மக்களவைத் தேர்தல் 2019: போலிச் செய்திகளை தடுக்க வாட்சப் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதா?

வாட்ஸ்அப் படத்தின் காப்புரிமை Reuters

இந்தியாவில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி செயலியான வாட்சப் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பான போலிச் செய்திகளை பரப்பும் ஊடகமாக உருவெடுத்துள்ளது. ஆனால், போலிச் செய்திகளை ஒழிப்பதற்காக அந்நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவால் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் தொடங்கி இதுவரை எண்ணிலடங்கா போலிச் செய்திகள் நாடு முழுவதும், வாட்சப்பில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே, உலகம் முழுவதும் பூதாகரமாகி வரும் போலிச் செய்திகள் விவகாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஃபேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதள நிறுவனங்கள் திணறி வருகின்றன. இடையிடையே, பிரேசில், மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின்போது போலிச் செய்திகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கண்ட நிறுவனங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஓரளவு பயனளித்த நிலையில், இன்னும் ஒரே வாரத்தில் தொடங்கவுள்ள உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்களவைத் தேர்தலை சந்திப்பதில் இதுவரை தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை போன்று தெரியவில்லை.

பிரச்சனையின் வீரியம்

போலிச் செய்திகளை சமாளிப்பதில் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாதான் மிகப் பெரிய சவால் விடும் நாடாக உள்ளது எனலாம். ஏனெனில், ஃபேஸ்புக்குக்கு சொந்தமான குறுஞ்செய்தி செயலியான வாட்சப்புக்கு உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக 20 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.

ஒரு வாட்சப் குழுவை பொறுத்தவரை 256 பேர் உறுப்பினர்களாக இருக்க முடியும். ஆனால், ஒருவர் எத்தனை குழுக்களில் உறுப்பினராக இருக்க முடியும் என்பதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதால் அதை பயன்படுத்தும் பெரும்பாலானோர் எண்ணிலடங்கா குழுக்களுக்கு தங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை, புகைப்படங்களை, காணொளிகளை அதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்காமல் பகிருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Facebook

அவ்வாறு தெரிந்தோ, தெரியாமலோ பகிரப்படும் போலிச் செய்திகளால் சண்டை சச்சரவுகள் தொடங்கி, கும்பல் கொலை பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள போலிச் செய்திகள் பிபிசி நடத்திய ஆய்வில், நாட்டில் மக்களிடையே அதிகரித்து வரும் தேசப்பற்றிற்கும் போலிச் செய்திகளுக்கும் நேரடி தொடர்பிருப்பதாக தெரிய வந்தது.

சுமார் 135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பேர் முதல் முறையாக இணைய உலகிற்குள் அடியெடுத்து வைத்து வருவதால், இந்த போக்கு மென்மேலும் அதிகரிக்கும் ஒன்றாகவே கருதப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்கள்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாட்டில் ஓட்டுரிமையை பெற்றுள்ள 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் ஆதரவை பெறுவதற்கு தற்போது ஆட்சியிலுள்ள பாஜகவும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் வாட்சப்பை தவறான வழிகளில் பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறிப்பாக பார்த்தோமானால், மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாகவே, பாஜக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தனது ஒன்பது லட்சம் ஆதரவாளர்களை கொண்டு பகுதிவாரியாக வாட்சப் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களது பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு கடுமையாக முயற்சித்து வரும் காங்கிரஸ் கட்சி, தங்களது பிரசாரம் சார்ந்த விடயங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அதை வாட்ஸ்அப்பில் பகிர்வதை திட்டமாக கொண்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தித்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த இருவேறு கட்சிகளும் சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவோடு தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் அந்நிறுவனத்தால் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கலுக்கான காரணம்

படத்தின் காப்புரிமை Reuters

பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்நாட்டிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார், ராகுல் காந்தியை பிரிட்டனை சேர்ந்த அரசியல் விமர்சகர் 'முட்டாள்' என்பது போன்ற பல்வேறு போலிச் செய்திகளை கண்டறியும் பணிகளை இந்தியாவை சேர்ந்த ஆல்ட்நியூஸ், பூம் ஆகிய இணையதளங்கள் செய்து வருகின்றன.

"வாட்சப் வாயிலாக மேற்கொள்ளப்படும் தகவல் தொடர்புகள் அனைத்தும் மறையாக்கம் செய்யப்படுவதால் குறிப்பிட்ட போலிச் செய்தியை பரப்பியது யார் என்பது போன்ற தகவல்களை அறிவது கிட்டத்தட்ட இயலாத காரியம்" என்று மறையாக்கத்தை கருந்துளை கருத்தாக்கத்தோடு தொடர்புபடுத்துகிறார் பூம் என்னும் போலிச் செய்திகளை கண்டறியும் பணிகளை செய்து வரும் நிறுவனத்தின் நிறுவனரான ஜென்சி ஜேக்கப்.

"வாட்சப்பில் ஒருவர் மற்றொருவருக்கோ, குழுவிலோ அனுப்பும் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், காணொளிகளை அதோடு தொடர்பற்றவர்களால் எந்த வகையிலும் கண்காணிக்கவோ, தடுக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

'மக்களின் தனிப்பட்ட தகவல் தொடர்புகளை பாதுகாப்பது' மிகவும் முக்கியமானது என்று நம்பும் வாட்சப், வருங்காலத்திலும் மறையாக்கத்தை நீக்குவதற்காக வாய்ப்பேயில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

வாட்சப்பின் நடவடிக்கைகளும், பிரயோசனமும்

வாட்சப் செயலியில் பகிரப்பட்ட போலிச் செய்திகளை முதலாக கொண்டு நடைபெற்ற கும்பல் கொலைகள் இந்தியாவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு குறுஞ்செய்தியை அதிகபட்சம் ஐந்து பேருடன்தான் பகிர முடியுமென்ற கட்டுப்பாட்டை விதித்ததுடன், அவ்வாறு பகிரப்படும் தகவலை தனியே 'பகிரப்பட்டது' என்று காட்டும் சிறப்பம்சத்தை தனது செயலியில் சேர்த்தது.

அதுமட்டுமின்றி, ஒருவரை அவரது ஒப்புதலின்றி வாட்சப் குழுவில் சேர்ப்பதை தடுக்கும் புதியதொரு திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், போலிச் செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், அதிகப்படியான தகவல்களை தன்னிச்சையாக பகிரும் ஒரு மில்லியன் கணக்குகளை மாதமும் முடக்கி வருவதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி 'செக்பாயிண்ட்' என்னும் போலிச் செய்திகளை அடையாளம் கண்டுபிடிக்கும் சேவையை வாட்சப் நிறுவனம் ஆங்கிலம் மட்டுமின்றி ஐந்து இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தது. இதன் மூலம் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு சந்தேகமுள்ள தகவலையோ, புகைப்படத்தையோ அல்லது காணொளியையோ வாட்சப்பிற்கு அனுப்பி அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டது.

எனவே, இந்த சேவையை பிபிசி பயன்படுத்தி பார்த்தபோது, இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. அதே சூழ்நிலையில், வாட்சப் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, அனைத்து பயனர்களுக்கும் பதிலளிக்கப்படாது என்றும், இது ஆய்வுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டம் என்றும் இதில் ஈடுபட்டுள்ள மற்றொரு நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேர்தல் முடிவுகளிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வாட்சப்பில் பகிரப்படும் போலிச் செய்திகளை சென்றுள்ள நிலையில், அதை குறைப்பதற்கான நேரடி நடவடிக்கையை எடுக்காது, ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக வாட்சப் நிறுவனம் கூறுவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :