சானிடரி நாப்கின் ஏற்படுத்தும் உடல் நலப் பிரச்சனை, சுற்றுச் சூழல் கேடுகள்: மாற்று என்ன?

சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் தீங்கு: சானிட்டரி நேப்கினுக்கு மாற்று என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 விதமான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.

வாட்டர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் என மொத்தம் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதை மீறி செயல்படுபவர்கள் மீது அபாரதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி மக்களும் பாக்குமரத் தட்டு, பப்பாளி உறிஞ்சி குழல், வாழை இலை போன்ற பிளாஸ்டிக்குக்கான மாற்றுப் பொருட்களை நாடி வருகின்றனர்.

பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பல்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், சானிட்டரி நாப்கினுக்கும், பிளாஸ்டிக்குக்கும் உள்ள தொடர்பு, அவை சுற்றுச்சூழலுக்கும், பெண்களின் உடல்நலத்துக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு, சானிட்டரி நாப்கின்களுக்கான மாற்று பொருட்கள் அதுதொடர்பான மனரீதியான தடை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

"சானிட்டரி நாப்கின் மட்க 1000 ஆண்டுகள் ஆகும்"

"சானிட்டரி நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுவதாகவும், மேலும் அதிலுள்ள ஒருவித திரவம் நீண்டநேரத்துக்கு பெண்களை சௌகரியாக வைத்திருப்பதாகவும் பல்வேறு பொய் பிரச்சாரங்களும், விளம்பரங்களும் பல்வேறு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு பஞ்சை எடுத்து நீரில் முக்கினால் அதனால் குறிப்பிட்ட அளவு நீரைதான் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதேபோன்று உண்மையிலேயே சானிட்டரி நாப்கின்களில் பருத்தி பயன்படுத்தப்பட்டால் அதனால் எப்படி எட்டு மணிநேரத்துக்கு தாக்குப்பிடிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் 'நம்ம பூமி' என்னும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை செயலதிகாரியான அருள் பிரியா.

நாடெங்கிலும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற சுகாதார கழிவுகள் சரிவர கையாளப்படவில்லை என்ற நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்திவிட்டு நேரடியாக கழிவறைகளில் வீசுகின்றனர். இந்நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோர் கடுமையான சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாவதாக அருள் பிரியா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"நிலத்தில் குவிக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் தானாக மட்குவதற்கு 1000 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படும் இவற்றை எரிப்பதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகிறது. மேலும், சானிட்டரி நாப்கின்களின் நாள்பட்ட பயன்பாடும், டையாக்சினும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை கூட உண்டாக்கலாம்" என்று அவர் எச்சரிக்கிறார்.

சானிட்டரி நாப்கின்களினால் உண்டாகும் பிரச்சனைக்கு உகந்த தீர்வு குறித்து கேட்டபோது, "பாரம்பரிய துணி அடிப்படையிலான செயல்முறையை கைவிடுவதற்கு காரணமாக சுகாதாரரீதியிலான பிரச்சனைகள் சொல்லப்பட்டது. ஆனால், அந்த மாற்றமே தற்போது சமூகத்துக்கும், உடல்நலனுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் நிலையில் போதிய விழிப்புணர்வோடும், வழிகாட்டுதலோடும் மீண்டும் பாரம்பரிய முறைக்கு செல்வதே ஒரே தீர்வு" என்று அவர் கூறுகிறார்.

உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கண்டிப்பாக சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில் மருத்துவர்கள் அதற்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளனர்.

சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெண்கள் நல சிறப்பு மருத்துவர் சியாமளாவிடம் கேட்டபோது, "பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது" என்கிறார்.

"சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன" என்று மருத்துவர் சியாமளா கூறுகிறார்.

சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான காரணம் குறித்து பேசிய அவர், "மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்றுநோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களை பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதாரரீதியாக சாத்தியமே இல்லை" என்று விவரிக்கிறார்.

"இது பாரம்பரியத்துக்கு திரும்ப வேண்டிய நேரம்"

சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல், உடல்ரீதியிலான பாதிப்புகளுக்கு என்னதான் தீர்வு என்று சென்னையை சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் சியாமளாவிடம் கேட்டபோது, "சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இந்தியா முழுவதும், தற்போது கிராமப்புற பகுதிகளிலுள்ள பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் துணி அடிப்படையிலான பாரம்பரிய முறையே சிறந்தது. அதாவது, வீட்டிலேயே பருத்தியிலான இலகுவான துணிகளை கொண்டு தைக்கப்படும் உடையே சிறந்தது" என்று கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மாதவிடாய் காலத்தின்போது துணியை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தியே சானிட்டரி நேப்கின்கள் சந்தையில் இடம்பிடித்த நிலையில், மீண்டும் துணியை பயன்படுத்துவதற்கான அவசியம் என்னவென்று கேள்வியெழுப்பியபோது, "வெறும் துணியை பயன்படுத்துவதன் மூலம் சானிட்டரி நாப்கின்களினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியாது. அதை உருவாக்க தேர்ந்தெடுக்கப்படும் துணியின் தரம், தைக்கப்படும் விதம், பயன்படுத்தும் முறை, வெந்நீரால் அலசுவது, வெயிலில் உலர வைப்பது போன்ற படிநிலைகளை பின்பற்ற வேண்டும்" என்று மருத்துவர் சியாமளா கூறுகிறார்.

சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்று என்ன?

சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் ஏற்படும் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் பாரம்பரிய துணி அடிப்படையிலான முறையை ஏற்றுக்கொள்வதில் பெண்களுக்கு பெரும் தயக்கம் காணப்படுகிறது.

இந்நிலையில், சானிட்டரி நாப்கின்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தவிர, மாதவிடாய் காலத்தின்போது பயன்படுத்தக்கூடிய வேறு வகையாக தயாரிப்புகளை பார்ப்போம்.

மாதவிடாய் கப் (மென்ஸ்ட்ருவல் கப்)

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலேயே தற்போதுதான் இந்த மாதவிடாய் கப் குறித்த விழிப்புணர்வும், பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதாவது, பொதுவாக சிலிக்கானை அல்லது ரப்பரை மூலமாக கொண்டு தயாரிக்கப்படும் இந்த கப்களை மாதவிடாய் காலத்தின்போது பொருத்திக்கொண்டால் அதில் ரத்தம் சேமிக்கப்படும். பிறகு பாதுகாப்பான வழியில் அதை வெளியேற்றிவிட்டு, தயாரிப்பாளரின் அறிவுரையின்படி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.

மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடிய இந்த மாதவிடாய் கப்புகள் ஒப்பீட்டளவில் சுற்றுச்சூழல், உடல்நலத்துக்கு மட்டுமின்றி பொருளாதாரரீதியாகவும் சிறந்ததாக கூறப்பட்டாலும் இதை பயன்படுத்துவதில் இந்திய பெண்களுக்கு பல்வேறு விதமான தயக்கங்கள் உள்ளதாக மருத்துவர் சியாமளா கூறுகிறார்.

உறிபஞ்சுகள் (Tampon)

படத்தின் காப்புரிமை Getty Images

செல்லுலோஸ் அல்லது பருத்தியை கொண்டோ அல்லது இரண்டையுமே சேர்த்தோ தயாரிக்கப்படும் இந்த மாதவிடாய் உறிபஞ்சுகள் ஒருவரது இரத்தம் வெளியேறும் அளவை பொறுத்து பல வகைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன.

மாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உட்கிரகித்துகொள்வதால், பெண்களால் எப்போதும்போல இயல்பாக செயல்படுவது, நீச்சலடிப்பது, குளிப்பது போன்றவற்றை இதை அணிந்துகொண்டே செய்யமுடியுமென்பது இவற்றின் சிறப்பம்சமாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், மாதவிடாய் கப்புகளை போன்றே உறிபஞ்சுகளும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படவில்லை.

இவற்றை தவிர்த்து அதிகம் பிரபலமில்லாத மாதவிடாய்கால உள்ளாடை (Period Pants), நீண்டகாலம் பயன்படுத்தக்கூடிய பருத்தியிலான பேடுகள் போன்றவையும் சந்தைகளில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தயக்கத்துக்கு காரணம் என்ன?

சானிட்டரி நாப்கின்கள் தங்களது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் பெண்கள் தொடர்ந்து அவற்றை பயன்படுத்துவதற்கும், மனரீதியிலான போக்குக்கும் தொடர்புள்ளதா என்று சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் ரம்யா சம்பத்திடம் கேட்டபோது, "ஒரு சிறுமி வயதுக்கு வந்தவுடன் தனது தாய் கூறும் வழிமுறைகளை பின்பற்றுகிறாள். ஒரு கட்டத்திற்கு பிறகு, தன்னை சுற்றியுள்ளவர்களின் வழிமுறையை கண்காணிக்கிறாள்" என்று குறிப்பிட்டார்.

"எனவே, கிராமப்புறங்களில் பெண்கள் பாரம்பரிய துணி அடிப்படையிலான செயல்முறையை தொடர்வதற்கும், நகர்புறங்களிலுள்ள பெண்கள் சானிட்டரி நாப்கின்களுக்கும் மாறியதற்கும் அங்குள்ள சமூக சூழ்நிலையே காரணம். அதே மீறியோ அல்லது தனித்திருக்கவோ அவர்கள் விரும்புவதில்லை" என்று அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

குறிப்பாக, சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மாதவிடாய் கப்புகளுக்கும், உறிபஞ்சுகளுக்கும் மாறுவதற்கு பெண்களிடையே இருக்கும் தயக்கத்து அவை குறித்த பிரபலமின்மையும், விழிப்புணர்வின்மையுமே காரணம். தொலைக்காட்சிகளில், இணையதளங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் இவை குறித்து பிரச்சாரங்களையும், விளம்பரங்களையும் செய்யும்போது பெண்களது மனவோட்டத்தில் மாற்றம் உண்டாக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக கூறப்படுபவை மாதவிடாய் அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுமா என்று கேட்டபோது, "மாதவிடாய் மனஅழுத்தம் என்பது பெண்களில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகிறது" என்று தெரிவித்தார்.

"எனவே, சானிட்டரி நாப்கினோ அல்லது அதன் மாற்று தயாரிப்புகளோ நேரடியாக பெண்களுக்கு எந்த பலனையும் அளிக்காது என்றாலும், சமூக ரீதியிலான அழுத்தத்தை குறைப்பதற்கு பெரிதும் பயன்படும். அதாவது, மாதவிடாய் காலத்தின்போது ஒரு பெண் மூன்று, நான்குமுறை சானிட்டரி நாப்கின்னை மாற்ற வேண்டியிருக்கும். அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் அல்லது பயணம் மேற்கொள்பவர்களுக்கு அது மிகவும் மோசமான அனுபவத்தை தரும் நிலையில் பல மணிநேரங்களுக்கு நிலைத்திருக்கும் மாதவிடாய் கப்புகள் போன்றவை நிச்சய ம் உதவும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: