பருவநிலை மாற்றத்துக்கும் குடும்ப தினத்துக்கும் என்ன தொடர்பு?

குடும்பம் படத்தின் காப்புரிமை Getty Images

இன்று சர்வதேச குடும்ப தினம். இந்த ஆண்டு, குடும்பமும் பருவநிலைமாற்றமும் என்ற தலைப்பில் , சூழலுக்கு கேடு விளைவிக்காத நிலைத்த வளர்ச்சி குறித்து விழிப்புணர்வினை அதிகரிக்க வேண்டும் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு குடும்ப தினம் அனுசரிக்கப்படுகின்றது.

மே 15ம் தேதியினை சர்வதேச குடும்ப தினமாக 1993ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. உலக மயமாக்கல், மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றால் குடும்ப அமைப்புகளுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னும் சமூகத்தின் அடிப்படை அலகாக குடும்பங்களே அமைந்துள்ளன, எனவே குடும்ப அமைப்புகளுக்குள் ஏற்படும் சிக்கல் , சமூக அமைப்பிற்கும் குடும்பங்களுக்கும் உள்ள தொடர்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக , பல நிகழ்வுகளை ஆண்டுதோறும் ஒருங்கிணைப்பதாக ஐநா தெரிவிக்கிறது.

கல்வி, உடல் நலம் , குடும்ப வன்முறை என குடும்பம் சார்ந்த பல கருப்பொருள்களை (theme )அடிப்படையாகக் கொண்டு சர்வதேச குடும்ப தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு முதன் முதலாக பருவநிலை மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச குடும்ப தினம் அனுசரிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

குடும்பங்களுக்கும் , பருவநிலை மாற்றத்திற்கும் என்ன தொடர்பு, சர்வதேச குடும்ப தினத்தினை பருவநிலை மாற்றத்தோடு தொடர்பு படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து , பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள இந்திய வனத்துறை ஆட்சியாளர் செந்தில்குமாரிடம் பேசினோம். "பருவநிலை மாற்றத்திற்கான காரணிகள் என்றவுடன் பெரும்பாலும் தொழிற்சாலைகள் குறித்து பேசுகிறோம், ஆனால், வீடுகளில் இருந்து உற்பத்தியாகும் பசுமை இல்ல வாயுகளை பற்றி அதிகம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். குடும்பங்களுக்கும் , பருவநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பு என்னவெனில் நாம் அதிகமாக நுகர்வோர்களாக இருக்கின்றோம். அதிக நுகர்வு மட்டுமல்ல, அதிக அளவில் கழிவுகளையும் உருவாக்குகிறோம். உணவு, ஆற்றல், அன்றாட அத்தியாவசிய பொருட்கள் என எதனை எடுத்துக் கொண்டாலும் அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நமக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய இயற்கை ஆற்றல் மூலங்கள் தேவைப்படுகின்றன.

தேவைக்கும் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஆற்றல் வீணடிக்கப்படுவதுடன், அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களையும் உற்பத்தி செய்கிறோம். நடப்பது, மிதிவண்டியில் செல்வது என்பதெல்லாம் குறைந்துவிட்டது மட்டுமல்லாமல், வீடுகளில் இரண்டு கார், பைக் என வாகனங்களும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நம்முடைய மீநுகர்வு போக்கும் பருவநிலை மாற்றத்திற்கான முதன்மை காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது" என்கிறார் செந்தில்.

மேலும், "இன்றைய பருவநிலை மாற்றத்திற்கான காரணம் மனித செயல்பாடுகள்தான். குடும்பங்கள், இந்த பாதிப்பினை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடும்ப அளவில் ஆற்றல் பயன்பாடுகளை முடிந்த அளவு குறைப்பது, வீட்டில் இருந்து உற்பத்தியாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை குறைப்பது, தேவைக்கு ஏற்ற அளவில் மட்டுமே இயற்கை வளங்களை பயன்படுத்துவது ஆகிய செயல்களை வீடுகள் முன்னெடுத்தால், நம்மால் உலக வெப்பமயமாதலை குறைக்க முடியும், குறைந்த பட்சம் இன்னும் அதிகமாகமால் இப்பொழுது உள்ள அளவிலேயே நிறுத்தவாவது முடியும். குடும்பங்கள் இந்தப் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

"பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் ஆகியவற்றால் எங்கோ பாதிப்புகள் ஏற்படுகின்றன என நினைப்பது தவறு. நாம் நேரடியாக அதன் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டு இருக்கின்றோம். பருவநிலை மாற்றத்தால் குறித்த நேரத்தில் மழை பெய்வதில்லை அல்லது ஒரே நேரத்தில் அதிக அளவில் பெய்து விடுகிறது, புதிய வகை பூச்சிகள் விவசாயத்தில் சேதத்தினை ஏற்படுத்துகின்றன. இப்பொழுது பரவும் புதிய வகையான காய்ச்சல்கள் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கின்றன. அந்த காய்ச்சல்களை ஏற்படுத்தும் நோய்க்கடத்திகள் (vectors) பருவநிலை மாற்றத்தால் அதிகம் பரவுகின்றன. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இன்னும் பல வகையான பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம். எனவே, பருவ நிலை மாற்றத்தால் குடும்பங்கள் சந்திக்கின்ற சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வினையும் அதிகரித்து இந்த பாதிப்புகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்" என்கிறார் செந்தில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :