'கருவிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள்' - சிக்கலில் சீன விஞ்ஞானி

  • மிச்சேல் ராபர்ட்ஸ்
  • ஹெல்த் ஆசிரியர், பிபிசி நியூஸ் ஆன்லைன்

சீன விஞ்ஞானி ஒருவர்உலகிலேயே முதல் முறையாக ஜீன் எடிட்டிங் செய்யப்பட்ட குழந்தைகள் பிறப்பதற்கு தான் உதவியதாகக் கூறியது குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு செய்யப்படுவது சாத்தியமா என்றும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜீன் எடிட்டிங் என்பதை சுருக்கமாக கருத்தரித்த முட்டையின் மரபணுக்களில் சில மாற்றங்களை செய்யும் முறை என குறிப்பிடலாம்.

சீன விஞ்ஞானியான ஹி ஜியான்குய், சில வாரங்களுக்கு முன்பு பிறந்த பெண் இரட்டையர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக கருதரித்த முட்டையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அவரது செய்முறையின் காணொளி ஏ.பி நிறுவனத்தால் படம் பிடிக்கப்பட்டது. அவரது ஆய்வு சரிபார்க்கப்படவில்லை. மேலும் அது விஞ்ஞானிகள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இதனை மனிதத்தன்மையற்ற ஒரு பயங்கரமான செயல் என விவரித்துள்ளனர்.

இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறை

ஜீன் எடிட்டிங் என சொல்லப்படும் மரபணுவில் சில மாற்றங்களைச் செய்யும் முறையால் அதாவது, கருத்தரித்த முட்டையில் உள்ள நிரல் மொழிக் குறியீடுகளில் மரபு ரீதியாக வரக்கூடிய சில நோய்களை தடுக்க உரிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் கருத்தரித்த முட்டையின் மரபணுவில் குறுக்கீடு செய்வது சம்பந்தப்பட்ட நபரை மட்டுமல்ல எதிர்கால தலைமுறையையும் பாதிக்கக்கூடும் என சில நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் குழந்தைகளை உருவாக்க பயன்படும் கருத்தரித்த முட்டையில் ஜீன் எடிட்டிங் செய்வதை தடுப்பதற்கான சட்டங்களை வைத்திருக்கிறார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

ஆய்வாளர்கள் குழந்தை உருவாக்க பயன்படுத்தாத ஐ.வி.எப் (IVF) எனும் செயற்கை கருத்தரித்தல் முறையில் உருவாக்கப்படும் கரு முட்டைகளில் மட்டுமே ஜீன் எடிட்டிங் ஆராய்ச்சியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட அந்த கரு முட்டைகள் உடனடியாக அழிக்கப்படவேண்டும்.

ஆனால் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் பயின்றவரும் தென் சீன நகரமான ஷென்ஜென்னில் ஆய்வுக்கூடத்தில் வேலைசெய்து வரும் பேராசிரியர் ஹி, லுலு மற்றும் நானா என அழைக்கப்படும் இரட்டையர் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு ஜீன் எடிட்டிங் கருவிகளை பயன்படுத்தியதாக கூறுகிறார்.

ஒரு காணொளியில், அந்த பெண் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி வைரஸ் தாக்கினாலும் அதனை எதிர்கொள்ளும் விதமாக சிசிஆர்5 எனும் மரபணுவை நீக்கியதாகவும், அப்பெண்களுக்கு இனி எச்.ஐ.வி தொற்றாது எனவும் தெரிவித்தார்.

தன்னுடைய வேலை என்பது அதிக அறிவுத் திறன் கொண்டிருக்கும் அல்லது வெவ்வேறு கண் நிறம் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதைவிட நோய்களால் பாதிக்கப்படாத வண்ணம் குழந்தைகளை உருவாக்குவதே என்கிறார் அவர்.

''என்னுடைய இவ்வேலை சர்சைக்குரியதாகலாம் என நான் அறிவேன். ஆனால் இனி இந்த தொழில்நுட்பம் குடும்பங்களுக்கு தேவை என நம்புகிறேன் அதனால் அவர்களுக்காக இவ்விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள விழைகிறேன்'' என அந்த காணொளியில் கூறினார்.

இருப்பினும், இந்தக் கூற்றில் சம்பந்தப்பட்டுள்ள மருத்துவமனை உட்பட பல்வேறு நிறுவனங்களும் தங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளனர்.

ஷென்ஜென்னில் உள்ள சதர்ன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம் இந்த ஆராய்ச்சி திட்டம் குறித்து தெரியவில்லை என்றும் விசாரணையை துவக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் ஜீன் எடிட்டிங் செய்ததாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மையெனில் பேராசிரியர் ஹி எந்தவித நியாயப்படுத்தலுமின்றி ஆரோக்கியமான கரு முட்டைகளில் சோதனை செய்தது மிகவும் பொறுப்பற்ற செயல் என மற்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் ஸ்டெம் செல் அறிவியலின் வல்லுனரான டாக்டர் டஸ்க்கோ லிக், '' இதை அறநெறிக்குட்பட்டது எனச் சொன்னால், அறநெறி குறித்த பார்வை உலகின் மற்ற பகுதிகளில் மிகவும் வேறுபடக்கூடும்,'' என்கிறார்.

எச்.ஐ.வி என்பது நிச்சயம் சிகிச்சையளிக்கக்கூடியது மேலும் இந்த தொற்றானது மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுக்குள் வைத்திருந்தால் பெற்றோர்கள் மூலம் குழந்தைகளுக்கு பரவும் வாய்ப்பு கிட்டத்தட்ட அறவே இல்லை என அவர் வாதிடுகிறார்.

மிகவும் ஆபத்தானது

''இந்த செய்தி உண்மையெனில், இந்த பரிசோதனையானது மனிதன்மையற்ற மோசமான செயல். அந்த கரு முட்டைகள் ஆரோக்கியமாக இருந்ததுள்ளன அவற்றுக்கு நோய்கள் இருந்தது அறியப்படவில்லையல்லவா'' என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறநெறிமுறைகள் குறித்து வல்லுனரான பேராசிரியர் ஜூலியா சவுலெஸ்கு.

''ஜீன் எடிட்டிங் என்பதே பரிசோதனையில்தான் இருக்கிறது. இந்த பரிசோனையானது உண்மையில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தேவையே இல்லாமல் ஜீன் எடிட்டிங்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு ஆளாக்கிவிட்டது'' என அவர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு ஜீன் எடிட்டிங் செய்யப்படுவது ஒருநாள் நியாயமானதாகப்படலாம். ஆனால் அதற்கு முன்னர் அவ்வாறு பரிசோதனைகளை செய்வதற்கு போதிய சோதனைகளையும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :