2018-இல் கண்டுபிடிக்கப்பட்ட 10 புதிய வகை தாவரங்கள்

மனிதன் இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், அனைத்து தாவரங்கள், விலங்குகளை இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தவில்லை.

ஆம், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2,000 புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு பிரிட்டனிலுள்ள ராயல் தாவரவியல் தோட்டத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 100 புதிய தாவரங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அதிலுள்ள 10 சிறப்பு பண்புகளை கொண்ட தாவரங்களின் அறிமுகத்தை இங்கு காண்போம்.

மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பூ

பட மூலாதாரம், MT MARTINEZ

பொலிவியாவின் மலைப்பகுதியில் மட்டும் காணப்படுகிறது இந்த வகை பிங்க் பூக்கள்.

நீர்வீழ்ச்சியில் கண்டறியப்பட்ட மூலிகை

பட மூலாதாரம், RBG KEW

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சியரா லியோன் நாட்டின் நீர் வீழ்ச்சி ஒன்றில், பாறையை பற்றிக்கொண்டிருந்த வித்தியாசமான தாவரத்தை ராயல் தாவரவியல் தோட்டத்தை சேர்ந்த பேராசிரியர் ஐயா லேப்பி கண்டறிந்ததால் இதற்கு லெபீயா கிராண்டிஃப்லோரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சுரங்கங்கள் மற்றும் நீர்மின் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட இந்த தாவரம் இதே நிலை தொடர்ந்த இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வகை பூச்சிப்பிடிக்கும் தாவரம்

பட மூலாதாரம், MARTIN CHEEK, RBG KEW

உலகில் ஏற்கனவே 150 வகையான பூச்சி பிடிக்கும் தாவரங்கள் இருக்கும் நிலையில், தற்போது இந்தோனீசியாவிலுள்ள வடக்கு கடலோர தீவான பயாக்கில் நெபெந்தெஸ் பயாக் என்னும் புதிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தாவரம், அந்த தீவிற்கு வரும் சுற்றுலா கப்பல்கள் செயல்பாட்டினால் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பூ புற்றுநோய்க்கு தீர்வாக அமையலாம்

பட மூலாதாரம், MARTIN CHEEK

காபி தாவரங்களின் குடும்பத்தை சேர்ந்த புதிய தாவரமான கிண்டியா கங்கனை படிவுப்பாறை ஒன்றில் ராயல் தாவரவியல் தோட்ட ஆராய்ச்சியாளர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறிந்துள்ளனர்.

இந்த தாவரத்தை ஆய்வு செய்து பார்த்ததில் புற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆர்க்கிட் தாவரம்

பட மூலாதாரம், ADUNYADETHLUANGAPHAY

லாவோஸ் தலைநகர் வியன்டியனில், காடுகளிலிருந்து சட்டவிரோதமாக திருடப்பட்டு விற்கப்பட்ட தாவரத்தை ஆய்வு செய்தபோது அது முன்னெப்போதும் கண்டறியப்படாத ஒருவகை ஆர்க்கிட் தாவரம் என்பதை கண்டறிந்தனர்.

பாபியோபிடியம் பாபிலியோ-லாடிகஸ் என்று அச்சுறுத்தலில் உள்ள இந்த புதிய தாவரத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சேனைக்கிழங்கு

பட மூலாதாரம், GARETH CHITTENDON

ராயல் தாவரவியல் தோட்டத்துக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, தென்னாப்பிரிக்காவின் ஆறு இடங்களில் மட்டுமே காணப்படும் ஒரு புதிய வகை சேனைக்கிழங்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தவுடன் அதற்கு டயாஸ்கோரியா ஹர்ட்டரி என்று பெயரிட்டுள்ளனர்.

வியட்நாமில் கண்டெடுக்கப்பட்ட வித்தியாசமான பூ

பட மூலாதாரம், SADIE BARBER

ஆரஞ்சு நிறத்தில் வித்தியாசமான வடிவத்தில் காணப்படும் புதிய வகை பூ ஒன்று வியட்நாமில் கண்டெடுக்கப்பட்டதுடன் அதற்கு ஓரியோசரீஸ் ட்ரிப்ரசேட்டியாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மரம்

பட மூலாதாரம், MARTIN CHEEK

பொதுவாக செடிகள், பூக்களே புதிதாக கண்டெடுக்கப்படும் நிலையில் அரிதான நிகழ்வாக மிகப் பெரிய புதிய வகை மரம் ஒன்று மேற்கு ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இலையுதிர்காலத்தின்போது பிங்க் நிற பூக்களை உதிர்க்கும் இந்த மரத்திற்கு டால்போட்டில்லா சீக்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.

வாசனை மரம்

பட மூலாதாரம், THAISVASCONSCELOS3

உணவு மற்றும் அழகுசாதன பொருட்களில் முக்கிய கூட்டுப்பொருளாக பயன்படும் தாவர வகையை சேர்ந்த இதற்கு பிமென்தா பெரிசில்லியே என்று பெயரிடப்பட்டுள்ளது.

அழிந்துப்போய்விட்டதா இது?

கேமரூன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட வெப்ரிஸ் பாலி என்னும் மரம் வாழிடங்கள் அழிக்கப்படுதலின் காரணமாக அழித்துப்போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: