சூழலியல் மீதான போர்: ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக இதை செய்தே ஆக வேண்டும்’

சூழலியல் மீதான போர்: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்கள் படத்தின் காப்புரிமை Getty Images

இயற்கையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை பாரீஸீல் நடந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது 'அறிக்கை' அல்ல மனித குலத்திற்கான 'எச்சரிக்கை'.

அந்த அறிக்கையில் உள்ள சில முக்கிய தகவல்களை பிபிசியின் சூழலியல் செய்தியாளர் மேட் மெக்ராத் தொகுத்து தருகிறார்.

'நாம் ஆபத்தில் இருக்கிறோம்'

இந்த அறிக்கையை தயாரித்த ஆய்வு குழுவிற்கு தலைமை வகித்த பேராசிரியர் சார் பாப் வாட்சன், 'நாம் ஆபத்தில் இருக்கிறோம்' என்கிறார்.

இந்த அறிக்கையானது பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

வாட்சன் இயற்கையை சூழ்ந்துள்ள ஆபத்து குறித்து விவரிக்கும் போது, 'நாம் ஆபத்தில் இருக்கிறோம்' என்று கூறினாலும், இந்த சூழலியலை காக்க முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆற்றல் தேவைக்காக ஏறத்தாழ 200 கோடி மக்கள் மரங்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். புற்றுநோய்க்கான 70 சதவீத மருந்துகள் இயற்கையானது அல்லது இயற்கையினால் தூண்டப்பட்டு தயாரிக்கப்பட்டது.

தண்ணீரை சுத்திகரிப்பது மரங்கள்தான், மரங்கள்தான் உணவு வழங்குகின்றன, கரியமில வாயுவை நுகர்வது மரங்கள்தான், பெரும் புயலை தடுப்பதும் மரங்கள்தான்.

வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மனித குலம் இயற்கையை நம்பி இருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை இரட்டிப்பாகி இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்களின் நல்வாழ்வுக்காக இயற்கையை வரைமுறையின்றி சிதைத்து இருக்கிறார்கள். அதாவது நிலத்தை, பெருங்கடலை விஷமாக்கி, பல்லுயிர் சூழலை நாசமாக்கி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

சூழலியலை சிதைத்ததன் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்திருக்கின்றன. லட்சகணக்கான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

இந்த அறிக்கையை வடிவமைத்த குழுவில் இருந்த மற்றொரு பேராசிரியர் கேட் ப்ரூமேன், "நமது நுகர்வின் காரணமாக இயற்கை சூழல் மாறி வருகிறது" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நல் வாழ்வென்றால் என்ன?

இந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம் 'நல் வாழ்வு' குறித்த நம் புரிதல் மாறவேண்டும் என்பதுதான்.

மேற்கத்திய கலாசாரத்தின் புரிதலின்படி, தமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பது, பொருள் சேர்ப்பது, கடினமான உழைப்பதுதான் வாழ்க்கை என பல நூற்றாண்டு காலமாக கூறப்பட்டது.

நம்மைவிட நம் குழந்தைகள் அதிகமாக பொருளீட்டுவதுதான் வளர்ச்சி என புரிந்து கொள்ளப்பட்டது.

இந்த புரிதல் மாறவேண்டுமென இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

நாம் நுகர்வை குறைக்க வேண்டுமென்கிறார் பேராசிரியர் சண்ட்ரா டியாஸ்.

அவர், "நல்வாழ்வு என்பது குறித்த நம் புரிதலை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிகம் நுகர்வதுதான் சிறந்த வாழ்வு என்ற இந்த சமூக புரிதலையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

"சக மனிதரிகளுடன் நல்லுறவுடன் வாழ்வது, இயற்கையுடன் இயைந்து வாழ்வதுதான் நல்வாழ்வு என்ற புரிதல் ஏற்பட வேண்டும்" என்கிறார் அவர்.

"இந்த மாற்றம் என்பது எளிமையானது அல்ல. உடனே நிகழ்வதும் அல்ல ஆனால் நம் குழந்தைகளின் நல்வாழ்விற்காக, இன்னும் பிறக்காத தலைமுறைக்காக நாம் இதனை செய்தே ஆக வேண்டும்" என்று தெரிவிக்கிறார்.

இயற்கையா?பண்டமா?

இந்த மதிப்பீட்டின் மற்றொரு கருப்பொருள் மக்களுக்கான இயற்கையின் பங்களிப்பு.

இது சாதாரணமாக தோன்றினாலும், இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

இத்தனை காலமான பொருளாதார வல்லுநர்கள் இயற்கையை பண்டமாக, பணமாகதான் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படியாக கூறினால்தான் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் புரியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் வாதம்.

ஆனால், சில சூழலியலாளர்கள் இந்த பார்வைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த பார்வையானது இயற்கைக்கு ஊறு விளைவிக்கிறது, இயற்கையையும் மற்றொரு பண்டமாகவே பார்க்க உதவுகிறது என்கிறாகள் அவர்கள்.

இயற்கையை டாலராக, பவுண்டாக, ரூபாயாக பார்ப்பது மாற வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

சர்வதேச சூழலியல் மற்றும் வளர்ச்சி மையத்தை சேர்ந்த இனா போரஸ், "காடு நமக்கு பல விஷயங்களை வழங்குகிறது. ஆனால், அது எதையும் கருத்தில் எடுத்து கொள்வதில்லை. காடுகளை அழித்து நம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், உண்மை அப்படி இல்லை" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உள்ளூர் சமூகம்

வெளி தலையீடு இல்லாமல் உள்ளூர் சமூகத்தால் மேலாண்மை செய்யப்படும் இயற்கை வளமானதாக இருக்கிறது என்று இந்த அறிக்கை சுட்டிகாட்டுகிறது.

அதுபோல, இயற்கை குறித்த உள்ளூர் மக்களின் அறிவானது சிறப்பாக இருக்கிறது. அரசு அதனை அங்கீகரிக்க வேண்டும், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

கவனம் செலுத்துங்கள்

இந்த அறிக்கையில் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் 'அரசின் தோல்வி'.

2010ம் ஆண்டு ஜப்பானில் உயிரியல் பன்மையம் மாநாடு நடந்தது. அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. 2020ம் ஆண்டுகள் செயல்படுத்த வேண்டி இருபது இலக்குகள் நிர்ணயக்கப்பட்டன.

இந்த இருபது இலக்குகளில் நான்கு இலக்குகள் மட்டுமே எட்டப்பட்டன என்கிறது இந்த மதிப்பீட்டு அறிக்கை.

சரி. இந்த விவகாரத்தில் அரசின் பங்கு என்ன?

2015ஆம் ஆண்டு நடந்த பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் மாநாட்டில் 'இயற்கை மற்றும் மனிதர்கள்' குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் அடுத்த ஆண்டுகள் நடக்கும் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்