PewDiePie Vs T-Series: ஸ்வீடன் - இந்தியா இடையே யூடியூபில் போர் - வெல்லப்போவது யார்?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
ஸ்வீடன் - இந்தியா இடையே யூடியூபில் போர் - வெல்லப்போவது யார்?

பட மூலாதாரம், PEWDIEPIE, YOUTUBE / T-SERIES

ஸ்வீடனுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான போர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது! குழம்பிவிட வேண்டாம். இது முப்படைகளும் நிஜத்தில் மோதிக்கொள்ளும் போரல்ல; ஸ்வீடனை சேர்ந்த ஒரு தனி மனிதரும், இந்தியாவை சேர்ந்த ஒரு இசை வெளியீட்டு நிறுவனமும் யூடியூபில் மோதிக் கொள்ளும் போர்.

ஸ்வீடனை சேர்ந்த பிரபல யூடியூப் பதிவாளர் பெவீக்ஸ் அர்விட் உல்ஃப் கஜெல்பெர்க்கு சொந்தமான பியூடைபை (PewDiePie) என்ற யூடியூப் பக்கம் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அதிக சந்தாதாரர்களை கொண்ட யூடியூப் பக்கமாக விளங்கி வருகிறது.

தற்போது கிட்டதட்ட 8.6 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ள இந்த பக்கத்திற்கும், இந்தியாவை சேர்ந்த சினிமா-இசை வெளியீட்டு நிறுவனமான டி-சீரிஸின் யூடியூப் பக்கத்திற்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து கடும் போட்டி நிலவி வருகிறது.

பட மூலாதாரம், Twitter

அதாவது, உலகளவில் அதிக சந்தாதாரர்களை கொண்ட யூடியூப் பக்கம் என்ற பட்டத்தை, இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு பியூடைபையும், முந்திக்கொண்டு சாதனை படைப்பதற்கு டி-சீரிஸும் கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

உருமாறும் யூடியூபின் முகம்

கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூப் காணொளி தளம் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு தனிபர் தனது திறமைகளை உலகெங்கும் பரப்பும் ஊடகமாக இது தொடக்காலத்தில் விளங்கியது. காலம் செல்லச்செல்ல இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமானதுடன், பல்வேறு துறையை சேர்ந்த நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகள் குறித்தும், சேவைகள் குறித்தும் விளக்கும் இடமாக மாறத் தொடங்கியது.

பட மூலாதாரம், YOUTUBE

தற்போது பள்ளி கல்வி முதல் முனைவர் பட்ட ஆராய்ச்சிவரை, சமையல் முதல் ஹேக்கிங் வரை எண்ணிலடங்கா விடயங்கள் குறித்து தெரிந்துகொள்ளும் களஞ்சியமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்திய ஆண்டுகளாக யூடியூப் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கத்துடன், தங்களது தொழிலை விட்டுட்டு யூடியூப் பக்கங்களை ஆரம்பிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க, தனிநபர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஆறாண்டுகளாக அதிக சந்தாதாரர்களை கொண்ட யூடியூப் பக்கமாக விளங்கி வரும் பியூடைபையை, ஒரு மிகப் பெரிய வணிக நிறுவனத்துக்கு சொந்தமான பக்கம் வென்றுவிடக்கூடாது என்று உலகளவில் வினோதமான பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.

யார் இந்த பியூடைபை?

ஸ்வீடனை சேர்ந்த 29 வயதாகும் பெவீக்ஸ் அர்விட் உல்ஃப் கஜெல்பெர்க் என்பவர் நடத்தும் யூடியூப் பக்கத்தின் பெயரே பியூடைபை என்பதாகும். படிப்பில் ஆர்வமில்லாததால் பல்கலைக்கழக படிப்பை பாதியில் நிறுத்திய பெவீக்ஸுக்கு வேறு வேலைகளும் பிடிக்காததால், 2010ஆம் ஆண்டு பியூடைபை என்னும் யூடியூப் பக்கத்தை தொடங்கிவிட்டு அதில் தனியொரு நபராக வீடியோ கேம்கள், நடப்பு நிகழ்வுகள், காமெடி, மீம்கள் போன்ற தலைப்புகளில் நூற்றுக்கணக்கான காணொளிகளை பதிவேற்றி வருகிறார்.

தனது வித்தியாசமான அணுகுமுறை, விவரிக்கும் விதம், தலைப்புகளை தெரிவு செய்தல் போன்றவற்றால் உச்சநிலையை அடைந்ததாக அறியப்படும் இவரது பியூடைபை பக்கம் 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி முதல் அதிக சந்தாதாரர்களை கொண்ட யூடியூப் பக்கமாக விளங்கி வருகிறது.

பட மூலாதாரம், Google

படக்குறிப்பு,

பெவீக்ஸ் அர்விட் உல்ஃப் கஜெல்பெர்க்

2016ஆம் ஆண்டு டைம்ஸ் இதழின், 'உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள்' பட்டியலில் இடம்பிடித்த இவர், யூடியூப் மூலம் அதிக சம்பாதிப்பவர்களின் 2018ஆம் ஆண்டு பட்டியலில் 15.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 9வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் இந்தியாவை சேர்ந்த டி-சீரிஸ் யூடியூப் பக்கத்துக்கும் பியூடைபைக்கும் முதலிடத்துக்கான போட்டி நடைபெற்று வருகிறது.

அதுவும் கடந்த ஓரிரு மாதமாக, இரண்டு பக்கங்களுக்கும் இடையேயான சந்தாதாரர்களின் வித்தியாசம் இருபது ஆயிரத்திற்கும் குறைவாக இருந்து வருகிறது.

பியூடைபைக்கு ஆதரவாக களமிறங்கிய எலான் மஸ்க்

பட மூலாதாரம், KEVORK DJANSEZIAN

படக்குறிப்பு,

எலான் மஸ்க்

பியூடைபை முதலிடத்தை தக்கவைத்து கொள்வதற்கு உதவும் வகையில், பல்வேறு நாடுகளை சேர்ந்தோர் தன்னார்வமாக வினோதமான வழிகளில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான பிரிண்டர்களை ஹேக் செய்து பியூடைபைக்கு ஆதரவான வாசகங்களை பிரிண்ட் செய்ய வைத்தது, காணொளிகள்-போஸ்டர்களை வெளியிடுவது போன்ற வழிகளின் மூலம் ஆதரவு குவிந்து வரும் நிலையில், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரியான எலான் மஸ்க்கும் பியூடைபைக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.

பியூடைபையின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றான "மீம்ஸ் ஷோவை" தான் தொகுக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அறிவித்திருந்தார் எலான் மஸ்க். அதைத்தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே பியூடைபையின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிவேகமாக உயரத்தொடங்கியது.

இந்நிலையில், பியூடைபைக்காக அமெரிக்க திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஜஸ்டின் ரோய்லேண்டுடன் இணைந்து மீம்ஸ் காணொளியை தொகுத்துள்ளதாக பிப்ரவரி 18ஆம் தேதி மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளி வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, பியூடைபைக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

வெல்லப்போவது யார்?

ஒரு தனிநபருக்கும், ஒரு நிறுவனத்துக்குமிடையேயான இந்த போரின் பின்னணி குறித்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையை சேர்ந்த அஸ்வினிடம் கேட்டபோது, "யூடியூபில் அதிக சந்தாதாரர்கள், அதிக பார்வைகள், புகழ் போன்றவற்றுடன் பியூடைபை வலம் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவது, விலை மலிவான இணைய உபயோகத்தை தரும் ஜியோவின் வருகை போன்றவற்றின் காரணமாக டி-சீரிஸ் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அபரிதமான வளர்ச்சியை பெற்று பியூடைபைக்கு சவால் அளிக்கும் நிலையை அடைந்துள்ளது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

"பெரும்பாலும் இந்தி மொழி பாடல்களை அதிகம் பதிவேற்றும் டி-சீரிஸ் பக்கத்தை இந்தி பெரும்பான்மை பகுதியான வட இந்தியாவை சேர்ந்தவர்கள் மிக அதிகளவில் பின்தொடர்ந்து வருகின்றனர். டி-சீரிஸ் பக்கத்தின் வளர்ச்சிக்கு அதுவும் மிகப் பெரிய காரணம்" என்று விளக்கும் அஸ்வின், காணொளி மட்டுமின்றி பல்வேறு சமூக தொண்டு ஆற்றி வரும் பெவீக்ஸுக்கு கிடைக்கும் ஆதரவு வியக்கத்தக்கது என்று கூறுகிறார்.

"யூடியூபின் டாப் பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் பெவீக்ஸ் உலகமெங்கும் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் குழந்தை தொழிலாளர் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நிதியுதவி அளியுங்கள் என்ற பிரசாரத்தை மேற்கொண்டார். அதன் மூலம் இதுவரை 1.6 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் டி-சீரிஸ், பியூடைபையை முந்தினாலும் அத்துடன் அந்த போட்டி முடிந்துவிடும் என்று அர்த்தமில்லை " என்று அவர் மேலும் கூறுகிறார்.

பல்வேறு தரப்பினரும் பெவீக்ஸை புகழ்ந்து வந்தாலும், அவர் தனது காணொளிகள் மூலம் இனவெறியை பரப்புகிறார், மத உணர்வை புண்படுத்துகிறார் போன்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக சுமத்தப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :