வளி மண்டலத்தில் கரியமில வாயு: 2019-ல் உச்சத்துக்குப் போகும்

முன்னெப்போதுமில்லாத வெயில் இந்த ஆண்டு ஏற்படுமா? படத்தின் காப்புரிமை Andy Lyons

முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (கரியமில வாயு) அளவு இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டனின் வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கரியமில வாயுவை ஆக்ஸிஜனாக மாற்றும் காடுகளின் பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து வரும் அதே வேளையில், மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியாகும் கரியமிலவாயு அளவும் அதிகரித்து வருகிறது.

அதே வேளையில், சமீபத்திய ஆண்டுகளில் வெப்பமண்டல பசிபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அங்கு மரங்கள், செடிகளின் வளர்ச்சி அளவு குறைந்து கரியமிலவாயு உறிஞ்சப்படுவதும் குறைந்து வருகிறது.

இதன் விளைவாக, 2018ஆம் ஆண்டை காட்டிலும், 2019ஆம் ஆண்டு கரியமிலவாயு வெளியாவது அதிகளவில் காணப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1958 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவின் ஹவாயிலுள்ள ஆராய்ச்சி ஆய்வு மையம் வளிமண்டலத்திலுள்ள ரசாயன கலவை பற்றிய தரவுகளை தொடர்ந்து கண்காணித்து சேகரித்து வருகிறது.

இந்த ஆய்வகத்தில் கரியமிலவாயுவின் அளவை பதிவிட ஆரம்பித்ததிலிருந்து இதுவரை வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவின் செறிவு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு மற்றும் காடுகள் அழிப்பே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

காடுகள், நிலம் மற்றும் கடல் ஆகியவற்றின் பங்களிப்பு இல்லையென்றால், மனிதர்களின் கேடு விளைவிக்கக்கூடிய இயற்கைக்கு எதிரான செயல்பாட்டின் காரணமாக வளிமண்டல கரியமிலவாயுவின் செறிவு இன்னும் மிகப் பெரிய அளவில் உயர்த்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும், அவற்றின் திறன் காலத்தை சார்ந்து மாறுபடக்கூடியது.

கோடைகாலத்தில் மரங்களும், செடிகளும் வளரத் தொடங்கி அதிகளவிலான கரியமிலவாயுவை உறிஞ்சுவதால் வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு குறைந்து காணப்படுகிறது. குளிர்காலத்தின்போது மரங்களிலுள்ள இலைகள் உதிர்ந்து கரியமிலவாயுவை உறிஞ்சுவது குறைவதால் வளிமண்டலத்தில் அவற்றின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.

அதே சமயத்தில், வெப்பநிலை இயல்பான அளவைவிட அதிகமாகவும், வறண்டும் காணப்பட்டால் மரங்கள், செடிகளின் வளர்ச்சி குறைவதுடன் கரியமிலவாயுவை உறிஞ்சுவதும் குறைகிறது.

"சூடான கடல் மேற்பரப்பு நிலைமைகள் அடுத்த சில மாதங்கள் தொடர்வதுடன், பிறகு அது தாவரங்களின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்" என்று வானிலை ஆராய்ச்சியாளர் கிறிஸ் ஜோன்ஸ் கூறுகிறார்.

"அதிகரித்து வரும் வெப்பம் உலகம் முழுவதும் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. சில பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியின் காரணமாக காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு பெரும் சேதத்தை உருவாக்குகிறது. அதேபோன்று, மழைக்காடுகளில் அதிகரிக்கும் வெப்பம் தாவரங்களின் வளர்ச்சியை பாதிக்கிறது."

வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவின் அளவு, 2018ஐ ஆண்டை காட்டிலும், 2019ஆம் ஆண்டு அதிகரிக்கும் என்று பிரிட்டனின் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

அதாவது, 2019-ம் ஆண்டு வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் செறிவு 411ppm என்றளவில் இருக்குமென்று கருதப்படுகிறது. உலக வரலாற்றில் முதல் முறையாக 400ppm என்ற அளவு 2013ஆம் ஆண்டு பதிவாகியது.

படத்தின் காப்புரிமை Getty Images

எல் நினோ ஏற்பட்ட 2015-16, 1997-1998 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கணிக்கப்பட்டுள்ள அளவு அதிகமாக இருக்காது. இந்த ஆய்வகத்தில் வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவின் அளவு பதிவுசெய்யப்பட ஆரம்பித்ததிலிருந்து இதுவரை ஆறு முறை மட்டுமே 411ppm என்ற அளவுக்கு அதிகமாக கரியமில வாயு செறிவு அதிகரித்துள்ளது.

"20ஆம் நூற்றாண்டின் மொத்த காலப்பகுதியிலும் அதிகரித்ததைப் போன்று, தற்போதும் கரியமிலவாயுவின் செறிவு ஒவ்வொரு வருடமும் சீராக அதிகரித்து வருகிறது" என்று ஜோன்ஸ் கூறுகிறார்.

"கரியமிலவாயுவின் செறிவு பதிவிடப்பட ஆரம்பித்ததிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச அளவுகளில் ஒன்றாக அடுத்த ஆண்டு இருக்கும் என்று கருதுகிறோம்."

பிரிட்டனின் வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக மற்ற ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

"நாம் பெட்ரோலிய எரிபொருளை சார்ந்திருப்பதே அதிகரித்து வரும் கரியமிலவாயு செறிவிற்கு காரணம்" என்று கூறுகிறார் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே அமைப்பை சேர்ந்த அண்ணா ஜோன்ஸ்.

படத்தின் காப்புரிமை Getty Images

"வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கரியமிலவாயு செறிவானது, புவி வெப்பநிலை, தொழிற்புரட்சிக்கு முந்திய நிலையைக் காட்டிலும் 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிக்காமல் பாதுகாக்கவேண்டும் என்ற இலக்குக்கு எதிராக உள்ளது."

அதிகரித்து வரும் கரியமிலவாயுவின் செறிவு மட்டும் இந்தாண்டு வரலாற்றிலேயே அதிகபட்ச வெப்பநிலையை உலகம் சந்திப்பதற்கு வித்திடும் என்று கருதமுடியாது என்றும், இன்னும்பிற இயற்கை காரணிகளை பொறுத்தே இதன் முடிவு அமையுமென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களது ஆராய்ச்சி முறையின் மூலம் கடந்த நான்காண்டுகளாக மேற்கொண்டு வரும் கணிப்புகள் துல்லியமானதாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் இதை பயன்படுத்தி நச்சு வாயுக்களின் அளவை குறைப்பதற்காக திட்டத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளுக்கு உதவ முடியமென்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :