பெரும் விண்கல் வெடித்து சிதறியதை கண்டுபிடித்த அமெரிக்கா

விண்கல் படத்தின் காப்புரிமை Getty Images

புவியின் வளிமண்டலத்தில் ஒரு பெரும் தீப்பந்து வெடித்து சிதறியதாக நாசா கூறுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இதுமாதிரி வெடித்து சிதறிய இரண்டாவது பெரும் தீப்பந்து இதுதான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவில் உள்ள செல்யபின்ஸ்க் நகரத்தின் மீது இதுபோன்று பெரியதொரு தீப்பந்து வெடித்தது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் பெரிங் கடலின் மீது அது வெடித்து சிதறியதால், இந்நிகழ்வு பெரிதாக கவனிக்கப்படவில்லை.

ஹிரோஷிமா வெடிகுண்டு தாக்குதலின் போது வெளியான ஆற்றலைவிட, 10 மடங்கு அதிகமான ஆற்றல் இந்த விண்கல் வெடித்தபோது வெளியானது.

ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் இவ்வளவு பெரிய தீப்பந்து வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாசாவின் லின்ட்லி ஜான்சன் தெரிவித்தார்.

இதுவரை நாம் அறிந்தது?

டிசம்பர் 18ஆம் தேதி மதிய நேரத்தில், வளிமண்டலத்தில் விநாடிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் ஏழு டிகிரி செங்குத்தான பாதையில் விண்கல் கடந்து சென்றது.

பல மீட்டர்கள் அளவு கொண்ட இந்த விண்கல், பூமியில் இருந்து 25.6 கிலோ மீட்டர் மேற்பரப்பில், 173 கிலோடன்கள் ஆற்றல் தாக்கத்தோடு, வெடித்து சிதறியது.

"இது செல்யபின்ஸ்க் வெடிப்பில் வெளியான ஆற்றலில் 40 சதவீதமாகும். ஆனால், அது பெரிங் கடல் மீது வெடித்ததால் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. செய்திகளிலும் வரவில்லை" என்கிறார் நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை கண்காணிக்கும் திட்ட மேலாளர் கெல்லி ஃபஸ்ட்.

"நாம் இன்னுமொரு கருத்தையும் இங்கு முன்வைக்கலாம். கிரகத்தில் அதிகளவில் தண்ணீர் உள்ளது"

இந்த வெடிப்பை கடந்த ஆண்டு ராணுவ செயற்கைக்கோள்கள் கண்டுபிடித்தன. பின்னர் அமெரிக்க விமானப்படையால் நாசாவுக்கு இது தெரிவிக்கப்பட்டது.

வட அமெரிக்கா மற்றும் ஆசியாவுக்கு இடையில் பயணிகள் விமானங்கள் செல்லும் பாதைகளுக்கு சற்று தொலைவில் உள்ள பகுதியின் வழியாகதான் தீப்பந்து வந்ததாக ஜான்சன் தெரிவித்தார். இந்நிகழ்வை யாரேனும் பார்த்தார்களா என்பது குறித்து விமான சேவை நிறுவனங்களிடம் ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதன் முக்கியத்துவம் என்ன?

2020க்குள் பூமிக்கு அருகே உள்ள 140 மீட்டர்கள் அல்லது அதற்கும் பெரிதான 90 சதவீத விண்கல்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று 2005ஆம் ஆண்டு நாசாவிடம் காங்கிரஸ் கூறியிருந்தது. இந்த அளவிற்கு பெரிதான விண்கற்கள் பூமியோடு மோதினால், அப்பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கேட்ட இந்த வேலையை முடிக்க இன்னும் 30 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

படத்தின் காப்புரிமை NASA

பூமிக்குள்ளே வரும் பொருள் என்ன என்று அடையாளப்படுத்தப்பட்டால், அது எந்தப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கணக்கிடுவதில் நாசா குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்