அச்சுறுத்தும் ட்ரோன்களை சமாளிக்கும் ஆயுதமாய் கழுகு

அச்சுறுத்தும் ட்ரோன்களை சமாளிக்கும் ஆயுதமாய் பயன்படும் கழுகு

பட மூலாதாரம், AFP

பிரிட்டனின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் ஒன்றின் மீது 'வேண்டுமென்றே' ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்ட சம்பவம் விமான பயணங்களை பாதித்ததோடு, உலகம் முழுவதும் இதுகுறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

லண்டனில் உள்ள பரபரப்பான காட்விக் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை அருகே அடிக்கடி பறந்த ட்ரோனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானங்களை மற்ற இடங்களுக்கு திருப்பி விட்டதுடன், விமானங்களின் புறப்பாட்டை ரத்து செய்தனர்.

காட்விக் விமான நிலையத்தில் சூழ்நிலை அபாயகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவதற்காக பிரிட்டன் ராணுவம் வரவழைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனவே, சுமார் 24 மணிநேரத்திற்கு மேலாக நீடித்த பதற்றத்திற்கு பிறகு காட்விக் விமான நிலையம் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில காலமாகவே உலகமெங்கும் உள்ள அரசாங்கங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தலை விளைவிக்க கூடிய இடங்களில் ட்ரோன்கள் நுழைந்தால் அதை சமாளிப்பதற்காக பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

இந்நிலையில், ட்ரோன்கள் ஏற்படுத்தும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்கும் பல்வேறு வழிகளை இங்கு காண்போம்.

சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகள்

பட மூலாதாரம், EMMANUEL DUNAND

சமீபகால தொழில்நுட்ப வளர்ச்சியின் வடிவமாக பார்க்கப்படும் ட்ரோன்களை எதிர்கொள்வதற்கு புதுமையான வழியொன்றை கண்டறிந்துள்ளது நெதர்லாந்து.

சந்தேகத்திற்கிடமாக பறக்கும் ட்ரோன்களை நோக்கி பறந்து சென்று அவற்றை தனது நகங்களால் திசைதிருப்பி, செயலிழக்கச் செய்யும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் கழுகுளுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட கழுகுகள் ட்ரோன்களை இரையாக கருதுவதாகவும், ஆனால் வேறெந்த பொருட்களையும் இவை தாக்குவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

ரேடார், 'ஜாமிங்' அமைப்புமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

அனுமதியின்றி, தவறான நோக்கத்தில் இயக்கப்படும் ட்ரோன்களின் செயல்பாட்டை கேமராக்கள், ரேடார், ரேடியோ அலைகள் போன்றவற்றை கொண்டு அதன் இருப்பை கண்டுபிடிக்கவோ, இடத்தை கண்டறியவோ பயன்படுத்த முடியும்.

மேற்காணும் தொழில்நுட்பங்களை தற்போதுள்ள விமான நிலைய பாதுகாப்பு அமைப்பு முறையில் இணைத்து, பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ட்ரோன்களைகூட கண்டறிய முடியும்.

அதுமட்டுமின்றி, இந்த அமைப்புமுறையை கொண்டு அந்த குறிப்பிட்ட ட்ரோனுக்கும், இயக்குபவருக்குமிடையேயான தகவல் தொடர்பை துண்டிக்க செய்து, மீண்டும் அது எங்கிருந்தோ கிளம்பியதோ அங்கேயே திரும்ப அனுப்ப முடியும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி வரும் ட்ரோனை சுமார் அரை மைல் தூரத்திற்கு முன்பாகவே செயலிழக்க செய்யும் இதுபோன்றதொரு தொழில்நுட்பத்தை சீனா ஏற்கனவே உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன துப்பாக்கிகள்

பட மூலாதாரம், OPENWORKS

மிகவும் வெளிப்படையான ஒரு வழி என்னவென்றால், அச்சுறுத்தலை உண்டாக்கும் ட்ரோனை சுட்டு வீழ்த்துவதேயாகும்.

எனினும், இலக்கை தவறவிடும் தோட்டாக்கள் ஏற்படுத்தும் ஆபத்தின் காரணமாக இந்த முறையை தாங்கள் பயன்படுத்தவில்லை என்று காட்விக் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும், சந்தேகத்திற்கிடமாக காணப்படும் ட்ரோன்களை கை அல்லது தோள்பட்டை மீது வைத்து பயன்படுத்தும் துப்பாக்கிகளை கொண்டு சுடும்போது அதிலிருந்து வெளிவரும் வலைகள் மூலம் ட்ரோனை பிடிக்கும் மாற்று வழிமுறைகளை சில நிறுவனங்கள் உண்டாக்கியுள்ளன.

பிரிட்டனை சேர்ந்த பொறியியல் நிறுவனமான ஓபன்ஒர்க்ஸ் உருவாக்கியுள்ள ஏவுகணைத் துப்பாக்கியான 'ஸ்கைவால்100', இலக்கை நோக்கி சுட்டவுடன் வலையை வெளியேற்றுகிறது.

இந்த வகை துப்பாக்கி, ஆசியா, ஐரோப்பா மட்டுமின்றி வட அமெரிக்க நாடுகளின் அரசாங்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது.

அனுமதிக்கப்படாத இடத்தை நோக்கி வரும் ட்ரோனை இடைமறித்து, வலையை செலுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தும் ட்ரோன்களும் பயன்பாட்டில் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

ட்ரோன் எதிர்ப்பு ஒளிக்கதிர்கள்

ஒரு குறிப்பிட்ட கருவியின் இருப்பிடத்தை கண்டறிந்த ஒரு சில நொடிகளில் சுட்டு வீழ்த்தும் ஒளிக்கதிர்களை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பத்தை அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் பரிசோதித்துள்ளன.

பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், சக்திவாய்ந்த இன்ஃபராரெட் கேமராக்களை கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் ட்ரோன்களை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: