இயற்கை வளப் பாதுகாப்பு: காட்டுத் தீயால் கருகும் உயிர்கள் - 'அழிவுக்கு முக்கியக் காரணம் மனிதர்கள்'

காட்டுத் தீ படத்தின் காப்புரிமை EPA
Image caption கோப்புப்படம்

சமீபத்தில் கட்டற்று பரவிய காற்றுத் தீயினால் மேற்கு தொடர்ச்சி மலையின் காடுகள் பெரும் அழிவுக்கு உள்ளாகி இருக்கின்றன.

பந்திப்பூரில் பற்றி எரிந்த காட்டுத்தீ

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து எரிந்த காட்டுத் தீயினால் ஏறக்குறைய 3,000 ஹெக்டேர் வனப்பரப்பு எரிந்து போய் உள்ளது என்கிறார் பந்திபூர் வனப்பகுதிகளில் சூழலியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் கவுரவ வன உயிரின காப்பாளர் ராஜ்குமார்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் குந்திக்கரே என்னும் வனப்பகுதியில் தொடங்கிய காட்டுத்தீ , பந்திப்பூரா, மத்தூர், நீலகோளே, கோபால்சாமி பெட்டா வரை வேகமாக பரவிவிட்டது.

தீ பற்றி படர்வதற்கான முக்கியமான காரணம் காடுகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியுள்ள உண்ணிச்செடி எனப்படும் லேண்டனா காமரா. காடுகளின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள இந்த களைச் செடிகளால் தீ மிக வேகமாகப் பரவுகின்றன.

இந்த களைச் செடிகள் எரிபொருளை போல செயல்படுகின்றன. வேகமான காற்றும், உண்ணிச் செடிகளும் தீ பரவும் வேகத்தை அதிகப்படுத்துகின்றன, எனவே தீயினை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.

தமிழகத்தின் முதுமலைப் பகுதிகளிலும் தீ பரவியதால் அங்கும் சில பகுதிகள் எரிந்து போயிருக்கின்றன. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீ தான். தென்னிந்திய பகுதிகளில் இயற்கையாக காட்டுத் தீ உருவான நிகழ்வுகள் இல்லை.

விழிப்புணர்வு அற்ற சில மனிதர்களால் இது போன்ற விபரீதங்கள் நடக்கின்றன. ஆனால் இதை செய்தது யார் என்று தெரியவில்லை.

பந்திபூர் வனப்பகுதியினை சுற்றிலும் 123 கிராமங்கள் உள்ளன, அதிகமாக மனித விலங்கு மோதல் உள்ள பகுதி. இந்த மனித விலங்கு முரண்பாடுகளும் தீ உருவாவதற்கான காரணமாக இருக்கலாம் என்றார் ராஜ்குமார்.

காட்டுத்தீயினை உருவாக்கும் காரணங்கள்

கோவையில் மருதமலை, ஆணைகட்டி ஆகிய வனப்பகுதிகளிலும் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இது குறித்து ஓசை சூழலியல் அமைப்பின் காளிதாசன் உடன் பேசிய பொழுது, "இந்தியக் காடுகளில் உருவாகும் காட்டுத் தீ பெரும்பாலும் மனிதர்களால் ஏற்படுவதுதான் மரங்களோடு மரங்கள் உரசுவதால், சூரிய ஒளியினால் தீ உருவாவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

எனினும் இவையெல்லாம் இந்தியாவில் மிக மிக அரிதாகத்தான் நடக்கும். இந்தியக் காடுகளில் 99 சதவீதம் காட்டுத்தீ மனிதர்களால் உருவாக்கப்படுவதுதான். அதில் இரண்டு வகை உள்ளது.

ஒன்று உள்நோக்கத்தோடு வைக்கப்படுவது. மரங்களை வெட்டி விட்டு அந்த சுவடுகள் மறைக்கப்படுவதற்காக தீ வைத்து விடுவது, வனத்துறையுடன் உள்ள மோதலால் வனத்திற்கு தீ வைத்து விடுவது, ஆடு மாடுகள் மேய்ப்பவர்கள்- தீ வைத்துவிட்டால் அந்த இடத்தில் நன்றாக புல் விளையும் என நினைத்து தீ வைத்து விடுவது, மான் கொம்புகளை எடுப்பதற்காக தீ வைப்பது என பல காரணங்கள் உண்டு.

சில இடங்களில் வக்கிரத்தால்கூட இது நடைபெறுகிறது. காட்டிற்கு தீ வைத்துவிட்டு அதனை பார்த்து ரசிப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஒரு முறை முதுமலையில் காட்டுத்தீ குறித்த ஆவணப்படம் எடுப்பதற்காக காட்டிற்கு தீ வைத்த சம்பவமும் நடந்தது.

படத்தின் காப்புரிமை AFP / getty images
Image caption கோப்புப்படம்

மற்றொன்று அஜாக்கிரதையால் நிகழ்வது, காடு காய்ந்து கிடக்கும் பொழுது தூக்கி எறியப்படும் பீடி துண்டுகளால் தீ ஏற்படும். சில சமயங்களில் தேன் எடுப்பதற்காக செல்பவர்கள் தேன் கூட்டினை கலைப்பதற்காக பற்றவைக்கப்படும் தீயில் இருந்து தீப்பொறிகள் பரவி விட்டதால் ஏற்படுவது, சுற்றுலா செல்பவர்கள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் தீ மூட்டி குளிர் காய்தல் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய பல விழிப்புணர்வும், பொறுப்பும் அற்ற மனித செயல்பாடுகளால் காட்டுத் தீ ஏற்படுகின்றது.

காட்டின் பரப்பு அதிகமாக இருந்த பொழுது , காட்டில் ஒரு பக்கம் தீ பற்றி எறிந்தால் அங்கு உள்ள உயிரினங்கள் காட்டின் மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்ந்து விடும். ஆனால் நமது காட்டின் பரப்பு குறைந்து போய் விட்டது.

ஆதலால் காட்டுத்தீ பரவுகின்ற சமயங்களில் அங்கு வாழும் உயிரினங்களும் பெரும் சிக்கலுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகும் என்கிறார் காளிதாசன்.

மேலாண்மை செய்வது எப்படி?

காட்டுத் தீ ஒரு எல்லைக்கு மேல் பரவிவிட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கான முறையான தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லை. ஆனால், தீ பரவாமல் இருக்க தடுப்பு முறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

தீ தடுப்பு பணிகள் என்றால், பனிக்காலம் தொடங்கும் பொழுது காடுகளின் நடுவே தீ தடுப்பு கோடுகளை வெட்டிவிடுவர். சாலைகளை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஒரு எல்லை வரை காய்ந்த தாவரங்களை வெட்டி சுத்தம் செய்து விடுவர்.

வனத்துறை தீ தடுப்பு பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அதற்கான நிதி முறையாக ஒதுக்கப்படுவதில்லை.

தீ தடுப்பு பணிகளில் ஈடுபடும் வேட்டை தடுப்பு காவலர்கள் போதிய அளவு இல்லை. இந்த பணிக்கென்று தனியே ஆட்கள் இல்லை. வேட்டைத் தடுப்பில் வேலை செய்கின்ற, யானை விரட்டும் பணிகளில் ஈடுபடுகின்ற அதே வேட்டைத் தடுப்பு காவலர்கள் தான் காட்டுத் தீ அணைப்பிலும் வேலை செய்ய வேண்டும். வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வனத்துறைக்கும் உள்ள உறவு சரியாக இருப்பதும் அவசியம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இது என்னுடைய காடு என்ற உணர்வு அனைவருக்கும் வந்தால் தான் இவைகளையெல்லாம் முழுவதும் தடுக்க இயலும் என்கிறார் ஓசை காளிதாசன்.

காட்டுத்தீயால் கருகும் உயிர்கள்

கோவையில் காட்டுத்தீ பற்றிய இடத்தில் காட்டுப்பன்றி ஒன்று கருகி உயிரிழந்து கிடந்தது. காடு என்பது மரங்கள் மட்டுமல்ல, கண்ணுக்குக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் தொடங்கி , மிகப்பெரிய உயிரினம் வரை பல நூற்றுக்கணக்கான உயிர்கள் வாழும் இடம். இந்த தீயினால் நம் பார்வைக்கே வராமல் பல உயிர்கள் மாண்டுபோயிருக்க கூடும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப்படம்

இந்தத் தீ குறு மரங்கள் எல்லாவற்றையும் அழித்து விடும், புதர்களில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் பாதிக்கப்படும், தரைப்பகுதியில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் பறவைகள், ஊர்வன இனங்கள் எல்லாம் பாதிக்கப்படும் என்கின்றனர் சூழலியாளர்கள்.

போலித் தகவல்கள்

இந்த சூழலில் பந்திப்பூர் காட்டுத் தீயில் கருகியதாக சில உயிரினங்களின் படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் போலியான தகவல்கள்.

அதில் உராங்குட்டான் புகைப்படம் உள்ளது. உராங் குட்டான் போர்னியா காடுகள் மற்றும் இந்தோனீசியாவின் சுமத்திரா பகுதிகளில் மட்டுமே காணப்படும் குரங்கினம் .அது போர்னியோவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிர் இழந்த உராங்குட்டானின் புகைப்படம்.

பந்திப்பூர் பகுதிகளில் வாழாத ஒரு உயிரினத்தின் படத்தினை பகிர்ந்து , பந்திபூர் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டதாக தகவல்களை பரப்பி வருகின்றனர்.

மேலும், கலிபோர்னியா தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முயல், ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தும் , பந்திப்பூரில் எடுக்கப்பட்ட உயிரினங்கள் என தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது போன்ற தவறான தகவல்கள் , உண்மைத் தகவல்களை சந்தேகத்திற்கு உள்ளாக்குவதுவுடன் , காட்டின் பிரச்சனைக்கான தீர்வினை காண்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் பேராசிரியர் ஜெயக்குமார்.

பந்திபூரில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட உயினங்களை குறித்து எந்த தகவலையும் கர்நாடக வனத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :