'அழிவின் விளிம்பில்' உலகின் விந்தையான சுறாக்கள் - காரணம் என்ன?

'அழிவின் விளிம்பில்' உலகின் விந்தையான சுறாக்கள் - அதிர்ச்சியளிக்கும் காரணம் படத்தின் காப்புரிமை SHUTTERSTOCK

உலகின் அசாதாரணமான சுறா வகைகள், 'ரே' என்னும் வகையை சேர்ந்த மீன்கள் உள்ளிட்டவை அதிகரித்து வரும் வணிகரீதியிலான மீன் பிடிப்பு காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அழியும் நிலையிலுள்ள 50 அரிய உயிரினங்களை கொண்ட இந்த பட்டியலில், வாலின் மூலம் இரையை பிடிக்கும் சுறாக்கள், ஒரு பேருந்தின் பாதி நீளமுள்ள ரேக்கள் ஆகியவை உள்ளன.

மக்களுக்கு சுறாக்கள் குறித்து தவறான எண்ணவோட்டம் உள்ளதாகவும், ஆனால் அவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை, எப்படிப்பட்ட அச்சுறுத்தலின் கீழ் உள்ளன என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த "உயிருள்ள படிமங்கள்" ஒன்றை இழந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த பரிணாமவியல் வரலாறு அழிந்துவிடும்.

"சுறாக்களைப் பற்றிய மிகப் பெரிய கட்டுக்கதையே அது ஆபத்தானது, மனிதர்களை கொல்லக்கூடியது என்பதே. ஆனால், அது முற்றிலும் தவறான ஒன்று" என்று பிபிசியிடம் பேசிய கடல் உயிரியலாளர் பிரான் கபாடா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை SHUTTERSTOCK

"சுறாக்கள் மனிதர்களின் இறப்புக்கு காரணமாக உள்ளதாக சில பதிவுகள் இருந்தாலும் அவை அடிக்கடி நிகழ்வதில்லை, வேண்டுமென்றும் செய்யப்படுவதில்லை" என்று அவர் மேற்கொண்டு கூறுகிறார்.

கடல்வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலியில் முதன்மையான இடத்தை வகிக்கும் சுறாக்களின் வாழ்வுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த மீனினங்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மனிதர்களின் வாழ்வாதாரத்திலும் பாதிப்பை உண்டாக்கும்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரிந்தோ, தெரியாமலோ மீன் பிடிக்கும்போது இவற்றின் மீது நடக்கும் தாக்குதல்களே அதீத வீழ்ச்சிக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடற்கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகள், மாங்குரோவ் காடுகளின் அழிப்பு, மாசடைந்து வரும் தண்ணீர் ஆகியவையும் முக்கிய காரணமாக உள்ளது.

ஆபத்தான நிலையிலுள்ள உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில கடல்வாழ் உயிரிகள் இதோ:

லார்ஜ்டூத் சாபிஷ் (ப்ரிஸ்டிஸ் ப்ரிஸ்ட்ஸ்)

படத்தின் காப்புரிமை SIMON FRASER UNIVERSITY

ரே வகை மீனினத்தை சேர்ந்த இது பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இது கட்டுக்கடங்காத மீன்பிடிப்பு, தவறுதலாக வலைகளில் சிக்குதல் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லார்ஜ்டூத் சாபிஷ் என்றழைக்கப்படும் நீண்ட வாயை-பற்களை கொண்ட இந்த ரேக்களின் தோலை கொண்டே ஒரு காலத்தில் காலணிகள் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தி கரீபியன் எலக்ட்ரிக் ரே (நார்சின் பாங்க்ரோஃப்டி)

படத்தின் காப்புரிமை SHUTTERSTOCK

இந்த வகை ரே தான் வெளியேற்றும் மின்னதிர்ச்சியின் மூலம் இரையை பிடிக்கிறது. பகல் நேரத்தில் மண்ணுக்குள் மறைந்திருக்கும் இது, இரவில் வெளியே வந்து புழுக்களையும், சிறிய இரையையும் உண்ணுகிறது,

தி ஸிப்ரா ஷார்க் (ஸ்டிகோஸ்டோமா ஃபாசிட்டகம்)

படத்தின் காப்புரிமை SHUTTERSTOCK

தனது வாழ்நாள் முழுவதும் உடலமைப்பை மாற்றிக்கொள்ளும் இயல்பை இந்த வகை சுறா கொண்டுள்ளது. அதாவது, பிறக்கும்போது புள்ளிகளை கொண்டிருக்கும் இந்த சுறாக்களின் வயது அதிகரிக்கும்போது அவை மறைகின்றன. கடலின் ஆழமான பகுதிகளில் வாழும் இந்த சுறாக்களின் ஆயுட்காலம் 25 முதல் 35 ஆண்டுகளாகும்.

தி வேல் ஷார்க் (ரெனோகோடன் டைபஸ்)

படத்தின் காப்புரிமை AFP

கடலில் வாழும் மிகப் பெரிய மீனாக கருதப்படும் இந்த திமிங்கில சுறா, சுமார் 20 மீட்டர்கள் வரை வளரக்கூடியது. நுண்ணிய உயிரினங்கள் மற்றும் சிறியவகை உயிரினங்களை இவை உணவாக கொண்டுள்ளன.

தி பாஸ்கிங் ஷார்க் (செடோரினஸ் மாக்சிம்ஸ்)

படத்தின் காப்புரிமை SHUTTERSTOCK

திமிங்கலத்திற்கு பிறகு கடலில் வாழும் மிகப் பெரிய சுறா இனமாக (மீனினமாக) இது உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்