எவரெஸ்ட் சிகரத்தில் தென்படும் சடலங்கள் - பனி உருகுவதால் வெளியே வருகின்றன

எவரெஸ்ட் மலை படத்தின் காப்புரிமை FRANK BIENEWALD

எவரெஸ்ட் மலையில் உள்ள பனிப்பாறைகள் உருகிவருவதால், அதில் ஏறி இறந்தவர்களின் பனியில் புதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக பயண ஏற்பாட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட் மலை ஏற முதன்முறையாக முயற்சி மேற்கொண்டதில் இருந்து, சுமார் 300 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதில் மூன்றில் இரண்டு பங்கு உடல்கள், பனியில் புதைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

அம்மலையின் சீனப் பக்கத்தில் இருந்து சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. வசந்த காலம் தொடங்க உள்ளதால், மலை ஏறுபவர்கள், தங்கள் பயணத்தை மேற்கொள்வார்கள்.

உலகின் மிக உயரமான இந்த மலை சிகரத்தில் 4,800க்கும் மேற்பட்டோர் ஏறியுள்ளனர்.

"புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால், இவ்வளவு ஆண்டுகளாக அங்கு உயிரிழந்தவர்களின் பனியில் புதைந்த உடல்கள் வெளியே தென்பட ஆரம்பித்துள்ளன" என்கிறார் நேபாள மலையேறுவோர் அமைப்பின் முன்னாள் தலைவரான அங் ஷெரிங் ஷெர்பா

"சமீபத்திய ஆண்டுகளில் உயிரிழந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டன. ஆனால், பனியில் புதைந்து போன, பல ஆண்டுகளுக்கு முன்னால் இறந்தவர்களின் உடல்கள் தற்போது தென்படுகின்றன."

"எவரெஸ்ட் சிகரத்தின் பல்வேறு இடங்களில் நானே சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 10 உடல்களை கண்டெடுத்தேன். மேலும் பலர் உயிரிழந்து சடலங்கள் புதைந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்படுகின்றன," என்று முன்னர் மலையேற்ற விவகாரத்தை கவனித்துக்கொண்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த மலை ஏறும் காலத்திற்காக, எவரெஸ்ட்டில் உயரமான இடங்களில் உள்ள முகாம்களில் இருந்து, கயிறுகளை கீழே கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும், ஆனால், சடலங்களைக் கையாளுவது மிகவும் கடினமான ஒன்றாக இருப்பதாகவும் பயண ஏற்பாட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை DOMA SHERPA

தென்படும் சடலங்கள்

2017ஆம் ஆண்டில், கேம்ப் 1 அருகே உயிரிழந்த மலையேறுபவரின் கை மட்டும் மேலே தெரிந்தது.

ஷெர்பா சமூகத்தின், தொழில்முறை மலையேறுபவர்களின் உதவியோடு, அந்த உடலை அப்புறப்படுத்தினார்கள்.

அதே ஆண்டில், கும்பு பனிப்பாறையின் மேற்பரப்பில் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

கும்பு பனி வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் அதிக சடலங்கள் தென்பட்டன.

இதே போன்று சடலங்கள் அதிகம் காணப்பட்ட மற்றொரு இடம் தென் கொல் என்று அழைக்கப்படும் கேம்ப் 4 பகுதியாகும்.

"கடந்த சில ஆண்டுகளில், பேஸ் கேம்பில் இறந்தவர்களின் கைகளும் கால்களும் வெளியே தென்பட்டன" என்கிறார் அப்பகுதியின் அரசு சாரா அமைப்பின் நிர்வாகி ஒருவர்.

"பேஸ் கேம்ப் பகுதியில் உள்ள பனியின் அளவு குறைந்து கொண்டே வருவதை நம்மால் காண முடிகிறது. அதனால்தான் சடலங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை C. SCOTT WATSON/UNIVERSITY OF LEEDS

உருகி வரும் பனிப்பாறைகள்

எவரெஸ்ட் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக பல ஆய்வுகள் நமக்கு கூறுகின்றன.

எவரெஸ்ட் சிகரத்தை அடைய, கும்பு பனிப்பாறையில் உள்ள குளங்களை கடக்க வேண்டும். பனி வேகமாக உருகுவதால், அந்தக் குளங்கள் பெரிதாகி ஒன்றோடு ஒன்று இணைந்து வருவதாக 2015ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று கூறுகிறது.

பனிப்பாறைகள் வேகமாக உருகியதையடுத்து 2016ஆம் ஆண்டு, எவரெஸ்ட் அருகே இருக்கும் இம்ஜா நதிநீர் அபாய அளவை எட்டியதால், நேபாள ராணுவம் அங்கிருந்து நீரை உறிஞ்சி எடுத்தது.

கடந்த ஆண்டு கும்பு பனிப்பாறையை ஆய்வு செய்த மற்றொரு குழு, அங்குள்ள பனி, எதிர்பார்த்த அளவைவிட, வெப்பமாக இருந்ததாக குறிப்பிட்டனர்.

பனி வேகமாக உருகி வருவதால் மட்டுமே, உடல்கள் வெளியே தென்படவில்லை. கும்பு பனிப்பாறையின் நகர்வாலும், சில உடல்கள் வெளியே வருவதாக, மலையேறுபவர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை ANG TASHI SHERPA

அடையாளங்களாக மாறிய இறந்த உடல்கள்

எவரெஸ்ட் சிகரத்தின் குறிப்பிட்ட இடங்களில் சில சடலங்கள், மலையேறுபவர்களுக்கு அடையாளங்களாக இருக்கின்றன.

அப்படி ஒரு அடையாளமாகத்தான் "கிரீன் பூட்ஸ்" என்ற இடம் இருக்கிறது.

ஒரு தொங்கும் பாறையின் கீழ் மலையேறுபவர் ஒருவர் உயிரிழந்ததை இது குறிக்கிறது. அவரது பச்சை நிற பூட்ஸ்கள், அவரது கால்களில் இருந்தன.

அவ்வளவு உயரமான இடங்களில் இருந்து உடல்களை மீட்டு வருவது கடினமானது மட்டுமல்லாமல் இதற்கு அதிக பணமும் செலவாகும்.

சடலங்களை கீழே கொண்டு வருவதற்கு 40 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"8,700 மீட்டர் உயரத்தில் இருந்து ஒரு உடலை மீட்டு வருவது சவாலான விஷயங்களில் ஒன்றாக இருந்ததாக" ஆங் ஷெரிங் தெரிவித்தார்.

அந்த உடல் உறைந்துபோய் இருந்ததோடு, 150 கிலோ எடை இருந்தது.

மலையேறும் போது ஒருவர் இறந்துவிட்டால், அந்த உடலை என்ன செய்ய வேண்டும் என முடிவு எடுப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்