சாம்சங் கேலக்சி ஃபோல்டு : ஆறு கேமரா, இரண்டு பேட்டரி: மடித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியீடு

சாம்சங்

பட மூலாதாரம், Getty Images

தொழில்நுட்ப உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த மடித்து விரித்து பயன்டுத்தக்கூடிய அலைபேசியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆப்பிள், பிக்சல், ஒன்பிளஸ், எல்ஜி, சோனி உள்ளிட்ட முன்னணி அலைபேசி தயாரிப்பாளர்களை முந்திக்கொண்டு, அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தனது மடித்து, விரித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

சாம்சங் காலக்சி ஃபோல்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலைபேசி 4ஜி, 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடப்படுகிறது. முதலாவதாக சாம்சங் காலக்சி ஃபோல்டு 4ஜி அலைபேசி வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1980 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாயில் சுமார் 1,40,000 இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

சாம்சங் காலக்சி ஃபோல்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலைபேசி 4ஜி, 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடப்படுகிறது. இரண்டு வகை அலைபேசிகளுமே 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் ஆகிய இரண்டு திரைகளை கொண்டுள்ளது.

அதாவது, இந்த அலைபேசி மடித்த நிலையில் இருக்கும்போது, 4.6 இன்ச் கொண்ட சாதாரணமான அலைபேசி போன்று பயன்படுத்த முடியும். மடித்திருக்கும் அலைபேசியை விரிக்கும்போது 7.3 இன்ச் கொண்ட டேப்ளட்டாக மாறுகிறது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் 4.3 இன்ச் திரையில் செய்துகொண்டிருக்கும் வேலையை, அலைபேசியை விரிப்பதன் மூலம் ஒரே நொடியில் 7.3 இன்ச் திரையில் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

பட மூலாதாரம், Getty Images

இந்த அலைபேசியின் பிராசசரை எந்த நிறுவனம் வடிவமைக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அது 7என்எம் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசியின் சேமிப்பு திறனை பொறுத்தவரை, 12 ஜிபி ரேமும், 512 ஜிபி ராமும் கொண்டுள்ளது. குறிப்பாக அதிவேக தரவு பரிமாற்றத்திற்கு உதவும் யுனிவர்சல் பிளாஷ் ஸ்டோரேஜ் 3.0வை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

இந்த அலைபேசியில் இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது புதுமையான சிறம்பம்சமாக கருதப்படுகிறது. அதாவது, 4.3 இன்ச் திரைக்கு தனியே ஒரு பேட்டரியும், 7.3 இன்ச் திரைக்கு மற்றொரு பேட்டரியும் என மொத்தம் 4,380 எம்ஏஎச் திறனை கொண்ட பேட்டரி உள்ளது.

அலைபேசியை கொண்டே தொழில்முறை புகைப்பட கலைஞர்களுக்கு சவால் விடுக்கும் இந்த காலத்தில், சாம்சங் காலக்சி ஃபோல்டு அலைபேசியில் மொத்தம் ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது, 16 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட வைடு-ஆங்கில் கேமரா, 12 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ கேமரா ஆகியவை அலைபேசியின் பின்புறமும், அதுமட்டுமன்றி இரண்டு கேமராக்கள் அலைபேசியின் மற்றொரு திரையிலும் மற்றும் 10 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

சாம்சங் காலக்சி ஃபோல்டு அலைபேசியில் ஒரே நேரத்தில் மூன்று செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். ஆம், நீங்கள் யூடியூபில் காணொளி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே சமயத்தில், அதே திரையில் வாட்ஸ்அப், கூகுள் குரோம் போன்ற இருவேறு செயலிகளை ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

நிறங்கள், விலை, வெளியிடப்படும் தேதி என்ன?

நேற்று அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட இந்த அலைபேசி பச்சை, நீலம், வெள்ளி, கருப்பு ஆகிய நிறங்களில் வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதலாவதாக அமெரிக்காவில் வெளியிடப்படும் என்றும், பிறகு ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்ட பின்பு, இதன் விற்பனை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படுத்தப்படுமென்று அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

சாம்சங் காலக்சி ஃபோல்டு அலைபேசி ஒரே நினைவகத்தை கொண்டுள்ளதால், அதன் விலையில் எவ்வித எவ்வித மாற்றமுமில்லை. தற்போதைக்கு 1,980 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,40,000க்கு விற்பனை செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே அலைபேசியின் சிறப்பம்சங்களுடன் கூடிய 5ஜி மாடல் வரும் மே மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற என்னென்ன அலைபேசிகள் அறிவிக்கப்பட்டன?

சாம்சங் நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சியானது, அந்நிறுவனத்தின் வெற்றிகரமான அலைபேசி வகையான எஸ் சீரிஸின் பத்தாவது வருடத்தை கொண்டாடும் வகையிலே இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில், சாம்சங் காலக்ஸி எஸ்10, எஸ்10 பிளஸ், எஸ்10இ ஆகிய மூன்று புதிய அலைபேசிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, காலக்ஸி எஸ்10 அலைபேசியின் 5ஜி வகை இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 53,000 ரூபாயிலிருந்து தொடங்கும் இவற்றின் விலை அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாம்சங் காலக்ஸி எஸ் 9ஐ விட ஒரு வாரம் முன்னதாக, அதாவது வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதியே மூன்று வகை அலைபேசிகளும் விற்பனைக்கு வருகின்றன.

அலைபேசிகள் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச்களும் நேற்று அறிவிக்கப்பட்டன. சாதாரண பயன்பாட்டாளர்களுக்கு காலக்ஸி வாட்ச் ஆக்டிவ் என்ற ஸ்மார்ட் வாட்சும், உடற்கட்டு பிரியர்களுக்கு காலக்ஸி பிட், பிட் இ ஆகிய ஸ்மார்ட் வாட்ச்களும் மார்ச் மாதம் முதல் ஒன்றன் பின்னொன்றாக விற்பனைக்கு வருகின்றன

உலகின் முதல் மடித்து பயன்டுத்தக்கூடிய அலைபேசி எது?

மடித்து, விரித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியிடும் முன்னணி நிறுவனங்களின் போட்டியில் சாம்சங் நிறுவனம் வெற்றிபெற்றுள்ளதாக கருதப்பட்டாலும், சில மாதங்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவை சேர்ந்த

ரொயோலே என்ற ஸ்டார்ட்-அப் விற்பனைக்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரையையும், கேமிங் பிரியர்களின் பயன்பாட்டை தாக்குப்பிடிக்கும் வகையில் ஸ்னாப்ட்ராகன் நிறுவனத்தின் சமீபத்திய 8 சீரிஸ் சிப், முறையே 20, 16 எம்பி திறனுடைய கேமரா, 6000 mAH திறனுடைய பாட்டெரி ஆகியவற்றுடன் ரொயோலேவின் அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

"சாதாரண திறன்பேசியுடன் ஒப்பிடும்போது எங்களது தயாரிப்பு பயன்பாட்டாளர்களுக்கு தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான, வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளோம்" என்று இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான பில் லியூ கூறியிருந்தார்.

எவ்வித பயமும் இன்றி குறைந்தது 20,000 முறை இந்த திறன்பேசியை மடித்து பயன்படுத்தலாம் என்று ரொயோலே நம்பிக்கை தெரிவிக்கிறது.

காணொளிக் குறிப்பு,

உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எதுவென தெரியுமா?

128ஜிபி மற்றும் 256ஜிபி பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த திறன்பேசியின் தொடக்க விலை சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

எஸ் மாடல் கைபேசிகள் கடந்து வந்த பாதை

கேலக்ஸி எஸ் (2010)

கேலக்ஸி எஸ் மாடல் கைபேசிகள் ஆப்பிள் ஐ போன் 4 மாடல் வந்த சமயத்தில் வெளியிடப்பட்டது. நான்கு இன்ச் அளவு கொண்ட திரை மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆகியவற்றை கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் ஆண்ட்ராய்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல்களில் கேலக்ஸிக்கு போட்டியாக எச் டி சி டிசைர் இருந்தது.

கேலக்ஸி எஸ்2 (2011)

கேலக்ஸி எஸ்-ஐவிட கேலக்ஸி எஸ்2வின் திரை அளவு பெரிது. மொபைலின் முன்பக்கத்தில் உள்ள கேமராவின் ரெசலியூஷன் 8 எம்பி. அதன் இயங்குதிறனும் டியூவல் கோர்.

ஹோம் கீயை அழுத்தினாலே அன்லாக் ஆகும் வண்ணம் இந்த கைபேசி வடிவமைக்கப்பட்டிருந்தது. மில்லியன் கணக்கில் விற்பனையான இந்த மொபைல் விற்பனை ஆகி அந்த சமயத்தில் மொபைல் சந்தையில் கோலோச்சிய நோக்கியாவை பின்னுக்கு தள்ளியது.

கேலக்ஸி எஸ் 3(2012)

நகைச்சுவையாக சொல்ல வேண்டுமானால் சாம்சங் நிறுவனம் வளர வளர சாம்சங்கின் திரையும் வளர்ந்துக் கொண்டே சென்றுள்ளது.

வெளி ஒளிக்கு தகுந்த வண்ணம் டிஸ்பிளே பிரைட்னஸ் மாறும் வண்ணம் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் நம் வார்த்தைகளுக்கு இந்த மொபைல் கட்டுப்பட்டது. அதாவது நாம் கைகளை கொண்டி இயக்காமல், புகைப்படம் எடுக்க, பாடல்களை இசைக்க நாம் பேசினாலே போதும் என்ற வண்ணம் இந்த கைபேசி வடிவமைக்கப்பட்டிருந்தது.

கேலக்ஸி எஸ் 4 (2013)

கைபேசியை தொடாமலே இயக்கும் வண்ண, இந்த எஸ்4 வகை கைபேசி மேம்படுத்தப்பட்டிருந்தது.

நம் கண் அசைவிலேயே பக்கங்கள் நகரும் வண்ணம், கை அசைவிலேயே அழைப்புகளை ஏற்கும் வண்ணம் இந்த கைபேசி வடிவமைக்கப்பட்டிருந்தது.

முன் பகுதியில் உள்ள கேமராவில் எடுக்கப்பட்ட படம் மற்றும் பின் பகுதியில் உள்ள கேமராவில் எடுக்கப்பட்ட படம் இரண்டையும் இணைக்கும் வண்ணம் இந்த கைபேசி இருந்தது.

எதிர்பார்த்த அளவுக்கு இந்த கைபேசி இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.

கேலக்ஸி எஸ்5(2014)

கைரேகை ஸ்கேனர் இந்த கைபேசியில் இருந்தது.

அது போல பேட்டரியை சேமிப்பதற்காக கருப்பு வெள்ளௌ மோடும் இந்த கைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

கேல்க்ஸ் எஸ்6 (2015)

ஆடமபர உணர்வை இந்த கைபேசி பயனர்களுக்கு கொடுத்தது.

எட்ஜ் வெர்சன் மற்றும் மெட்டல் ப்ரேம் கண்ணாடி பின்பகுதி அனைவரையும் ஈர்த்தது. ஆனால் அதே நேரம் எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.

வாட்டர் ரெசிஸ்டன்ஸாக இல்லை என்று இந்த கைபேசியை விமர்சித்தனர்.

கேலக்ஸி எஸ்7 (2016)

கேமிரா வசதிக்காக இந்த மொபைல் பெரிதும் பாரட்டப்பட்டய்ஜி. குறைவான ஒளியிலேயே புகைப்படம் எடுக்கும் வண்ணம் இந்த கைபேசி இருந்தது. ஆட்டோ ஃபோக்ஸும் சிறப்பாக இருந்ததாக இந்த கைபேசியை பாராட்டினர்.

கேலக்ஸி எஸ்8 (2017)

சாம்சங் குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்த சமயம் அது. பல சர்ச்சைகளிலும் அந்த நிறுவனம் சிக்கியது. அதன் துணை தலைவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், அந்த நிறுவனத்திற்கு ஒரு கம்பேக்காக அமைந்தது.

கேலக்ஸி எஸ்9 (2018)

ஏராளமான கேமிரா அம்சங்கள் இந்த எஸ் 9 மற்றும் எஸ்9 + கைபேசியில் இருந்தன. ஸ்லோ மோஷன் வசதிகள் இந்த மாடலில் இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

ஆனால் விற்பனை மந்தமாகவே இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :