மர்மத் தவளை - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியத் தவளை இனம்

மர்மத் தவளை - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியத் தவளை இனம்

பட மூலாதாரம், SD Biju

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் , புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வரும் சோனாலி கார்க் எனும் மாணவியும், அவரது ஆய்வு வழிகாட்டி சத்யபாமா தாஸ் பிஜு என்பவரும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழ் புதிய தவளை இனத்தை கண்டுபிடித்த இருவரிடமும் பேசியது.

Mysticellus (மிஷ்டிசெலஸ்) என்று இந்த புதிய, தவளை பேரினத்திற்கு (Genus) பெயர் சூட்டி உள்ளனர்.

பெயர்க்காரணம்

Mysticellus என்னும் இலத்தீன் வார்த்தை Mysterious மற்றும் Diminutive ஆகிய இரண்டு வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதாவது மர்மமான, மிகச் சிறிய என்று பொருள். இனப்பெருக்க காலத்தில் மட்டுமே இவை வெளியில் வருகின்றன, மற்ற நேரங்களில் இவை ரகசிய வாழ்வையே வாழ்கின்றன.

இவற்றின் வாய்ப்பகுதி மிகக் குறுகியதாக இருக்கும். எனவேதான், இதற்கு மர்மமான - குறுகிய வாய் உடைய தவளை(Mysterious Narrow-mouthed Frog) என்று பொதுப் பெயர் சூட்டி உள்ளனர்.

கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது?

சோனாலி கார்க் தனது கள ஆய்வின்போது வயநாட்டில் உள்ள ஒரு குட்டையில் வித்தியாசமான தலைப்பிரட்டைகளைப் (Tadpoles) பார்த்திருக்கிறார். அதனை எடுத்து ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்து பார்த்த பொழுது அதன் ஜீன்கள் ஏற்கனவே கண்டறியப்பட்ட தவளை இனங்களின் மூலக்கூறுகளோடு ஒத்துப் போகவில்லை.

எனவே , அந்த இனத்தின் முதிர்ந்த தவளையினை தேடியுள்ளார். இரண்டு வருடங்கள் தேடிய பின்னர் 2015ம் வருடம், தென்மேற்கு பருவ மழை காலத்தில் , ஒரு குட்டையைச் சுற்றியுள்ள புல்வெளியில் 200க்கும் மேற்பட்ட தவளைகளைப் பார்த்துள்ளார்.

பட மூலாதாரம், SD Biju.

அவை இனப்பெருக்கத்திற்காக வெளியில் வந்துள்ளன. மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே பார்வைக்கு கிடைத்துள்ள அத்தவளைகள் பின்பு எங்கு சென்றன என கண்டறியவே முடியவில்லை.

ஆய்வுக்குழு அதே இடத்தில் வருடம் முழுதும் தேடியும் கிடைக்கவே இல்லை. இனப்பெருக்கத்திற்காக வெளியில் வரும் நான்கு நாட்கள் மட்டுமே இந்த தவளை இனத்தைப் பார்க்க முடியும், மற்ற நாட்களில் இவை ஒரு ரகசிய வாழ்வையே வாழ்கின்றன. எனவேதான் இதற்கு மர்மத் தவளை என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பினை பிப்ரவரி 13, 2019 அன்று வெளியான scientific reports என்னும் அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர். முதன் முதலில் 2013ல் இதன் தலைப்பிரட்டையைப் பார்த்தேன், பிறகு இரண்டு வருடங்கள் தேடி 2015ல் முதிர்ந்த தவளையைப் பார்த்தோம், அதன் பின்னும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான் கண்டுபிடிக்க முடிந்தது என்கிறார் சோனாலி கார்க்.

நெருங்கிய சொந்தம்...

இந்த தவளை இனம், இதற்கு முன்னால் உலகில் கண்டறியப்பட்டுள்ள தவளை இனங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய இனம் ஆகும். இந்த தவளை இனத்தோடு மிக நெருக்கமாக ஒத்துப்போக கூடிய மற்றோரு தவளை இனம், இங்கிருந்து 2000 கி.மீ தொலைவில் உள்ள ஆசிய நிலப்பரப்பில் காணப்படுகிறது.

அந்தத் தவளைகள் கம்போடியா, மலேசியா, இந்தோனீசியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன. எனவே , இந்த கண்டுபிடிப்புகள் கோண்டுவானா (Gondwana) பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் என்றார் பிஜு.

(கண்டங்கள் உருவாகும் முன்னர், 'பாஞ்சியா' என்ற ஒரே நிலப்பரப்பு பூமியில் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக நிலவியல் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அது பிரிந்து கோண்டுவானா, லோரேசியா என இரு நிலப்பரப்புகள் ஆனது.)

பட மூலாதாரம், SD Biju.

மேற்குத் தொடர்ச்சி மலையும் இருவாழ்விகளும்

புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் இருவாழ்விகள்(Amphibians), அதாவது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய தவளை , தேரை இனங்களின் பட்டியலில் புதியதாக சேர்ந்துள்ளது.

உலகில் உள்ள 34 பல்லுயிரிய செழுமை மிக்க (biodiversity hotspot) பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இந்திய தவளை இனங்களில் அதிகமான இனங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில்தான் காணப்படுகின்றன. அதிலும், மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 80 சதவீத தவளை இனங்கள் உலகில் வேறு எங்கும் காணப்படாத மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிட வாழ்விகள். ஆங்கிலத்தில் Endemic Species என்பர்.

கடந்த பத்தாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இருவாழ்வி இனங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிரியத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக இருக்கின்றது என்கிறார் சோனாலி கார்க்.

தவளைகளின் அழிவு

தவளை இனங்கள் மிகப்பெரும் அழிவினை சந்தித்துக்கொண்டு இருக்கின்றன. புவியில் மூன்றில் ஒரு பங்கு இருவாழ்விகள் அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் தவளை இனங்கள் மிக அதிக அளவு சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. முக்கியமாக மனிதர்களின் செயல்பாடுகள்தான் காரணம்.

அதன் வாழ்விடங்களை அழித்தல், காடுகள் அழிக்கப்படுதல், நிலப்பயன்பாட்டில் செய்யும் மாற்றங்கள், அளவில்லாத சூழல் மாசுபாடு புவியில் புவியில் உலக பருவநிலை மாற்றம், சூழல் மாசுபாடு ஆகிய காரணங்களால் தவளைகள் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது என்கிறார் பிஜு.

தவளைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இந்த உயிர்ச் சூழலுக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களித்துக்கொண்டுதான் இருக்கும். புலியும், யானையும் காட்டிற்கு எவ்வளவு அவசியமோ அதுபோல தவளைகளும் ,தேரைகளும் அவசியம்.

தவளைகள் பூச்சிகளை உண்பதாலும், பாம்பு போன்ற பிற உயிர்களுக்கு உணவாகவும் இருப்பதால் உணவுச் சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றது. எனவே அறுபடாத உணவுச் சங்கிலிக்கு தவளைகளும் அவசியம் என்கிறார் பிஜு.

முந்தைய கண்டுபிடிப்புகள்

பிஜு இதுவரை 90 வகையான தவளைகளை கண்டறிந்து வகைப்படுத்தி உள்ளார். இவர் “தவளை மனிதர்” என்றே அழைக்கப்படுகிறார். சோனாலி கார்க் 40 வகையான தவளைகளை கண்டறிந்து உள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :