ஃபேஸ்புக்: பயனாளர்களின் தகவல்களை விற்க முயற்சியா?

ஃபேஸ்புக்கின் தகவல் பகிர்வு பேரங்கள் அம்பலம்

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை புலனாய்வைத் தொடர்ந்து தகவலின் ரகசியத்தன்மைப் பாதுகாப்பு நடைமுறைகள் விஷயத்தில் முகநூலின் செயல்பாடு மறுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது.

பயனாளர்கள் பற்றிய தகவல்களை அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ், ஸ்போட்டிபை மற்றும் யான்டெக்ஸ் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அணுகுவதற்கு முகநூல் சமூக வலைதளம் எப்படி அனுமதித்தது என்ற வழிமுறைகள் பற்றிய புதிய விவரங்களை இந்தப் பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.

சில நேர்வுகளில், தங்களுக்கு சிறப்பு அணுகுதல் வசதி உள்ளது பற்றி கூட தெரியாது என்று சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தன்னுடைய நடத்தையை முகநூல் நிறுவனம் நியாயப்படுத்தியுள்ளது.

மக்களின் அனுமதி இல்லாமல் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதற்கு ஒருபோதும் அனுமதித்தது இல்லை என்றும், அந்தத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டதற்கான ஆதாரம் எதையும் காண முடியவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இருந்தபோதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்புரிமை அளிப்பதை கைவிடுவதாக வெளிப்படையாக அறிவித்த பிறகு, பயனாளர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பினர் பெறுவதற்கான வழிமுறைகளை தாங்கள் தடுத்திருக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

பயனாளர்களுக்கு வரும் தனிப்பட்ட தகவல்களைப் படிப்பது, பெயர்கள், தொடர்பு விவரங்கள், அவர்களுடைய நண்பர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்பது என்ற அளவுக்கு மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பதற்கான உதாரணங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை முகநூல் நிறுவனம் கையாண்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் முன்னாள் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டாமோஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், யாருக்கெல்லாம் எந்த வகையிலான சிறப்பு அணுகுதல் வசதிகள் அளிக்கப்பட்டன என்பது குறித்து கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தகவல்களை எடுத்தது, பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மரில் வன்முறையை தூண்டியது, அமெரிக்க தேர்தலில் ரஷியா மற்றும் ஈரான் தலையீடுகளுக்கான ஆதாரம் மற்றும் தகவல்களை வெளிப்படுத்தும் பல வழிகள் உள்பட தொடர்ச்சியான முறைகேடுகளை சமீபத்திய தகவல்கள் உறுதி செய்கின்றன.

இவையெல்லாம் முகநூல் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டன. புதிய கட்டுப்பாடுகள் வேண்டும் என்ற தேவை எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமை நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.

``பயனாளர் தகவல்களை நாங்கள் விற்கவில்லை என்று முகநூல் கூறுவதை நாம் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும்'' என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் டிஜிட்டல், கலாசார, ஊடக மற்றும் விளையாட்டுத் துறை கமிட்டியின் தலைவர் டமானியன் கோலின்ஸ் எம்.பி. கூறியுள்ளார்.

``பக்கெட்களில் அள்ளுவதைப் போல எடுத்துச் செல்வதற்கு அந்த நிறுவனங்களை முகநூல் அனுமதிக்காமல் இருந்திருக்கலாம். மற்றவர்கள் வழங்க மறுத்த, தகவல்களை அணுகும் வசதியை வெகுமதி நிறுவனங்களுக்கு முகநூல் அளித்திருக்கிறது. அதிக மதிப்புள்ள வணிகத்தை அந்த நிறுவனம் கொண்டு வந்தால் அவை இணைந்து செயல்பட்டிருக்கின்றன. இது ஒரு வகையிலான விற்பனைதான்'' என்கிறார் அவர்.

பகுப்பாய்வு : டேவ் லீ, வட அமெரிக்க தொழில்நுட்ப நிருபர்

பட மூலாதாரம், Getty Images

நியாயமற்ற வகையில் தங்கள் மீது குற்றஞ்சாட்டப்படுவதாக எப்போதும் போல முகநூல் நிறுவனம் கருதுகிறது. சொல்லப் போனால், மிக சமீபத்தில் கடந்த வாரத்தில், கேம்பிரிட்ஜ் அனலிடிகா ஊழல் உணர்வுப்பூர்வமானது என்று முன்னாள் பாதுகாப்பு தலைவர் அலெக்ஸ் ஸ்டாமோஸ் கறியுள்ளார்.

மார்ச் மாதம் இந்தக் குழப்பங்கள் தொடங்கிய போதிருந்து தெரிவித்த அதே தொனியைத் தான் முகநூல் நிறுவனம் கொண்டிருக்கிறது என்பது புதன்கிழமை அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பயனாளர்கள் ஒப்புதல் தந்திருக்கிறார்கள், எல்லோருக்கும் தெரியும், இங்கே பார்ப்பதற்கு எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அறிக்கையில், 2010 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டும் ஒரு துணுக்கை இணைப்பில் சேர்த்திருப்பது பிடிவாதம் மற்றும் எதையும் மதிக்காத நிலையை மேலும் அதிகரிப்பதாக உள்ளது என்பது சமீபத்திய புலனாய்வின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து எந்த அளவுக்கு ``தகவல் விழிப்புணர்வை'' பொது மக்களிடம் ஏற்படுத்தியது என்பதும், அனைத்தையும் எப்படி வெளியில் தெரிவிக்க வேண்டும் என்ற காலம் வந்துவிட்டது என்பதையும் முகநூல் குறைத்து மதிப்பிடுகிறது.

நான் முகநூல் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராகவோ, அல்லது பங்குதாரராகவோ இருந்தால், மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் நான் பின்வருமாறு கூறுவேன் : ``தகவல்களை அணுகும் வசதி யாருக்கெல்லாம் இருக்கிறது அல்லது யாருக்கெல்லாம் இருந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய காலம் இது'' என்று சொல்வேன்.

2019 ஆம் ஆண்டு 2018 ஆம் ஆண்டைப் போல அல்லாமல் இருப்பதற்கு அதுதான் ஒரே வழி: ``முகநூல் நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுத்துவிட்ட, அநேகமாக மீள முடியாத அளவுக்கு கெடுத்துவிட்ட தலைப்புச் செய்திகள் நிறைந்ததாக 2018 இருந்தது.

யாருக்கு என்ன கிடைத்தது?

அந்த நிறுவனம் பகிராத முழு விவரங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான பக்கங்களில் உள்ள ஆவணங்கள், டஜன் கணக்கான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு நியூயார்க் டைம்ஸ் பகுப்பாய்வைச் செய்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, தனது உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இந்த சமூக வலைதள நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளை வைத்திருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை, தொழில்நுட்ப நிறுவனங்கள் என்று அந்த நிறுவனம் சொல்கிறது. ஆனால், அந்தப் பட்டியலில் ஆன்லைனில் சில்லரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், கார் தயாரிப்பாளர்கள், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

தரப்பட்டுள்ள உதாரணங்களில் தெரிவிக்கப்பட்டவை:

•மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Bing தேடுபொறி, அது காட்டக் கூடிய தேடுதகவல்களை தனிப்பட்ட முறையிலானதாக ஆக்குவதற்காக முகநூல் பயன்பாட்டாளர்களின் நண்பர்களுடைய தகவல்களை, அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் ``ஏறத்தாழ அனைத்து'' பெயர்களையும் பார்க்க முடியும்.

•இசை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் Pandora மற்றும் திரைப்பட விமர்சன தளமான Rotten Tomatoes ஆகியவை தங்களுடைய தேடு தகவல்களை தனிப்பட்டதாக ஆக்குவதற்காக, நண்பர்களைப் பற்றிய தகவல்களைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்றிருக்கின்றன.

•ஆப்பிள் செல்போன் பயன்படுத்துபவர்கள் முகநூல் செட்டிங்குகளில் பகிர்தலுக்கான அனைத்து வசதிகளையும் ரத்து செய்திருந்தாலும் கூட, பயனாளர்களின் தொடர்பு தகவல்கள், காலண்டர் குறிப்புகளை அணுக முடியும். சொல்லப்போனால், முகநூலில் இருந்து தகவல்களைப் பெறுகிறோம் என்று பயனாளர்களுக்கு சிறு எச்சரிக்கை தரும் தேவை ஆப்பிள் பயனாளர்களுக்கு இல்லை.

•Netflix, Spotify மற்றும் Royal Bank of Canada ஆகியவை பயனாளர்களின் தகவல்களைப் படிக்க, எழுத மற்றும் நீக்க முடியும். ஒரு கலந்துரையாடல் பின்னலில் (chat threads) பங்கேற்றுள்ளவர்கள் அனைவரையும் இந்த நிறுவனங்கள் பார்க்கவும் முடியும்.

•ரஷியாவின் தேடுபொறியான Yandex , பயனாளர்களின் அடையாளங்களைப் பொது பக்கங்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் பெறுவதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்தச் செயல்பாட்டைத் தொடரும் வசதியை மற்ற விண்ணப்பதாரர்களுக்கு முகநூல் நிறுவனம் நிறுத்திவிட்ட பிறகு, தேடு தகவல்களின் தன்மையை மேம்படுத்த Yandex- க்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

•Yahoo நிறுவனம் நண்பர்களுடைய பதிவை உடனுக்குடன் பார்க்க முடியும்.

•Sony, Microsoft, Amazon நிறுவனங்கள் நண்பர்களுடைய தொடர்புகள் மூலமாக உறுப்பினர்களின் இமெயில் முகவரியைப் பெற முடியும்.

•Blackberry, Huawei நிறுவனங்கள் தங்களுடைய சமூக ஊடக ஆப்-களை வலுப்படுத்துவதற்காக முகநூல் தகவல்களை எடுத்துக் கொள்ளக் கூடிய நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

தனது பயனாளர்களின் தகவல்களை விற்கவில்லை என்று முகநூல் நிறுவனம் நீண்டகாலமாகக் கூறி வருகிறது.

ஆனால், Amazon, Yahoo மற்றும் Huawei நிறுவனங்களிடம் இருந்து தொடர்பு பட்டியல்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது உள்ளிட்ட செயல்பாடுகள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது. உங்களுக்குத் தெரிந்தவராக இருக்கலாம் (People You May Know ) என்ற வசதியை அளிக்க இது பயன்படுத்தப் படுகிறது.

பரிச்சயம் உள்ளவர்களை தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்க்க அதிக வாய்ப்புகளை அளிப்பதன் மூலம், ஈடுபாடுகளை அதிகரிக்க உதவுதல் என்ற அம்சமாக இது உள்ளது.

முகநூல் நிறுவனத்தின் பதில் என்ன?

அந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இரண்டு வகையிலான தொடர்புகளுக்கு இடையே வித்தியாசத்தைக் காட்டுகிறது.

முதலாவது வகையை அது ``ஒருங்கிணைத்தல் பங்காளர்கள்'' என்கிறது. முகநூல் அம்சங்களை தனது சொந்த ஆப் அல்லது இணையதளத்துக்கு வெளியில் அளிப்பதற்கு மற்றவர்களுக்கு அனுமதி தருவதற்கான ஏற்பாடுகள் இவை என்று அந்த நிறுவனம் வரையறை செய்கிறது.

முகநூல் நிறுவனம் கடந்த ஜூலையில் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பங்காளர்களின் பெரிய பட்டியலை உண்மையில் வழங்கியது.

முகநூல், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் இருந்து பதிவுகளை ஒரே ஆப் மூலம் ஒன்று திரட்ட அல்லது இணையதள பிரவ்சர் மூலம் பல வகையான சேவைகள் குறித்து சிறு எச்சரிக்கைகளை மற்ற நிறுவனங்கள் அளிப்பதை இந்த ஏற்பாடுகள் சாத்தியமாக்குகின்றன அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால், இதைச் செய்வதற்கு, அனுமதி தருவதற்கு உறுப்பினர்கள் தங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழைவு செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. சமீபகால மாதங்களில் இத்தகைய பங்காளர் நிலைகள் ``ஏறத்தாழ அனைத்தும்'' மூடப்பட்டுவிட்டன என்றும் அது தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Facebook

இரண்டாவது வகையான ஏற்பாடுகளை ``உடனடி தனிப்பட்டதாக்கல்'' என்று முகநூல் நிறுவனம் குறிப்பிடுகிறது.

மற்ற ஆப்கள் பயன்படுத்துவோர் முகநூலின் தனிப்பட்ட தகவல்களையும் காண இதன் மூலம் அனுமதிக்கப்படும். உதாரணமாக Spotify ஆப் -ல் இருந்து வெளியேறாமலே, ஒரு பாடலை ஒரு நண்பருக்கு பரிந்துரை செய்து உங்களால் அனுப்ப முடியும்.

நெட்பிலிக்ஸ் தொடர்புக்கு உள்பட்ட உங்கள் நண்பர்கள் எந்த டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்தார்கள் என்பதை நீங்கள் பார்க்கும் வகையில், பயனாளர்களின் பொதுத் தகவல்கள் பகிரப்படுகின்றன என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெரும்பாலான விஷயங்களில், தனிப்பட்ட விஷயங்களை அளிக்கும் பங்காளர் நிலைகளை 2014 ஆம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டதாக முகநூல் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களில் 2017 வரை அது தொடர்ந்தது என்றும் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், தனது தகவல்களில் மற்றவர்களை அனுமதிக்கும் இடைமுக மென்பொருள்களை (API-கள்) திரும்பப் பெறவில்லை என்றும் அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அதை அந்த நிறுவனம் செய்திருக்க வேண்டும் என்றாலும், செய்யவில்லை என ஒப்புக்கொண்டுள்ளது.

``தகவல்களை யாரெல்லாம் அணுகலாம் என்பதில் எங்களுடைய அனைத்து API-கள் மற்றும் பங்காளர் நிறுவனங்கள் குறித்து மறு ஆய்வு செய்யும் பணியில் இருக்கிறோம்'' என்று அந்த நிறுவனம் முடித்துக் கொண்டது.

பட மூலாதாரம், Getty Images

மற்ற நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

மைக்ரோசாப்ட் நிறுவனம் சுருக்கமான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது : ``முகநூலுடன் எங்களுடைய ஈடுபாடு இருந்த காலம் வரையில், அனைத்துப் பயனாளர்களின் முன் விருப்பங்களுக்கு நாங்கள் மதிப்பு கொடுத்தோம்'' என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முகநூல் நிறுவனத்துடன் Bing -ன் ஒப்பந்தம் 2016 பிப்ரவரியுடன் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், அப்போதிருந்து சமூக வலைதள தகவல்கள் தேடுதகவல் பட்டியலில் இடம் பெறுவதில்லை என்றும் BBC அறிகிறது.

முகநூல் நண்பர்களாக உள்ள உறுப்பினர்களுக்கு திரைப்படங்களைப் பரிந்துரை செய்யும் வசதியை 2015ல் நிறுத்திவிட்டதாக Netflix தெரிவித்துள்ளது. அந்தச் சேவை அதிக பிரபலம் அடையாததால் நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

``முகநூலில் மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் நாங்கள் அணுகியதில்லை அல்லது அவ்வாறு செய்வதற்கான வசதியைக் கோரியது இல்லை'' என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எந்த வகையிலான அணுகுதல் வசதியை முகநூல் நிறுவனம் வழங்கியிருந்தது என்று தெரியாது என்று Spotify குறிப்பிட்டுள்ளது. தங்களுடைய செல்போன்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது பற்றி தங்களுக்குத் தெரியாது என்று ஆப்பிள் நிறுவனமும் கூறியுள்ளது.

பயனாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தால் மட்டுமே அவர்களுடைய முகநூல் தகவல்களை பார்த்ததாக Yahoo தெரிவித்துள்ளது. விளம்பர தேவைகளுக்காக அதைச் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது.

ரஷியா, துருக்கி, உக்ரேன், பெலாரஸ், கஜகிஸ்தான் மற்றும் பிற சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் (CIS) என குறிப்பிட்ட வரையறைக்குள் தான் தங்களுடைய ஏற்பாடு இருந்தது என்று Yandex தெரிவித்துள்ளது. மேலும், முகநூல் தகவல்களைப் பெறுவதை 2015-ல் நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது ஏன் பிரச்சினைக்குரியது?

வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் பயனாளர் தகவல்களைப் பகிர மாட்டோம் என்று 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஒழுங்குமுறை அமைப்பான - Federal Trade Commission (FTC)- யிடம் முகநூல் நிறுவனம் உத்தரவாதம் அளித்தது என்பது பிரச்சினையின் ஒரு பகுதியாக உள்ளது.

அந்த உறுதிமொழியை மீறவில்லை என்று முகநூல் நிறுவனம் கூறி வருகிறது. ஆனால், ரகசியத்தன்மை நிபுணர்கள் சிலர் வேறு மாதிரி சொல்கிறார்கள்.

இன்னும் மேலாக, ரகசியத்தன்மை காப்பு கொள்கை மாறுபாடுகள் குறித்து பல ஆண்டுகளாக தங்கள் நிறுவனம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதாக முகநூல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறினாலும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் தேவை என்று பிரசாரத்தில் உள்ள குழுவினர் கூறுகின்றனர்.

``மக்களின் தகவல்களை எப்படி சேகரிக்கிறோம், பதிவு செய்து வைத்திருக்கிறோம், பகிர்கிறோம், பராமரித்து வைத்திருக்கிறோம் என்பதை மக்களுக்கு தெளிவாக, சாதாரண மொழியில் தெரிவிக்க முடியாமல் முகநூல் நிறுவனம் இன்னமும் இருக்கிறது'' என்று Privacy International அமைப்பின் தொடர்பாளர் பிபிசி யிடம் கூறினார்.

``2018 ஆம் ஆண்டில் நடந்த முகநூல் மோசடிகளின் தன்மையை மட்டும் பார்த்தாலே அதிர்ச்சி ஏற்படுகிறது. தகவல்களை சுரண்டுவது என்பது பரவலாகவும், முறைப்படுத்தப்பட்ட முறையில் நடைபெறுவதாகவும் தெரிய வருகிறது.''

மற்றொரு ஆபத்து வாய்ப்பாக இருப்பது, பத்திரிகைகளில் அதிக எதிர்மறை செய்திகள் வரும்போது, பயனாளர்கள் முகநூல் மற்றும் பிற ஆப்-களில் இருந்து - Instagram மற்றும் WhatsApp உள்பட - வெளியேறுகிறார்கள் அல்லது அவற்றுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்திக் கொள்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: