நெட்ஃப்ளிக்ஸும், ஹாட்ஸ்டாரும் இந்தியாவில் சுயதணிக்கைக்கு ஆர்வம் காட்டுவதேன்?

  • மான்சி தாஸ்
  • பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் இணையதளம் மூலமாக ஆன்லைன் தொடர் நாடகங்களை ஒளிபரப்பும் சில தளங்கள் தங்கள் உள்ளடக்கங்களை சுயதணிக்கை செய்ய திட்டமிட்டுள்ளன.

இதற்காக, மொபைல் மற்றும் ஆன்லைன் சேவைகள் வழங்கும் துறையில் இயங்கும் நிறுவனமான 'இண்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேசன் (IAMAI) உடன் இணைந்து வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜியோ, ஜீ ஃபைவ், ஆல்ட் பாலாஜி மற்றும் வேறு சில ஆன்லைன் தளங்களும் இந்த வரைவுத் திட்டத்தை பின்பற்றவிருக்கின்றன.

இந்தியாவில் திரைப்படம், அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றின் உள்ளடக்கங்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் முறைமை இருந்தாலும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளடக்கங்களை தணிக்கை செய்வதற்கான முறைமையோ, சட்டங்களோ இல்லை.

"ஆன்லைன் உள்ளடக்க வழங்குநர்களின் சிறந்த நடைமுறைகளுக்கான நெறிமுறைகள்" என்ற இந்த வரைவுத் திட்டம் பிபிசிக்கு கிடைத்தது.

"வாடிக்கையாளர்களின் நலன்களுடன் இணைந்து நிறுவனங்களின் படைப்பு சுதந்திரத்தை பாதுகாப்பதே நோக்கம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், சுயதணிக்கை முயற்சி என்பது, தங்கள் மீதான புகார்களைத் தாங்களே விசாரிப்பதைப் போல இருப்பதாக துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும், எதிர்காலத்தில் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நிறுவனங்களின் முன்முயற்சி இது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எதுபோன்ற உள்ளடக்கங்களை தடை செய்யலாம்?

இந்த வரைவு திட்டத்தில் கையெழுத்திடும் தளங்கள் அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அடிப்படையில் ஐந்து வகையான உள்ளடக்கங்களை காண்பிப்பதை தவிர்க்க வேண்டும். அவை:

  • தேசிய சின்னம் மற்றும் தேசியக் கொடியை தவறான வழியில் சித்தரிப்பது.
  • எந்தவொரு வடிவத்திலும் (நேரடியாகவோ அல்லது சித்தரித்தோ), குழந்தைகள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காட்டுவது; குழந்தைகளின் அந்தரங்க மற்றும் பிறப்புறுப்புகளை தவறான முறையில் காட்டுவது.
  • எந்தவொரு சாதி, இன, வகுப்பின் மத உணர்வுகளை பாதிக்குமாறு காட்டுவது.
  • இந்தியா மற்றும் அரசு அமைப்புகளுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது; வன்முறைகளை தவறான வழியில் சித்தரிப்பது.
  • சட்ட ரீதியாகவோ, நீதிமன்ற ஆணை மூலமாகவோ ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருக்கும் விஷயங்களை ஆன்லைன் தளங்கள் ஒளிபரப்புவது.

"இந்தியாவின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, எங்கள் நிறுவனம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று நெட்வொர்க் 18 குழுமத்தின் பொது ஆலோசகர் சிப்ரா ஜடானா கூறுகிறார்.

"தனது உள்ளடக்கத்தை சுயமாகவே தணிக்கை செய்துக் கொள்ளும் தயாரிப்பு நிறுவனங்களின் முடிவு, நுகர்வோருக்கான பொறுப்புணர்வை அவர்களுக்கு சுயமாகவே அதிகரிக்கும்" என்று சோனி பிக்சர்ஸ் நெட்வர்க்கின் பொது ஆலோசகர் அஷோக் நம்பீசன் கூறுகிறார்.

புகார்கள் என்னவாகும்?

தற்போதைய வரைவுத் திட்டத்தின்படி, நுகர்வோர்களில் யாராக்காவது உள்ளடக்கம் தொடர்பான புகார் இருந்தால், அவர் நிறுவனத்தை அணுகலாம். இந்த புகார்களை கவனிப்பதற்காக, நிறுவனம் தனது அதிகாரி ஒருவரை நியமிக்கும் அல்லது அதற்காக பிரத்யேக துறை ஒன்றை உருவாக்கும்.

இந்தத் துறைகள் நேரடியாக இத்தகைய வழக்குகளைத் தீர்த்து வைக்கும்.

இந்த வரைவு அறிக்கையில் முத்தாய்ப்பாக முடிவாக கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றிற்கு ஆன்லைன் தளங்களின் உள்ளடக்கம் தொடர்பாக புகார் ஏதும் வந்தால், அவையும் நிறுவனங்களின் புகார் தீர்க்கும் துறையை அணுகலாம். வரைவு அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப அந்த புகார்கள் தீர்த்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியா?

இந்த சுய ஒழுங்குமுறை என்பது, நுகர்வோரின் நலனை மட்டுமல்ல, நிறுவனங்களின் நலனையும் பாதுகாக்காது என்று 'Internet Freedom Foundation' கூறுகிறது.

சில நிறுவனங்கள் தற்போது ஒன்றிணைந்து, தங்கள் மீது வரும் புகார்களை தங்களுக்கே அனுப்பவேண்டும் என்றும் அரசிற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இண்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் (Internet Freedom Foundation) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அபர் குப்தா இவ்வாறு கூறுகிறார்: "இந்த வரைவு திட்டத்திற்கு அரசிடம் இந்த ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுவிடுவார்கள். அதன்பிறகு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் எந்த சட்டமும் உருவாக்கப்படாது. ஏனென்றால் நிறுவனங்களிடமே உள்ளடக்கத்தை தணிக்கை செய்யும் ஒழுங்கு விதிமுறைகள் இருக்கிறது என்று அரசு கூறிவிடும்.

"சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய விதிமுறைகள் நாளடைவில் அந்தத் துறையின் பொது விதிகளாக கருதப்பட்டு, புதிதாக களத்தில் இறங்கும் நிறுவனங்களுக்கும் விரிவடையும். இதன் பொருள்? இந்த விதிமுறைகளை உருவாக்காத நிறுவனங்களும் இதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் உருவாகும்" என்று அபர் குப்தா குறிப்பிடுகிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"அச்சு ஊடகங்களுக்கு எதிரான புகார்களை பிரெஸ் கவுன்சிலுக்கு அனுப்பாமல், எந்த நிறுவனத்தின் மீது புகார் வந்திருக்கிறதோ, அதற்கே அனுப்பச் சொன்னால், என்ன நடக்கும்?" என்று அவர் நிதர்சனத்தை முன்வைக்கிறார்.

அது மட்டுமல்ல, எதுபோன்ற உள்ளடகங்கள் தணிக்கை செய்யப்படும் என்பதில் கடுமையான சிக்கல் உள்ளது. எந்த வகையான உள்ளடக்கங்கள் தணிக்கை செய்யப்படும் என்பது இந்த வரைவுத் திட்டத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை. அதோடு, சுய தணிக்கை செய்யப்பட்ட பின்னர் உள்ளடக்கம் மாறுதல் செய்யப்படுமா என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இது சம்பந்தமாக, IAMAI-வுக்கு, இண்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

"அமெரிக்க நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், அமெரிக்காவில் ஏன் இதுபோன்ற விதிமுறைகளை உருவாக்க முன்வரவில்லை என்பது சிந்திக்கக்கூடிய விஷயம்" என்று கூறுகிறார் அபார் குப்தா.

ஆன்லைன் தொடர்களில் தணிக்கை தேவை என்ற விவகாரம் எப்படி எழுந்தது?

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் தொடர்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை சமீபத்தில் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டில், நெட்ஃபிளிக்ஸில் 'சேக்ரட் கேம்ஸ்' என்ற இணையத் தொடர் வந்தது. அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி பற்றிய தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான சர்ச்சைகள் வெடித்தன.

இது தொடர்பாக, அந்தத் தொடரில் நடித்திருந்த நவாசுதீன் சித்திகி மற்றும் தொடரின் தயாரிப்பாளருக்கு எதிராக புகார் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அந்த குறிப்பிட்ட வசனத்தை அகற்ற நெட்ஃபிளிக்ஸ் மறுத்துவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :