நாசா ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 கோடி கி.மீ. பயணித்து விண்கல் பென்னுவுக்கு சென்றது

பென்னு வின்கல்.
படக்குறிப்பு,

பென்னு வின்கல். இங்கேதான் ஒசிரிஸ்-ரெக்ஸ் ஆய்வு வாகனம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்தது.

வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் ஆய்வுகள் நடத்தும். 2020-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்த வாகனத்தை விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறக்குவார்கள். அப்போது இந்த ஆய்வு வாகனம் அந்த விண்கல்லில் இருந்து மேல் மண்ணை எடுத்து சுத்தமான குழல் ஒன்றில் சேகரிக்கும். இந்தக் குழல் ஆராய்ச்சிக்காக 2023-ம் ஆண்டு புவிக்கு வந்து சேரும்.

ரோபோட்டிக் முறையில் இயங்கும் இந்த ஆய்வு வாகனம் திங்கள்கிழமை பென்னுவை நெருங்கிய நிலையில், அதன் உந்து விசை இயக்கப்பட்டது. இதையடுத்து, ஒசிரிஸ்-ரெக்ஸ் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தபட்சம் 7 கி.மீ. தொலைவில் அதன் திசைவேகத்துடன் ஒத்திசைந்து பயணிக்கத் தொடங்கியது.

இந்தப் பணி நடந்தபோது, இந்த ஆய்வு வாகனத்தின் துணை முதன்மை ஆய்வாளரான ஹீத்தர் இனோஸ், இந்த ஆய்வு வாகனத்தை தயாரித்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தார். இந்த அறை, கொலராடோ மாகாணத்தின் லிட்டில்டன் என்ற இடத்தில் உள்ளது.

"என் இதயம் வழக்கத்தைவிட மூன்று மடங்கு வேகமாகத் துடிக்கிறது. நான் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். இப்படி ஓர் அற்புதமான சாதனையை எங்கள் அணி சாதிப்பதைப் பார்ப்பது தனிப்பட்ட முறையில் பலவகையில் மகிழ்ச்சியைத் தருகிறது. அவற்றை என்னால் விவரிக்கக்கூட முடியாது" என்று கூறினார் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளரான இனோஸ் தெரிவித்தார்.

அடுத்த சில நாள்களில் ஓசிரிஸ்-ரெக்ஸ் பென்னுவுக்கு அருகில் இன்னும் நெருங்கிச் சென்று முதல் நிலை ஆய்வுகளை மேற்கொள்ளும். விண் கல்லின் வடதுருவத்தைக் கடந்து மூன்று முறையும், பிறகு அதன் மையக் கோட்டுக்குச் செல்லும், பிறகு தென் துருவத்துக்கு செல்லும் என்று கூறியுள்ளார் இந்தப் பயணத்தின் ஃப்ளைட் நேவிகேட்டர் கோரலி ஆதம்.

இதன் மூலம் பென்னுவின் நிறை, ஈர்ப்பு ஆகியவற்றை ஆய்வு வாகனம் மதிப்பிடும். இந்த மதிப்பீடுகள் பிறகு இந்த ஆய்வு வாகனம் விண்கல்லை சுற்றி வருவதற்கான திட்டத்தை வகுக்கப் பயன்படும்.

அப்போது விண்வெளி ஆய்வு வாகனங்கள் இதுவரை சுற்றிவருவதிலேயே மிகச் சிறிய பொருளாக பென்னு இருக்கும். ஓராண்டு காலத்தில் இது நடக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: