சத்தான உணவை உண்ண உங்கள் குழந்தை மறுக்கிறதா? - இதை முயற்சியுங்கள்

சத்தான உணவை சாப்பிட குழந்தை அடம்பிடிக்கிறதா? - இதை முயற்சித்து பாருங்கள் படத்தின் காப்புரிமை Getty Images

உலகம் முழுவதுமுள்ள பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளை சாப்பிட வைப்பது, அதுவும் குறிப்பாக சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதென்பது மிகவும் சவாலான விடயமாகும்.

அதுமட்டுமின்றி, உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏதுவான உணவு பொருட்களை தெரிவு செய்வது இன்னமும் கடினமான காரியமாக உள்ளது.

இந்நிலையில், குழந்தைகளின் உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

தேர்வு செய்ய வாய்ப்பளியுங்கள்

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு பிடித்தமான உணவை தேர்வு செய்வதற்கு பெற்றோர்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்கிறார் லண்டனை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணரான டினா லே.

"நீங்கள் கூறியதை மட்டும் உண்பதற்கு குழந்தைகளுக்கு எப்போதும் பிடித்திருப்பதில்லை. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை வாய்ப்பாக அளித்து, அதில் ஒன்றை தேர்வு செய்ய சொல்லலாம். இதன் மூலம், 'நான் சாப்பிட மாட்டேன்' என்று குழந்தைகள் முற்றிலுமாக நிராகரிப்பதைத் தவிர்க்க முடியும்" என்று டினா கூறுகிறார்.

"நீங்கள் இதைத்தான் சாப்பிட வேண்டுமென்று குழந்தைகளிடம் கூறினால் அவர்கள் வெறுப்படைவதுடன், சாப்பிட மறுப்பார்கள்."

சிறு முயற்சிகள்

படத்தின் காப்புரிமை Getty Images

தனக்கு பிடித்த உணவு வகைகளை தவிர்த்த மற்றவற்றை சாப்பிட மறுக்கும் குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் சவாலானது என்கிறார் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான அன்னா க்ரூம்.

குழந்தைகளுக்கு அறிமுகம் இல்லாத உணவு வகைகளை படிப்படியாக சாப்பிட வைப்பதே இதற்கு ஒரே தீர்வு என்று அவர் கூறுகிறார்.

"உங்களது குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகள் அவர்களது தட்டில் தினமும் இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆனால், அதே சமயத்தில் ஒவ்வொரு நாளும் புதிய உணவு வகைகளை சிறிது சிறிதாக அவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்," என்று அவர் கூறுகிறார்.

மேற்கூறிய வழிமுறையை தனது மூன்று வயது குழந்தையிடம் பரிசோதித்தபோது, எதிர்பார்த்த பலன்களை கொடுத்ததாக பெலிண்டா மௌல்ட் கூறுகிறார்.

"முற்றிலும் புதிய வகை உணவை அவளுக்கு கொடுக்கும்போது தூக்கி எறிந்துவிடுவாள். ஆனால், சிறிது சிறிதாக கொடுத்தபோது ஆர்வமுடன் அதை ருசிக்க தொடங்கினாள்," என்று அவர் கூறுகிறார்.

இதை முதல் முறை முயற்சிக்கும்போதே எதிர்பார்த்த பலன் கிடைக்குமென்று சொல்ல முடியாது என்பதால், பெற்றோர்கள் எரிச்சலும், சோர்வும் அடையாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று பெலிண்டா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நல்ல முன்மாதிரியாக இருங்கள்

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு முன்மாதிரியை ஏற்படுத்தித் தருவது மிகவும் முக்கியமானது என்று டினா கூறுகிறார்.

"நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ணும்பட்சத்தில், அதை உங்களது குழந்தையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்," என்று அவர் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, குழந்தைகளுடன் வீட்டிலுள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக உண்பது அவர்களுக்கு நல்ல உணவுப் பழக்கம் குறித்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

மேலும், தங்களுக்கு பிடிக்காத உணவுப் பொருட்கள் குறித்து பெற்றோர்கள் பேசுவது குழந்தைகளின் எண்ண ஓட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

சிறு சிறு பரிசுகள்

குழந்தைகள் நல்ல உணவு பழக்கத்தை வெறும் பாராட்டுடன் விட்டுவிடாமல், சிறு சிறு பரிசுகளை அளிப்பதும் அவர்களை மென்மேலும் உற்சாகப்படுத்தும் என்று டினா கூறுகிறார்.

ஆனால், அந்த பரிசானது பூங்காவிற்கு அழைத்துச்செல்வது, ஓவியம் வரைய வைப்பது, விளையாடுவது போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டுமே தவிர உணவு சார்ந்ததாக இருக்கக் கூடாது என்று அவர் மேலும் கூறுகிறார்.

"நீ இதை சாப்பிட்டால் சாக்லேட் வாங்கி தருவேன் என்றோ, ஐஸ் கிரீம் வாங்கி தருகிறேன் என்றோ கூறாதீர்கள். ஏனெனில், நீங்கள் சாப்பிட கொடுக்கும் உணவு பரிசாக கொடுக்கும் உணவைவிட தரம் தாழ்ந்தது என்று குழந்தைகள் நினைக்கக் கூடும்," என்று டினா கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்