சாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி - வெளியீடு ஒத்தி வைப்பு மற்றும் பிற செய்திகள்

பிளவுறும் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி - வெளியீட்டை ஒத்தி வைத்தது சாம்சங்

முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்களில் முதல் முறையாக மடித்து பயன்படுத்தக்கூடிய திறன்பேசியை தயாரித்த சாம்சங் நிறுவனம் அதன் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.

மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை வர்த்தக ரீதியாக வெளியிடுவதற்கு முன்னதாக அவற்றை விமர்சகர்களுக்கு அளித்து அவர்களது கருத்துகளை பெறுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமர்சகர்களுக்கு வழங்கப்பட்ட சாம்சங் கேலக்சி ஃபோல்ட் திறன்பேசிகள் பிளவுறுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், விமர்சகர்களின் கருத்துகளை ஆராய்ந்து அதுகுறித்த மேலதிக பரிசோதனைகளை செய்ய வேண்டியுள்ளதால், கேலக்சி ஃபோல்ட் திறன்பேசியின் வர்த்தக ரீதியிலான வெளியீட்டை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக சாம்சங் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

1980 டாலர்கள் விலையை கொண்ட இந்த வகை திறன்பேசி வரும் ஏப்ரல் 26ஆம் தேதி அமெரிக்காவிலும், மே 3ஆம் தேதி பிரிட்டனிலும் வெளியிடப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?

கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன.

இதில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்களுக்கு பின்னால் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் சிலரும், ஊடக செய்திகளும் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஏற்கனவே புலனாய்வுத்துறை, இந்த அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்ததாக இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ ட்விட்டரில் ஒரு ஆவணத்தை ஏப்ரல் 21ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

அப்படியொரு கடிதம் வந்தது உண்மைதான் என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ரஜித செனரத்ன குறிப்பிட்டார்.

ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி

தனது சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் பேட் செய்து 191 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிச்சயமாக வென்றிடுவோம் என்றுதான் எண்ணி இருந்தது, ரிஷப் பந்த் களத்தில் இறங்கும்வரை.

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே திங்களன்று ஜெய்பூரில் நடந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதலில் பேட் செய் பணித்தது.

ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ரன்கூட எடுக்காத நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க, 5 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை அந்த அணி பறிகொடுத்தது.

"சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்"

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறிய போது அங்கிருந்தவர்கள் பிபிசியிடம் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலான நிகழ்வுகள், தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா?

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்தால் தூக்கம் வரும்; இதை குடித்தால் தூக்கம் அதிகரிக்கும் என்பது போன்ற பல்வேறு விதமான கட்டுக்கதைகளால் ஒருவரது உடல்நிலை பாதிப்படைவதோடு, ஆயுட்காலம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு செய்ய வேண்டியவைகளாக இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரவலான விடயங்களை நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேடி கண்டறிந்து பட்டியலிட்டனர்.

இந்நிலையில், 'ஸ்லீப் ஹெல்த்' என்னும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்ட இதே போன்றதொரு ஆராய்ச்சி முடிவுடன், பட்டியலிடப்பட்ட காரணங்களை ஒப்பிட்டு பார்த்தனர்.

அதில், தூக்கம் பற்றிய கட்டுக்கதைகள் ஒருவரது உடல்நிலையில் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :