உறுப்புமாற்று அறுவை சிகிக்சை: இறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தை பிறந்தது எப்படி?

கருப்பை படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இறந்த ஒரு பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு, வேறு ஒரு பெண்ணுக்கு பொருத்தப்பட்ட கர்ப்பப்பையில் கருத்தரித்த குழந்தை நலத்துடன் பிறந்துள்ளது.

பிரேசிலில் உள்ள சாவ்ம் பாவ்லோ நகரில் 2016ஆம் ஆண்டு, சுமார் 10 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சை மூலம் இந்த கர்ப்பப்பை 32 வயதாகும் ஒரு பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டது. அவருக்கு பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லை.

இதுவரை 39 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் மூலம் 11 குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால், இதற்கு முன்னர் இறந்தவர் ஒருவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு உயிருள்ளவரின் உடலில் பொருத்தப்பட்ட 10 கர்ப்பப்பைகளில் சிலவற்றால் கருத்தரிக்க முடியவில்லை. சிலவற்றில் உண்டான கருக்களும் கலைந்துவிட்டன.

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடந்தது எவ்வாறு?

மூளையில் உண்டான ரத்தக்கசிவால் இறந்த, மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கர்ப்பப்பை, பிறப்பிலேயே கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகியன முழுதாக உருவாகாத பெண் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிறந்த குழந்தை 2.5 கிலோ எடையுடன் இருந்தது.

மேயர் - ரோகிடான்ஸ்கி - குஸ்டர் - ஹாசர் சின்ரோம் எனப்படும் இந்தக் குறைபாடு 4,500இல் ஒரு பெண்ணுக்கு உண்டாக வாய்ப்புண்டு.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணுக்கு முட்டைகளை உண்டாக்கும் சினைப்பை நல்ல நிலையில் இருந்தன. அவரது கரு முட்டைகளை எடுத்து, விந்தணுவுடன் ஒன்றுகூடச் செய்த மருத்துவர்கள், அந்தக் கருவை கருப்பையில் செலுத்தினர்.

அறுவை சிகிச்சை முடிந்த ஆறு வாரங்களில் அப்பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அதன் பிறகு ஏழு மாதங்கள் கழித்து அவரது உடலில் கரு செலுத்தப்பட்டது.

உடலுக்கு ஒவ்வாத வேறு ஒரு பொருள் உடலுக்குள் வந்துவிட்டதாகக் கருதி, புதிய கர்ப்பப்பையை அப்பெண்ணின் உடல் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதைத் தடுக்க, அவரது உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மருத்துவர்கள் குறைத்தனர்.

டிசம்பர் 15, 2017இல் நடந்த சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை 2.5 கிலோ எடையுடன் இருந்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கருப்பை மாற்று அறுவை சிகிச்சை 10 மணிநேரம் நடந்தது.

'சொற்ப எண்ணிக்கை'

அறுவை சிகிச்சை நடந்த சாவ்ம் பாவ்லோவில் உள்ள ஹாஸ்பிடல் டாஸ் கிளினிகாஸ் எனும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டேனி எஜென்பர்க், "உயிர் உள்ளவர்களிடம் பெறப்பட்ட கர்ப்பப்பை மூலம் மகப்பேறுக்கான வாய்ப்பில்லாத பல பெண்கள் குழந்தை பெற முடிந்தது. ஆனால், கர்ப்பப்பை தானம் செய்ய முன்வருவோர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தனர்," என்கிறார்.

"இறந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கருப்பை மூலம் செய்யப்படும் இத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் குறைத்த செலவு மட்டுமல்லாது, தானம் செய்யும் உயிருள்ளவர்கள் உள்ளாகும் அபாயங்களும் தவிர்க்கப்படும்," என்கிறார் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் மருத்துவர் சர்ஜான் சாசோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: