மார்க் சக்கர்பெர்க் பதவிக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல் - காரணம் என்ன தெரியுமா?

மார்க் சக்கர்பெர்க் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மார்க் சக்கர்பெர்க்

உலகிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே உட்சபட்ச அதிகாரத்தை கொண்டவராக ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் திகழ்கிறார்.

அதாவது, ஃபேஸ்புக் இணை-நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் அதன் தலைமை செயலதிகாரியாகவும், நிறுவன இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை கொண்டுள்ளவராகவும் திகழ்கிறார்.

ஒரு நிறுவனத்தில் ஒரே நபர் இத்தனை பதவிகளையும் வகிப்பது குறித்து ஆரம்பக்காலத்திலிருந்தே சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், அது சமீப காலமாக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

"வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், தற்போதைக்கு நாங்கள் மிகுந்த வலிமைமிக்க தனியுரிமை கொள்கையை கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு தெரியும்" என்று சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரில் நடந்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளர்கள் மாநாட்டில் சக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.

மேற்கூறிய வரிகளை பேசிவிட்டு சக்கர்பெர்க் மோசமான சிரிப்பை வெளிப்படுத்தினார். ஆனால், பார்வையாளர்கள் அதற்கு எவ்வித மறுமொழியையும் வெளிப்படுத்தவில்லை. ஏனெனில், தனியுரிமை கொள்கை விவகாரத்தில் ஃபேஸ்புக்கின் நிலையற்ற தன்மை அதன் பயன்பாட்டாளர்களை கவலைக்குள்ளாகியுள்ளது; அரசியல்வாதிகளை கொதிக்க வைத்துள்ளது. கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

எனவே, மார்க் சக்கர்பெர்க்கால் ஃபேஸ்புக் அனைத்து முக்கிய பதவிகளையும் திறம்பட கையாள முடியுமா என்று எழுந்து வரும் பல்வேறு கேள்விகள் அவரது பதவிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை குறிக்கிறது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதிக்கம் செலுத்தக்கூடிய சமூக ஊடக நிறுவனத்தின் முக்கிய பதவியில் நீடிப்பதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு மார்க் சக்கர்பெர்க்குக்கு ஏற்பட்டுள்ளது.

வரலாறு காணாத அபராதம்

படத்தின் காப்புரிமை AMY OSBORNE

அமெரிக்காவின் சட்டவிதிகளை மீறி ஃபேஸ்புக் நிறுவனம் செயல்பட்டதற்காக, அந்நிறுவம் மீது வரலாறு காணாத அளவுக்கு அபராதத்தை விதிப்பதற்கு அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அபராதம் செலுத்துவதற்காக குறைந்தது மூன்று பில்லியன் டாலர்களை ஒதுக்க போவதாக சென்ற வாரம் தனது முதலீட்டாளர்களிடம் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அபராத தொகையை தவிர்த்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு எவ்விதமான கெடுபிடிகள் விதிக்கப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

"ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக, தீவிரமாக நுகர்வோரின் தனியுரிமை விதிகளை மீறி செயல்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறுகிறார் அமெரிக்க அரசின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டி கட்டுப்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைமை தொழில்நுட்பவியலாளரான அஷ்கன் சோல்தானி. பேஸ்புக் தனது வணிகத்தை விரைவாக உருவாக்கும் பொருட்டு, நுகர்வோரின் தனியுரிமைகளை மீறுவதை தேவையான, அதே சமயத்தில் மலிவான ஆபத்தாக எண்ணியதாக அவர் கூறுகிறார்.

"தனது நிறுவனத்தின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் எதையும் செய்வதற்கு தயாராக உள்ளது."

ஃபேஸ்புக்கின் இந்த போக்குக்கு, அபராதம் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க அளவுக்கு வேறொரு வகையிலான தண்டனை வழங்க வேண்டுமென்று அமெரிக்க வர்த்தக அமைப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், ஃபேஸ்புக் நிறுவனத்தால் எளிதில் பணம் சார்ந்த தண்டனைகளை பூர்த்தி செய்ய முடியும்.

முதலீட்டாளர் கிளர்ச்சி

படத்தின் காப்புரிமை AMY OSBORNE

அமெரிக்க அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒருபுறமிருக்க, முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் தலையாய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா சம்பவத்தில் சிக்கியதால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இது முதலீட்டாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபகாலமாக ஏறுமுகத்தை கண்டு வரும் ஃபேஸ்புக்கின் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, அந்நிறுவனத்தின் அனைத்து முக்கிய பொறுப்புகளையும் சக்கர்பேர்க் வகிப்பது சரிதானா என்ற எண்ணம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒரு சாரார், நிறுவனத்தின் தலைவராக தனிப்பட்ட நபரொருவரை நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுகின்றனர். ஆனால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் உட்சபட்ச அதிகாரத்தை கொண்டவராக சக்கர்பெர்க் திகழ்வதால், முதலீட்டாளர்களின் கோரிக்கையை அவரால் மட்டுமே செயல்படுத்த முடியும்.

"ஃபேஸ்புக் நிறுவனத்தின் சில முக்கிய பொறுப்புகளை துறப்பது குறித்து சக்கர்பெர்க் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்" என்று கூறுகிறார் சர்வதேச நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநரான ஜோனாஸ் க்ரோன்.

"ஒரு நிறுவனத்தின் நிறுவனர் அதன் செயல்பாடுகளில் எப்படிப்பட்ட பங்கை வகிக்க வேண்டுமென்பதை கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ், மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் போன்றோரிடமிருந்து சக்கர்பெக் உதாரணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்."

"முக்கிய பொறுப்புகளிலிருந்து வெளியேறுவது என்பது சாதாரண விடயமல்ல என்று எனக்கு தெரியும். ஆனால், சக்கர்பெக் எடுக்கும் முடிவு அவருக்கு மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், பயன்பாட்டாளர்கள் என அனைவருக்கும் பலனளிக்கும்" என்று தான் கருதுவதாக அவர் கூறுகிறார்.

இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தை அணுகியபோது, "எங்களது முதலீட்டாளர்களின் விருப்பப்படியே தற்போதய இயக்குநர்கள் குழுவின் கட்டமைப்பு உள்ளதாக நாங்கள் நம்புகிறேன். எனவே, அதற்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளை முதலீட்டாளர்கள் ஏற்கக் கூடாது என்று இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டே ஃபேஸ்புக் நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளிலிருந்து படிப்படியாக விலக உள்ளது குறித்த தனது திட்டத்தை சக்கர்பெர்க் வெளிப்படுத்தியிருந்தார். தற்போதைய சூழ்நிலைகளை பார்க்கும்போதும், மார்க் சக்கர்பெர்க் தான் நினைத்ததை விட மிகவும் விரைவாக அந்த மாற்றத்திற்கு உட்பட வேண்டியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்