'எம். எஸ். பெயிண்டை விண்டோஸிலிருந்து நீக்கப் போவதில்லை' - மைக்ரோசாப்டின் அறிவிப்பை கொண்டாடும் மக்கள்

எம்.எஸ். பெயிண்ட் படத்தின் காப்புரிமை Microsoft

கணினி பயன்பாட்டாளர்களிடையே மிகவும் பிரபலமான 'மைக்ரோசாப்ட் பெயிண்ட்' மென்பொருளை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் என்னும் இயங்குதளம்தான் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) உலகின் பெரும்பாலான கணினிகளில் இயங்கி வருகிறது.

எனவே, கணினிகளை முதல் முறையாக இயக்குபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மென்பொருளாக காலம் காலமாக எம்.எஸ் பெயிண்ட் இருந்து வருகிறது.

இந்நிலையில், எம்.எஸ் பெயிண்டை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதாக கடந்த 2017ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் முதல் முறையாக அறிவித்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே அம்முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட10ஆவது பதிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், எம்.எஸ் பெயிண்டின் நிலை என்ன ஆகுமென்று அதன் பயன்பாட்டாளர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

இந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்படுத்த பதிப்பில் எம்.எஸ் பெயிண்ட் நீக்கப்படவில்லை என்று அந்நிறுவனத்தை சேர்ந்த மூத்த மென்பொறியாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, எம்.எஸ். பெயிண்டின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதுடன், அதை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் மின்னணு வடிவில் ஓவியம் வரையும் கலைஞரான மிரண்டாவிடம் பிபிசி பேசியபோது, எம்.எஸ். பெயிண்ட் தொடர்ந்து தக்க வைக்கப்படும் என்ற செய்தி தனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக கூறுகிறார்.

"எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்போது எம்.எஸ். பெயிண்டை முதல் முறையாக பயன்படுத்தினேன். அதுமுதல் இதுவரை வித்தியாசமான ஓவியங்களின் பிறப்பிடமாக அது இருக்கிறது" என்று கூறுகிறார்.

இருப்பினும், அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்ஸ்டால் செய்வதன் மூலம் எம். எஸ். பெயிண்ட் தானாக மறைவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து அதை தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் அது வடிவமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை @LAZYBONES
Image caption எம்.எஸ். பெயிண்டில் மிராண்டா வரைந்த ஓவியம்

எம்.எஸ். பெயிண்டை தனியே தரவிறக்கம் செய்து பயன்படுவது அதன் எளிதான பயன்பாட்டுக்கு எதிரானது என்று மிராண்டா தனது வருத்தத்தை பதிவு செய்கிறார்.

இந்நிலையில், எம்.எஸ். பெயிண்ட் தற்போதைக்கு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்ற அறிவிப்பை வரவேற்று அதன் பயன்பாட்டாளர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

எம்.எஸ். பெயிண்ட் மிகவும் அடிப்படையான வசதிகளை மட்டுமே கொண்டிருந்த போதிலும், அது முதல் முறையாக வெளியிடப்பட்ட 1985ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டாளர்களின் கவனத்தை பெற்ற மென்பொருளாக நிலைத்து வருகிறது.

பெரும்பாலானோருக்கு எம்.எஸ். பெயிண்ட் வரைய கற்றுக்கொள்வதற்கு மற்றும் பொழுதுப்போக்குக்கான இடமாக இருந்து வரும் வேளையில், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தை சேர்ந்த ஓவிய கலைஞர் பேட் ஹைன்ஸ் போன்றோர் அதை பயன்படுத்தி ஆச்சர்யமளிக்க கூடிய கலைப்படைப்புகளை செய்து வருகின்றனர்.

எம்.எஸ். பெயிண்ட் மென்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்ட மின் புத்தகத்தை அவர் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்.

அதேபோன்று, ஸ்பெயினை சேர்ந்த 88 வயதான கோன்சா கார்சியா ஜெயரா என்னும் மூதாட்டி முழுவதும் எம்.எஸ். பெயிண்டில் வரைந்த ஓவியங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பயன்பாட்டாளர்களை அதிசயிக்க வைக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :