செர்னோபிள் அணு உலை விபத்து: கதிர்வீச்சால் உருவான சிவப்புக் காட்டில் ட்ரோன்கள் ஆய்வு

ஆளில்லா விமானம்

1986-ம் ஆண்டு ஏப்ரல் 26. அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் இடம் பெற்றிருந்த உக்ரைன் பிரதேசத்தில், செர்னோபிள் என்ற இடத்தில் அமைந்திருந்த அணு உலை வெடித்துச் சிதறி உலகை அதிரச் செய்தது.

ஓர் அணு உலை இப்படி வெடித்துச் சிதறும் என்று உலகம் அதுவரை நம்பவில்லை. இந்த விபத்தால் வெகுதூரத்துக்குப் பரவிய கதிரியக்க ஆபத்து வெகு காலத்துக்கும் நீடித்து நிற்கிறது. இன்னும் நீண்ட காலத்துக்கும் அதன் தாக்கம் இருக்கும். இது உலகின் மிகப்பெரும் அணு உலை விபத்துகளில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.

சம்பவ நாளில், செர்னோபிள் அணு உலை வளாகத்தின் 4-ம் எண் உலை வெடித்தவுடன், கதிர்வீச்சையும், அனலையும் உடனடியாக எதிர்கொண்டது அங்கிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள காடு. வெப்பத்தால் கருகி மடிந்த மரங்கள், மிக அதிக அளவிலான கதிர்வீச்சினை உள்வாங்கி பழுப்பு நிறத்துக்கு மாறின. இதன் மூலம் இந்தக் காடு 'சிவப்புக் காடு' என்று பெயர் பெற்றது.

இந்த சிவப்புக் காட்டினை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆளில்லா விமானத் தொகுப்பைக் கொண்டு தற்போது ஆராய்ந்துள்ளனர்.

உலகின் கதிரியக்க மாசு மிகுந்த இடங்களில் ஒன்று என்று கருதப்படும் இந்த இடத்தை பிரிட்டன் விஞ்ஞானிகள் அனுப்பிய ரோபோட்டிக் ஆளில்லா விமானத்தில் இருந்த சென்சார்கள் ஆராய்ந்து தகவல்களை சேகரித்தன. கதிரியக்க மாசுபாடு மிகுந்த இடங்கள் எவை என்பது குறித்த மேம்பட்ட தகவல்களை இந்த ஆராய்ச்சி உக்ரைன் அதிகாரிகளுக்கு வழங்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிவப்புக் காடு

இந்தக்காட்டின் சில பகுதிகள் இன்னமும் மனிதர்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.

பிரிட்டனின் 'நேஷனல் சென்டர் ஃபார் நியூக்ளியர் ரோபோடிக்ஸ்' (என்.சி.என்.ஆர்.) உருவாக்கிய ட்ரோன் ஆராய்ச்சி அமைப்பு ஒன்று, ஆபத்தான இடங்களை பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டே ஆராய்வதற்கு விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

அசையாத இறக்கை கொண்ட விமானங்கள் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் மரங்களுக்கு மேல் பறந்து பொதுவான கதிர்வீச்சு வரைபடம் ஒன்றை உருவாக்க உதவின.

படத்தின் காப்புரிமை NCNR/UNI OF BRISTOL

பிறகு அந்த வரைபடத்தில் முக்கியப் பகுதியாக கண்டறியப்பட்டவை சுழலும் இறக்கை கொண்ட ட்ரோன்கள் உதவியோடு மேற்கொண்டு ஆராயப்பட்டன. இவை பறந்தபடியே குறிப்பிட்ட இடத்தின் மேல் நிலை நின்று தங்கள் சென்சார் உதவியோடு மிகத் தெளிவான முப்பரிமாணத் தகவல்களை திரட்ட வல்லவை.

ஏப்ரல் மாதத்தில் இந்த ஆளில்லா விமான அமைப்பைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு, இந்தக் காட்டில் நிலவும் கதிர்வீச்சுப் பரவல் குறித்து தற்போது நிலவும் புரிதலை உறுதி செய்கிறது. ஆனால், இந்தப் புதிய ஆய்வு மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த கதிர்வீச்சுப் பரவல் குறித்து அதிக விளக்கமும், தெளிவும் கிடைத்துள்ளது. அத்துடன் எதிர்பாராத இடங்களில் அதிக கதிர்வீச்சு நிலவுவதாகவும் இது கண்டறிந்துள்ளது.

தரையில் சிதறிக்கிடக்கும் அணு எரிபொருள்கள்

"விபத்துக்கு உள்ளான இந்த அணு உலை வளாகத்தின் குறிப்பிட்ட சொல்லத்தக்க அம்சமாக இருப்பது, பயன்படுத்தி முடித்த எரிபொருள் (இதுதான் பயன்படுத்தாத எரிபொருளைவிடவும் மிக ஆபத்தானது) தரையில் சிதறிக்கிடப்பதே ஆகும். இது ஒரு மணி நேரத்துக்கு 1.2 மில்லிசிவெர்ட்ஸ் அளவுள்ள கதிர்வீச்சை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. இது மிகமிக அதிக கதிர்வீச்சு அளவாகும். இதன் பொருள் ஓராண்டுக்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு அளவு ஒரே மணி நேரத்தில் உடலைத் தாக்கும் என்பதாகும்" என்று என்.சி.என்.ஆர். இணை இயக்குநர் பேராசிரியர் டாம் ஸ்காட் பிபிசி நியூசிடம் தெரிவித்தார்.

2,600 சதுர கி.மீ. பரப்புள்ள நுழைவு மறுக்கப்படும் பகுதி

செர்னோபிளின் 2,600 சதுர கி.மீ. பரப்பளவுள்ள நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியை ஆராய்வதற்கு இன்னும் சில மாதங்களில் மீண்டும் உக்ரைன் வருவதற்கு திட்டமிட்டுள்ளது என்.சி.என்.ஆர். இந்த நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியில் நுழைவதற்கு காலப்போக்கில் மனிதர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பழைய செர்னோபிள் அணு உலை. தற்போதை புதிய தடுப்புக் கட்டுமானத்துக்குள்.

இந்தப் பகுதிக்கு கடந்த ஆண்டு 70 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து போயுள்ளனர். இதற்குள் தற்போது குறைவான ஆபத்துள்ள பகுதி என்று கருதப்படும் பரப்பை சூரியவிசை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் திட்டம் உள்ளது.

இந்த விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைகிறவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்பற்றப்படும் நடைமுறைகளை செம்மைப்படுத்துவதற்கு பிரிட்டன் மேற்கொள்ளும் கதிரியக்க வரைபடத் திட்டம் உதவும்.

பிரிட்டனின் அணுமின் நிலையங்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில், அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கும், பண்படுத்துவதற்கும் திட்டமிடப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சேர்ந்த 4.9 மில்லியன் டன் எடையுள்ள அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட தேசிய அளவிலான அமைப்பே என்.சி.என்.ஆர். என்பதாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்