யானை வரும் பின்னே, அதிர்வு வரும் முன்னே - கண்டுபிடிக்கும் கருவி

யானைகள் வருவதை முன்னரே அறியும் புதிய வழி கண்டுபிடிப்பு படத்தின் காப்புரிமை Getty Images

யானைகள் நடந்து/ ஓடி வரும்போது ஏற்படுத்தும் அதிர்வுகளை கொண்டு அவற்றின் வருகையை முன்னரே அறியும் புதிய வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

யானைகள் சாதாரணமாக நடப்பது மூலமாக மட்டுமின்றி, ஒருவித ஒலியை எழுப்புவதன் மூலமும் அவற்றின் வருகையை முன்னரே அறிந்துகொள்ள முடியுமென்று பெத் மோர்டிமர், டார்ஜெ நிஸ்ஸன்-மெயர் ஆகிய விஞ்ஞானிகள் இணைந்து கண்டறிந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை அறிவதற்கு பயன்படுத்தப்படும் அமைப்புமுறையை கொண்டே யானைகளின் வருகையையும் கண்டறியலாம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி முடிவுகள் குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும் கருத்தரங்கு ஒன்றில் விளக்கினர்.

நிலநடுக்க அலைகள் எனப்படும் சீஸ்மிக் அலைகள் எவ்வாறு தரையின் வழியே ஓரிடத்திற்கு வருவதை, அது சுமார் நான்கு மைல்கள் தூரத்தில் இருக்கும்போதே கண்டறிய முடியுமென்பதை அவர்கள் அப்போது விளக்கினர்.

கென்யாவின் அடர்ந்த காடுகளிலுள்ள யானைகள் நடப்பதன் மூலமும், ஒலியின் மூலமும் வெளிப்படுத்திய அதிர்வுகளை ஜியோபோன் (geophones) என்ற உபகரணத்தை கொண்டு அளவிட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஓரிடத்தின் நிலையான புவியியல் தகவல்களையும், நிலநடுக்க அலைகளை கண்டறியும் கருவியுடன் இணைக்கப்பட்ட மென்பொருளில் பதிவாகும் கணினி சார்ந்த கணக்கீடுகள் வழியாக யானைகள் வெளிப்படுத்தும் அதிர்வுகள் குறித்த துல்லியமான விவரங்களை கண்டறிய முடியுமென்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

யானைகளின் அதிர்வுகளை பதிவுசெய்யும்போது அவற்றின் செயல்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டு, பின்பு வெகுதூரத்தில் அமைக்கப்பட்டிருந்த கருவியில் பதிவான அலைகளுடன் ஒத்திசைவு செய்து அது யானையின் செயல்பாடுதான் என்பதை உறுதி செய்தனர்.

மேலும், மணலின் தன்மையும், தரைப்பகுதியில் நிலவும் மற்ற ஒலியும் வெகுதூரத்திலிருந்து யானையின் நடமாட்டத்தை அறிவதற்கு தடையாக உள்ளதாகவும், பாறைகளின் வழியே அலைகள் பரவுவதைவிட மணற்பாங்கான இடங்களின் வழியாக அதிர்வுகள் அதிக தூரத்துக்கு பயணிப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த அமைப்புமுறையின் மூலம் யானைகள் வெகுதொலைவில் இருந்தாலும், அவை என்ன செய்துக்கொண்டிருக்கின்றன, ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து முன்னரே தெரிந்துகொள்ள முடியும்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் 'கரண்ட் பயாலஜி' (Current Biology) என்ற சஞ்சிகையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் பதிப்பிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

"யானைகள் இயற்கையாக எழுப்பும் அதிர்வுகளை புரிந்துகொள்ளும் பயணத்தில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் புதிய சாத்தியங்களை கண்டறிந்துள்ளது" என்று சேவ் தி எலிபெண்ட்ஸ் என்ற யானைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை செயலதிகாரியான பிராங்க் போப் இந்த ஆராய்ச்சி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

"நெரிசலான நிலப்பரப்பில் மனிதனால் உருவாக்கப்படும் இரைச்சல் காரணமாக ஏற்படும் சவால்கள் குறித்தும் இந்த ஆராய்ச்சி பல புதிய கற்பித்தல்களை அளித்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

யானைகள் குறித்த சில ஆச்சர்ய தகவல்கள்:

  • உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள்.
  • பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.
  • யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.
  • யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன.
  • மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தந்தத்தில் அதிக சதை உள்ளது.
  • யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.
  • யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. யானைகளை அது எந்த பக்க தந்தத்தை அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அடையாளப்படுத்த முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்