பப்ஜி முதல் பிட்காயின் வரை - 2018இல் வைரலான டெக் செய்திகள்

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
பப்ஜியின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Twitter

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி நம்மை ஆச்சரியத்துக்கு உட்படுத்தி, வாழ்க்கை போக்கை புரட்டிப்போட்டு வருகிறது. இந்நிலையில், 2018இல் நடந்த தொழில்நுட்பம் சார்ந்த 10 முக்கிய விடயங்களை விளக்குகிறது இந்த தொகுப்பு.

பப்ஜி

"நீங்க ஃபேஸ்புக்குல இருக்கீங்களா" என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், அதையே மிஞ்சும் அளவுக்கு உலகம் முழுவதையும் கட்டிப்போட்டிருக்கிறது பப்ஜி என்றழைக்கப்படும் 'பிலேயர் அன்னோன்ஸ் பாட்டில்கிரவுண்ட்' என்னும் விளையாட்டு.

2017ஆம் ஆண்டு விண்டோஸுக்கும், எக்ஸ்பாக்ஸ் ஒண்ணுக்கும் முதன்முதலாக வெளியிடப்பட்ட பிறகு கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பப்ஜி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் 100 பேரை இணையம் மூலமாக இணைக்கும், சண்டையை அடிப்படையாக கொண்ட இந்த விளையாட்டில் 99 எதிர்ப்போட்டியாளர்களை கொன்று கடைசிவரை இருக்கும் ஒருவரே வெற்றிபெற்றவராக கருதப்படுகிறார்.

இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள விளையாட்டை, ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று கோடி பேர் விளையாடுகின்றனர்.

பப்ஜி

பட மூலாதாரம், PUBG

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'பப்ஜி கார்பொரேஷன்' என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த விளையாட்டை 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, 'பப்ஜி கார்பொரேஷன்', 'டென்சென்ட் கேம்ஸ்' ஆகியவை இணைந்து ஆறு பிராந்தியங்களை சேர்ந்த 20 அணிகள் தேர்ந்தெடுத்து, 600,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை கொண்ட தனது முதலாவது சர்வதேச போட்டியை கடந்த நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்-பாக்ஸ், சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் போன்ற கேம்களுக்கான பிரத்யேக சாதனங்களில் மட்டுமே சாத்தியமானதாக இருந்த பப்ஜி போன்ற விளையாட்டுகள், தற்போது கேம் பிரியர்களின் கைகளில் தவழும் அலைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே இதன் சாதனைக்கு காரணமாக கருதப்படுகிறது.

இலங்கை

கடும் வீழ்ச்சியில் பிட்காயின்

கடும் வீழ்ச்சியில் பிட்காயின்

பட மூலாதாரம், Getty Images

கிரிப்டோகரன்சி எனப்படும் மின்னணு பண வகைகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை 2018ஆம் ஆண்டு சந்தித்தது.

ஒவ்வொரு நாட்டுக்கும் டாலர், பவுண்ட், ரூபாய் என தனித்தனியே நாணயங்கள் இருப்பது போல, முற்றிலும் இணையத்தையே இருப்பிடமாக கொண்ட மின்னணு பணங்கள் உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிகப்பட்சமாக 17,100 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயின் பிறகு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் பிட்காயினின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் இல்லாத வகையில் 3,200 டாலர்கள் என்ற அளவை அடைந்தது.

இலங்கை

வைரலான சுந்தர் பிச்சையின் பேச்சு

வைரலான சுந்தர் பிச்சையின் பேச்சு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபரை தேர்தெடுப்பதிலேயே ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு சமூகத்தின் அனைத்து நிலையிலும் முக்கிய இடத்தை பெற்ற ஒன்றாக சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்பம் உருமாறியுள்ளது.

தொழில்நுட்ப உலகை கட்டி ஆளும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாஃப்ட் என அந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லக்கூடியது.

அந்த வகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு, அந்தரங்க தகவல்களுக்கு அச்சுறுத்தல், உள்நாட்டு ரகசிய கசிவு, சர்ச்சைக்குரிய தேடல் முடிவுகள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளை விசாரணைக்கு அழைத்திருந்தது அமெரிக்க நாடாளுமன்ற குழு.

சுந்தர் பிச்சை

பட மூலாதாரம், SAUL LOEB

படக்குறிப்பு,

சுந்தர் பிச்சை

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளை எதிர்கொள்ளும் முதலாவது அமர்வை கூகுளின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை புறக்கணித்தார். இருப்பினும், ஃபேஸ்புக்கின் முதன்மை நிர்வாக அதிகாரியான ஷெரில் சாண்ட்ஸ்பர்க், ட்விட்டரின் தலைமை செயலதிகாரி ஜாக் டோர்ஸி ஆகியோர் அதில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடந்த இரண்டாவது அமர்வில் பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில் கலந்துகொண்ட சுந்தர் பிச்சை கூகுளின் தேடல் பொறி வேலை செய்யும் விதம், சீனாவிற்கான பிரத்யேக தேடுபொறி ஏற்படுத்தும் திட்டம், பயன்பாட்டாளர்களின் அந்தரங்க தகவல்கள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து சராமாரியான கேள்விகளை எதிர்கொண்டாலும், அனைத்திற்கும் பட்டும் படாமல், லாவகமாக பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

இலங்கை

11,943 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது ஸ்பேஸ்எக்ஸ்

11,943 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும் எவ்வித வேறுபாடுமின்றி அதிவேக இணையதளத்தை வழங்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் என்னும் திட்டத்தின்படி மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி, தொலைத்தொடர்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, உலகின் அனைத்து பகுதிகளிலும் சீரான அதிவேக இணையதள சேவையை வழங்கும் 'ஸ்டார்லிங்க்' என்னும் மிகப் பெரிய திட்டத்தை அந்நிறுவனம் செயற்படுத்தி வருகிறது.

எலான் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எலான் மஸ்க்

இந்த திட்டத்தின்படி, சுமார் 11,943 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு நிரந்தரமாக நிலைநிறுத்தப்படும். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள்கள் பூமியின் அனைத்து பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும்.

இதற்கான முதற்கட்டமாக 4,425 செயற்கைக்கோள்களை விண்ணில் செல்வதற்குரிய அனுமதியை அமெரிக்காவின் தொலைத்தொடர்பு அமைப்பான எஃப்.சி.சியிடம் ஸ்பேஸ்எக்ஸ் பெற்றிருந்த நிலையில் மேலும் 7,518 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அனுமதி கேட்டு அந்நிறுவனம் எஃப்.சி.சியிடம் முன்வைத்த கோரிக்கை கடந்த நவம்பர் மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு தேவையான 11,943 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான மொத்த அனுமதியும் ஸ்பேஸ்எக்ஸிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஸ்டார்லிங்க்' திட்டத்தில் பாரம்பரிய ரேடியோ அலைகளுக்கு பதிலாக லேசர் அலைகள் பயன்படுத்தப்படுவதால், ஒரு நொடிக்கு பல ஜிபி வேகத்தில் இணையதள சேவை பெற முடியுமென்று கருதப்படுகிறது.

இலங்கை

கணினிகள் கண்காணிப்பு

கணினிகள் கண்காணிப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் அனைத்து கணினியிலுள்ள தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அரசு முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட உத்தரவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, குற்றங்கள் தடுப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவை பேணுதல்" போன்ற பல்வேறு காரணங்களுக்காக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நாட்டிலுள்ள கணினிகளில் பதியப்பட்டுள்ள தகவல்களை ஆராய்வதற்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன், 69(1) பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்பு முகமை, மத்திய நேரடி வரித்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, நாட்கோடிக்ஸ் பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவுப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளுக்கும், டெல்லியின் காவல் ஆணையரகம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் பகுதிகளுக்கான சிக்னல் இண்டெலிஜென்ஸ் பிரிவு ஆகியவை மேற்கண்ட அதிகாரத்தை பெற்றன. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், வல்லுநர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கை

மடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது

மடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது

பட மூலாதாரம், ROYOLE

மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி கடந்த அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வந்தது.

சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. ஆனால், எவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரொயோலே என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய அலைபேசியை பிளெக்ஸ்பை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரையையும், கேமிங் பிரியர்களின் பயன்பாட்டை தாக்குப்பிடிக்கும் வகையில் ஸ்னாப்ட்ராகன் நிறுவனத்தின் சமீபத்திய 8 சீரிஸ் சிப், முறையே 20, 16 எம்பி திறனுடைய கேமரா, 6000 mAH திறனுடைய பாட்டெரி ஆகியவற்றுடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வித பயமும் இன்றி குறைந்தது 20,000 முறை இந்த திறன்பேசியை மடித்து பயன்படுத்தலாம் என்று ரொயோலே தெரிவிக்கிறது.

இலங்கை

1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் அறிமுகம்

1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் அறிமுகம்

பட மூலாதாரம், HYPERLOOPTT

மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப் டிடி (Hyperloop Transportation Technologies) நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.

அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சல் மிக்கதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்து, கார், ரயில், விமானம் போன்றவற்றிற்கு அடுத்து மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைப்பர்லூப் டிடி என்ற நிறுவனம் தனது முதலாவது ஹைப்பர்லூப் வாகனத்தின் வடிவமைப்பை வெளியிட்டது. 32 மீட்டர்கள் நீளமும், 5 டன்கள் எடையும் கொண்ட இந்த வாகனத்தில் ஒரே சமயத்தில் 28 முதல் 40 பேர் பயணிக்க முடியும். மிகவும் முக்கியமாக இந்த வாகனம் மணிக்கு 1,223 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இ-சிம்

இ-சிம்

பட மூலாதாரம், Getty Images

உங்களது கைபேசிக்கென்று கொடுக்கப்பட்டுள்ள குண்டூசி போன்ற பொருளை பயன்படுத்தி சிம் கார்டு வைக்கும் டிரேவை கவனமாக திறந்து, மிகச் சிறிய பகுதியில் சிம் கார்டு கீழே விழாமல் உள்ளே வைப்பதற்கு சிரமப்படுபவரா நீங்கள்? அதற்கு மாற்று ஏதாவது உள்ளதா என்று நீங்கள் நினைத்ததுண்டா? இதுவரை நினைத்ததில்லை என்றால் இனியும் நினைக்காதீர்கள்! ஏனெனில் அப்படி ஒரு மாற்று பயன்பாட்டுக்கே வந்துவிட்டது.

சாதாரண சிம் கார்டு பயன்பாட்டு முறைக்கு முடிவுக்கட்டும் இ-சிம் தொழில்நுட்பத்தை ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இ-சிம்களை கொண்டு ஆப்பிளின் புதிய ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அடிப்படையில் இ-சிம் என்பதும் ஒருவகை சிம் கார்டுதான். ஆனால், ஏற்கனவே திறன்பேசியின் மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த சிம் கார்டை நீங்கள் வெளியே எடுக்கவோ, மாற்றவோ முடியாது. அதாவது, நீங்கள் அந்த திறன்பேசியை வாங்குவதற்கு முன்னரே அதனுள் சிம் கார்டு பொருத்தப்பட்டிருக்கும். வருங்காலத்தில் உற்பத்தி செய்யப்படும் திறன்பேசிகளில் சிம் கார்டே இல்லாமல் பயன்படுத்தும் நிலை உருவாகலாம்.

இலங்கை

'இணைய சமநிலை' பரிந்துரைகள் இந்தியாவில் ஏற்பு

இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி இணையதள சேவையை வழங்கும் "இணைய சமநிலை" குறித்த டிராயின் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்) பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

'இணைய சமநிலை' பரிந்துரைகள் இந்தியாவில் ஏற்பு

உலகம் முழுவதும் இணைய சமநிலை குறித்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், சுமார் 500 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட "இணைய சமநிலை" குறித்த பரிந்துரைகள், உலகளவில் வலுவானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இணையதள சேவை நிறுவனமும், அரசாங்கமும் சட்டப்பூர்வமாக நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து இணையதளங்களையும் எவ்வித பாகுபாடுமின்றி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்வதே இணைய சமநிலை அல்லது நெட் நியூட்ராலிட்டி எனப்படும்.

இலங்கை

கூகுளுக்கு வரலாறு காணாத அளவுக்கு அபராதம் விதிப்பு

கூகுளுக்கு வரலாறு காணாத அளவுக்கு அபராதம்

பட மூலாதாரம், GETTY IMAGES/GOOGLE

கூகுள் நிறுவனம் தனது அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டின் மூலம் தேடுபொறி சேவையில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு, விதிகளை மீறி செயல்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அந்நிறுவனத்துக்கு வரலாறு காணாத வகையில் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதத்தை கடந்த ஜூலை 18ஆம் தேதி விதித்தது.

கூகுளின் வணிக செயல்பாடு போட்டி நிறுவனங்களை மட்டுப்படுத்தும் வகையில் விதிகளுக்கு புறம்பாக உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி கட்டுப்பாட்டு அமைப்பில் தொடங்கப்பட்ட இதுகுறித்த வழக்கில் 39 மாதங்களுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணையின்போது அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் கூகுள் தேடுபொறி செயலியையும், குரோம் உலாவியையும் நிறுவாவிட்டால் அதில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கூகுள் பிளே உள்ளிட்ட சேவைகளை பெற முடியாது என்று அந்நிறுவனம் மறைமுகமாக தனது ஆதிக்கத்தை திணிப்பதற்கு முற்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளை முறைப்படுத்தும் ஆணையம் தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: