸ்டார்லிங்க்' என்னும் மிகப் பெரிய திட்டத்தை அந்நிறுவனம் செயற்படுத்தி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதாவது, இந்த திட்டத்தின்படி, சுமார் 11,943 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு நிரந்தரமாக நிலைநிறுத்தப்படும். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள்கள் பூமியின் அனைத்து பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும். இதற்கான முதற்கட்டமாக 4,425 செயற்கைக்கோள்களை விண்ணில் செல்லுவதற்குரிய அனுமதியை அமெரிக்காவின் தொலைத்தொடர்பு அமைப்பான எஃப்.சி.சியிடம் பெற்றிருந்த ஸ்பேஸ்எக்ஸ் இதுவரை டின்டின் ஏ, பி என்னும் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு தேவையான மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அனுமதி கேட்டு அந்நிறுவனம் எஃப்.சி.சியிடம் முன்வைத்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தனது திட்டத்திற்கு தேவையான 11,943 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான மொத்த அனுமதியும் அந்நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

முதலில் அனுமதி பெறப்பட்ட 4,425 செயற்கைக்கோள்கள் பூமியின் மேற்பரப்பில் சுமார் 1,110 கிலோமீட்டர் முதல் 1,325 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 7,518 செயற்கைக்கோள்கள் 335 முதல் 346 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரத்தில் பறக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்டார்லிங்க்' திட்டத்தில் பாரம்பரிய ரேடியோ அலைகளுக்கு பதிலாக லேசர் அலைகள் பயன்படுத்தப்படுவதால், ஒரு நொடிக்கு பல ஜிபி வேகத்தில் இணையதள சேவை பெற முடியுமென்று கருதப்படுகிறது.

மூன்று பின்பக்க கேமராக்கள், இரண்டு பேட்டரிகளுடன் வருகிறது புதிய திறன்பேசி

பிரபல திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான ஓப்போ மூன்று முன்பக்க கேமராக்கள், இரண்டு பேட்டரிகளுடன் கூடிய திறன்பேசியை வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான ஓப்போ, இந்தியாவின் திறன்பேசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. பெரும்பாலும், விலைகுறைந்த, மத்திய விலை கொண்ட திறன்பேசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படும் ஓப்போ, சமீப காலமாக விலையுயர்ந்த திறன்பேசிகள் சந்தையிலும் காலூன்றி வருகிறது.

படத்தின் காப்புரிமை Twitter

அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் சீனாவில் வெளியிட்டு குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்ற ஆர்17 ப்ரோ என்ற திறன்பேசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

6.4 இன்ச் அளவுடைய, கொரில்லா 6 வகை திரையை கொண்ட இந்த திறன்பேசியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமே அதன் கேமராக்களும், பேட்டரிகளும்தாம். ஆம், புதுமையான முயற்சியாக இந்த திறன்பேசியின் பின்பக்கத்தில்12, 25 எம்பி திறனுடைய கேமராக்களுடன், கூடுதலாக 3D ஸ்டிரியோ கேமரா மூன்றாவதாக இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 25 எம்.பி திறனுடைய முன்பக்க கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை OPPO

இந்த திறன்பேசியின் பேட்டரி திறன் 3700 mAh என்றாலும், வித்தியாசமான முயற்சியாக 1850 mAh அளவு கொண்ட இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 'சூப்பர் விஓஓசி' என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திறன்பேசியை 10 நிமிடத்தில் 40 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அடிப்படையில், 8 ஜிபி ரேமும், 128 ஜிபி நினைவகமும், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 710 வேகத்தையும், ப்ளூடூத் 5.0 பதிப்பையும் கொண்டுள்ள இந்த திறன்பேசி இரண்டு நிறங்களில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்கைகள் இல்லாமலே பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு

படத்தின் காப்புரிமை TWITTER

இறக்கைகள் போன்ற எந்த நகரும் அமைப்புகளும் இல்லாமலே பறக்கும் விமானத்தை கண்டுபிடித்து வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விமானங்கள் கண்டறியப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இதுவரை அதன் அடிப்படை அமைப்பில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதாவது, விமானத்தின் இறக்கையிலுள்ள முன்னோக்கிய உந்து விசை காற்றை கிழித்துக்கொண்டு பறப்பதற்கு முதற்காரணமாக உள்ளது. விமானத்தில் வடிவமைப்பில் எந்த முன்னேற்றம் ஏற்பட்டாலும், அதன் இறக்கை அமைப்பு மட்டும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகத்தின் விமானப்பொறியியல் துறையை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது ஒன்பதாண்டுகால ஆராய்ச்சிக்கு பின் இறக்கை போன்ற எவ்வித அமைப்புமின்றி பறக்கும் விமானத்தை கண்டறிந்து அதுகுறித்த விவகாரங்களை நேச்சர் என்ற சஞ்சிகையில் பதிப்பித்துள்ளனர்.

மின்சக்தி காற்றியக்கவியல் உந்துவிசையை (Electroaerodynamic Propulsion) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மாதிரி விமானத்தின் எடை 2.45 கிலோகிராம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 60 மீட்டர்கள் வரை பரந்த இந்த விமானம், இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை பெறுவதற்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் வணிகரீதியாக பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் பலகட்ட ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு தீமை விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் இந்த தொழில்நுட்பம் நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :