இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்
இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக்கும் அதிகமான அந்தரங்க தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் குறுகிய நீளம் கொண்ட காணொளிகளை பகிர்ந்து கொள்ளும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் 49 மில்லியனுக்கும் அதிகமான அந்தரங்க தகவல்கள், எவ்வித கடவுச்சொல்லும் இன்றி அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியாகியுள்ளதாக டெக்கிரன்ச் எனும் இணையதள செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்டது.

"அனுராக் சென் எனும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை கொண்ட தரவுத்தளம் இணையத்தில் காணக்கிடைப்பதாக எங்களிடம் தெரிவித்தார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கசிந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இணையத்தில் கசிந்ததாக கூறப்படும் அந்த தரவுத்தளத்தில், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களின் கணக்கு விவர குறிப்பு (பயோ), புகைப்படம், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, வசிக்கும் நகரம் - நாடு ஆகிய தகவல்கள் மட்டுமின்றி, ஒவ்வொருவரது தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவையும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் கசிவு குறித்த மேலதிக விவரங்களை ஆராயும்போது, இந்தத் தரவுகளை தன்னகத்தே கொண்டிருந்த தரவுத் தளம் மும்பையை சேர்ந்த மின்னணு சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) நிறுவனமான சாட்டர்பாக்ஸுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விளம்பரத்தை பெற்று அதை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளவர்களின் வாயிலாக அவர்களது தனிப்பட்ட பக்கத்தில் வெளியிட வைத்து சந்தைப்படுத்தும் பணியை சாட்டர்பாக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது கசிந்துள்ள தரவுத்தளத்தில், ஒரு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளருக்கு உள்ள பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை, பதிவுகள் பெற்ற விருப்பக்குறிகள், பகிர்வுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு ஒரு விளம்பரத்தை பகிர்வதற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்ற மதிப்பீடும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவலை தெரிந்துகொள்வதற்காக சாட்டர்பாக்ஸ் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால், இதுவரை எவ்வித பதிலும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர்களின் மில்லியன்கணக்கான அந்தரங்க தகவல்களை கொண்டிருந்த அந்த தரவுத்தளம் தற்போது பொதுவெளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கேட்க இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, "இன்ஸ்டாகிராம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இன்ஸ்டாகிராமிலிருந்து எடுக்கப்பட்டதா அல்லது மற்ற மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதுமட்டுமின்றி, இந்த தரவுத்தளம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? பொதுவெளியில் எப்படி வெளியானது? என்பது குறித்து அறிவதற்காக சாட்டர்பாக்ஸ் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

இன்ஸ்டாகிராமின் தனியுரிமை கொள்கையின்படி, அதன் பயன்பாட்டாளர்களின் கணக்கு சார்ந்த விவரங்களை திரட்டுவது சட்ட விரோதமானது ஆகும்.

திருடப்பட்டதா? பயனாளர்களால் கொடுக்கப்பட்டதா?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் ஆதிக்கம் மிக்க சுமார் 1,84,840 பேர் தங்களுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்படுவதாக சாட்டர்பாக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை சாட்டர்பாக்ஸ் போன்ற மின்னணு சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் எவ்வாறு திரட்டுகின்றன என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்த விளக்கத்தை பெறுவதற்காக சென்னையை சேர்ந்த மின்னணு சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) நிறுவனமான எக்கோவிஎம்ஈயின் தலைமை செயலதிகாரி சௌரவ் ஜெயினிடம் பேசினோம்.

"இது கண்டிப்பாக தவறான வழிகளில் திரட்டப்பட்ட தரவாக இருக்க முடியாது. ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் எவ்வளவு பயனர் தரவை கொண்டிருக்கிறதோ அது அவ்வளவு வணிகத்தை மேற்கொள்ள முடியும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, எங்களது நிறுவனத்தில் கூட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் பெயர், வயது, இருப்பிடம், அலைபேசி எண்/ மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்கள் உள்ளன" என்று சௌரவ் கூறுகிறார்.

பிறகு எந்த வழியை பயன்படுத்தி இணையதள பயன்பாட்டாளர்களின் அந்தரங்க தகவல்கள் திரட்டப்படுகின்றன என்று அவரிடம் கேட்டபோது, "பல்வேறு இணையதளங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் தனிப்பட்ட ஒருவரை மையமாக கொண்டு ஏற்படுத்தப்படும் கண்ணை பறிக்கும் விளம்பரங்கள், கருத்துக் கணிப்புகள், வேலைவாய்ப்புகள் போன்றவற்றை கிளிக் செய்யும்போது ஒருவர் அறிந்தோ, அறியாமலோ தன்னை பற்றிய தகவல்களை பறிகொடுக்கிறார். அந்த தகவலை பெறும் நிறுவனம் அதை மற்றொரு நிறுவனத்திற்கு விற்பதற்கு கூட வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images

சாட்டர்பாக்ஸ் நிறுவனத்தின் விவகாரத்தை பொறுத்தவரை, அவர்கள் திரட்டிய தகவலை சரியான முறையில் பாதுகாக்காமல் விட்டதே தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குறித்த தரவை அந்நிறுவனம் கடவுச்சொல் கூட இல்லாமல் நிர்வகித்துள்ளது" என்று சௌரவ் மேலும் கூறுகிறார்.

சாட்டர்பாக்ஸ் நிறுவனம் தற்போது அந்த தரவை பொதுவெளியில் இருந்து நீக்கியிருக்கலாம்; ஆனால், அவர்கள் நீக்குவதற்கும் முன்னர் யாராவது பயனர்களின் தகவல்களை பிரதியெடுத்து வைத்திருப்பார்களா? அதன் காரணமாக மேலதிக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற ஐயம் எழுந்துள்ளது.

உங்களது அந்தரங்க தரவை பாதுகாப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களின் அந்தரங்க தகவல்கள் பொதுவெளியில் வெளியாவது இது முதல் முறையல்ல.

2017ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள தொழில்நுட்ப குறைபாட்டை பயன்படுத்தி கொண்ட ஹேக்கர்கள் அதன் ஆறு மில்லியன் பயன்பாட்டாளர்களின் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை திருடி அவற்றை பிட்காயினுக்கு பதிலாக விற்பனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பயன்பாட்டாளர்கள் தங்களது அந்தரங்க தகவல்கள் பறிபோவதை தடுப்பதற்கான சில வழிமுறைகளை காண்போம்.

  • "அமேசான் இணையதளத்தில் பொருட்களை வாங்க 50 சதவீத தள்ளுபடி! கூப்பனுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்' என்பது போன்ற கண்ணை பறிக்கும் போலி விளம்பரங்களை நம்பாதீர்கள்.
  • 'எங்களது இணையதளத்தின் சேவையை தொடர்ந்து பயன்படுத்த உங்களது கூகுள்/ ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தி புகுபதிகை செய்யுங்கள்' என்று கேட்கப்படுவதைப் போன்ற சூழ்நிலைகளில், அந்த குறிப்பிட்ட இணையதளத்திலேயே தனி கணக்கு ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
  • 'எங்கள் சர்வேவுக்கு பதிலளியுங்கள் - 1000 ரூபாய் கூப்பனை பரிசாக வெல்லுங்கள்' என்பது போன்ற போலியான கருத்துக்கணிப்புகளில் பங்கேற்று உங்களது அந்தரங்க தகவல்களை இழக்காதீர்கள்.
  • ஒரு மென்பொருளையோ, செயலியையோ நிறுவுறும்போது அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்யுங்கள்.
  • கல்வி கண்காட்சி, பொருட்காட்சி, விற்பனை மையங்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது கண்மூடித்தனமாக உங்களை பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :