மாதவிடாய் 15 வயதிலேயே நின்றது - கவலைகளைத் தூக்கி எறிந்த சிறுமி

பதினைந்து வயதான அன்னாபெல்லுக்கு மிகவும் முன்னதாகவே மாவிடாய் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
Image caption பதினைந்து வயதான அன்னாபெல்லுக்கு மிகவும் முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அன்னாபெல்லுக்கு முதல் முறையாக மாதவிடாய் வராமல் போயிற்று. அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பின்னர், உடல் வெப்பமடைந்து, சிவப்பு நிறமாகியது. பின்னர் நிலைமை மிகவும் மோசமாகியது.

"நான் அறிவியல் பாட வகுப்பில் இருந்தபோது, எனது முகம் சிவப்பு நிறமாவதை என்னால் உணர முடிந்தது," என்று 15 வயதான அவர் நினைவுகூர்கிறார்.

"எனது உடல் வெப்பமடைந்து, சிவப்பு நிறம் பெற்றிருப்பதற்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதுதான் காரணம் என்று எனது ஆசிரியர் குறிப்பிட்டார். அப்போதுதான் எனக்கு சிக்கல் புரிந்தது" என்று அவர் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக சந்தேகமடைந்த அன்னாபெல் மேலதிக தகவல்களை இணையத்தில் தேட தொடங்கினார்.

"இந்த தேடல் முடிவுகளில் மிகவும் மோசமான முடிவுகளே கிடைத்தன. அவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம் என்று நான் பயப்பட்டேன்" என்கிறார் அன்னாபெல்.

அவருக்கு மிக முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டிருப்பது பின்னர் கண்றியப்பட்டது.

படத்தின் காப்புரிமை Anabelle
Image caption இந்த செய்தியால் அவரது தாய் இடிந்துபோய்விட்டதாக அன்னபெல் தெரிவிக்கிறார்.

"அந்நேரத்தில் அழ வேண்டுமென நினைத்தேன்" என்று பிபிசி நடத்திய நேர்காணலில் அன்னாபெல் தெரிவித்தார்.

எனது உணர்வுகளை பற்றி அதிகம் எழுதினேன். கலை படைப்புகள் மூலம் எனது உணர்வுகளை வெளிக்காட்டவும் முயற்சித்தேன்" என்று அவர் கூறினார்.

தன்னுடைய கருத்தரிக்க முடியாத நிலைமையை கட்டாயமாக தேற்றிக்கொள்ள வேண்டிய நேரமுமாக இது அவருக்கு அமைந்தது.

"வாழ்க்கையில் பல்வேறு வகையான முடிவுகளை நான் இன்னும் எடுத்திருக்கவில்லை என்பதால், என்ன நினைப்பது என்று தெரியவில்லை" என்கிறார் அன்னாபெல்.

"நான் இன்னும் வளரும்போது இதனால் மிகவும் கஷ்டப்பட போகிறேன் என்று நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்,

கருத்தரிக்க முடியாதவராக அன்னாபெல் இருக்கிறார் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரது தாய் மிகவும் கஷ்டப்பட்டதாக அன்னாபெல் தெரிவித்தார்,

மாதவிடாய் நிறுத்தம் என்றால் என்ன?

  • மாதவிடாய் வருவது நின்றுவிடுகின்ற பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் பருவம்தான் மேனோபாஸ் என்கிற மாதவிடாய் நிறுத்தம்.
  • இந்த மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்னால், பல மாதங்களாக அல்லது ஆண்டுகளாக மாதவிடாய் வருவது குறைய தொடங்கும்.
  • உடலில் சிவப்பு படுதல், ஒருமுகப்படுத்த இயலாமை, தலைவலி, கவலை, பாலியல் ஆர்வம் குறைதல், தூங்குவதில் கஷ்டங்கள் ஆகியவை பிற அறிகுறிகளாகும்.
  • பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நிறுத்தம் நிகழலாம்.
  • மிகவும் முன்னதாக மாதவிடாய் நின்றுவிடும் பெண்கள் எலும்பு சிதைவு, முறிவுகள், மாரடைப்பு மற்றும் அஸ்ரோஜன் குறைவால் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

ஆதாரம்: தேசிய சுகாதார சேவை, பிரிட்டன்

பிரிட்டனில் பதின்ம வயதினராக அன்றாடம் வருகின்ற எல்லா பிரச்சனைகளையும் அன்னாபெல் எதிர்கொள்வதோடு, மாதவிடாய் நிறுத்த சிக்கலையும் கையாண்டு வருகிறார்.

அவரது வயதில் இருக்கின்ற பலரும் கவனத்தில் கொள்ள வேண்டியதல்ல இது. அவரது நண்பர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டுமென அவர் எதிர்பார்க்கவில்லை.

"அவர்களது பிரச்சனை அல்லாத ஒன்றை நான் அவர்கள் மீது சுமத்த விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

பத்தாயிரம் பெண்களில் ஒருவர் மட்டுமே 20 வயதுக்கும் முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தம் காணும் பிரச்சனையை எதிர்கொள்வதாக தரவுகள் காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை Annabelle
Image caption கலை படைப்புகள் வழியாக தனது உணர்வுகளை அன்னாபெல் வெளிக்காட்ட முயற்சித்தார்.

மாதவிடாய் நிறுத்தம் 90 சதவீதம் தன்னிச்சையாக நிகழ்வது, காரணம் அறிய முடியாதது. மருத்துவர்கள் மட்டுமே இதனை கண்டுபிடித்து விளக்க முடியும்.

ஆனால், இதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய நிலைமை ஒரே மாதிரியானவை. அன்னாபெல்லின் கருப்பைகள் முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டன.

பெரிய இடை மற்றும் மார்பகங்கள் போன்ற பெண்ணின் உடல்கூறுளை மேம்படுத்த காரணமான ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் ஆகும்.

மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை கையாள ஹார்மோன் மாற்று மருத்துவ சிகிச்சை அவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவர் மாத்திரை உள்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒரு நாள் மத்திரை எடுக்காமல் விட்டுவிட்டால், சிவப்பு படுதல் தோன்றிவிடும் என்று அவர் தெரிவிக்கிறார்,

படத்தின் காப்புரிமை Annabelle
Image caption அதிஷ்டமற்ற சிலரில் ஒருவராக தான் இருந்தாலும், இதைவிட மோசமானவற்றை அனுபவிப்போரை அவருக்கு தெரியும் என்று அன்னாபெல் கூறுகிறார்.

இயல்பான வாழ்க்கை வாழ்வதை தொடர்வதற்கு அன்னாபெல் முடிவு செய்துள்ளார்.

"எனது வயதில் இருப்பவர்கள் என்னைவிட மிக மோசமான நிலையில் இருக்கும்போது, என்னை நினைத்து வருந்த நான் விரும்பவில்லை" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மாதவிடாய் மன அழுத்தம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

.