நோயாளிகளே தங்களை பராமரித்து கொள்ளும் படுக்கை - தமிழரின் கண்டுபிடிப்புக்கு குவியும் பாராட்டு

நோயாளிகள் தங்களை பராமரிப்பதற்கு படிக்காத மெக்கானிக் கண்டுபிடித்த "டாய்லெட் படுக்கை"

நோயாளிகளை பராமரிப்பது, குறிப்பாக நீண்டகாலமாக நோயாளிகளாக இருப்போரை தொடர்ந்து பராமரித்து வருவது மிகவும் கடினம். அதிலும், படுத்தபடுக்கையாய் இருப்போருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்வது மேலும் கடினம். அவர்களை கவனிப்பதற்கே பலர் தேவைப்படுவர்.

படுத்தப்படுக்கையில் இருக்கின்ற நோயாளிகள் சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் அவர்கள் படுத்திருக்கும் படுக்கையில் இருந்து தூக்கிச் செல்ல வேண்டியிருக்கும்.

இல்லாவிட்டால், அந்த படுக்கையில் இருந்தவாறே அவர்கள் சிறுநீர், மலம் கழித்துவிட, அவற்றை கழிவறைக்கு எடுத்து சென்று கொட்ட வேண்டியிருக்கும்.

படுத்தப்படுக்கையாய் எழும்புவதற்கு சிரமப்படும் நோயாளிகள் தாங்களே இயற்கை கடமைகளை நிறைவேற்றி கொள்ள வசதியையும் வழங்கியுள்ளது மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த சரவணமுத்து கண்டுபிடித்துள்ள "டாய்லெட் படுக்கை". தென்காசியில் பிறந்து, பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்து தற்போது தளவாய்புரத்தில் இவர் வசித்து வருகிறார்.

இவர் கண்டுபிடித்துள்ள படுக்கையில் நோயாளிகள் சிறுநீர் கழிக்க வேண்டும் அல்லது டாய்லெட் செல்ல வேண்டும் என்றால், அவர்களின் கையில் ரிமோட் இருக்கும்.

Image caption சரவணமுத்துவின் குடும்பம்

முதலில் ஒரு பட்டனை அழுத்தியவுடன், முன்பக்கத்தில் இருக்கும் துளை ஒன்றை மூடியவாறு இருக்கும் கதவு திறக்கும். அடுத்ததாக இந்த படுக்கையில் பொருத்தப்பட்டுள்ள டாய்லெட் ஒன்று சரியான இடத்திற்கு வந்து நிலைபெற்றுவிடும்.

இந்த துளையின் கதவு தள்ளிச் சென்றுவுடன், அந்த படுக்கையில் பொருத்தப்பட்டுள்ள டாய்லெட் பாத்திரம் இந்த துளை பகுதியில் வந்து பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சிறுநீர் போகலாம் அல்லது மலம் கழிக்கலாம். இந்த படுக்கையிலேயே தண்ணீர் தொட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. . படுக்கை பக்கத்தில் இருக்கும் ரிமோட்டை இயக்கினால், தண்ணீர் பாய்ந்து இந்த டாய்லெட்டை சுத்தம் செய்துவிடும்.

இந்த தண்ணீரும், கழிவும் சேர்ந்து கீழே இணைக்கப்பட்ட குழாய் வழியாக, கழிவுத் தொட்டிக்கு சென்றுவிடும்.

கண்டுபிடிப்புக்கான தூண்டுதல்

சரவணமுத்துவின் மனைவிக்கு கருப்பையை அகற்றுவதற்கு 2015ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

அப்போது, வீட்டுக்கு வெளியே சுமார் 30 அடி தொலைவில் ஒதுக்குபுறமாக இருக்கும் கழிவறைக்கு செல்ல அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை செய்து, எழுந்து உட்கார முடியாத சூழ்நிலையில், தவித்த அவரை தூக்கி செல்வதுகூட மிகவும் சிரமமாக இருந்துள்ளது.

அறுவை சிகிச்சையால் வலியால் துன்பப்பட்ட சரவணமுத்துவின் மனைவி, இந்த பணிகளை எல்லா கணவனே செய்வதை பார்த்து கவலையடைந்துள்ளார். "என்னென்னவோ பண்றீங்களே, இப்படி படுத்த படுக்கையாய் நோய்வாய்பட்டு கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யக்கூடாதா" என்று அப்போது மனைவி கேட்டுள்ளார். மனைவியின் அந்த ஒற்றை கேள்வித்தான் சரவணமுத்துவை ஒரு கண்டுபிடிப்பாளராக உயர்த்தியுள்ளது.

படிக்காவிட்டாலும், புதிதாக செய்வதில் ஆர்வம்

மூன்றாம் வகுப்புக்கு பின்னர் படிப்பை முடித்துவிட்டு, சிறு வயதிலேயே தனது தந்தையோடு கார் மெக்கானிக் வேலை செய்ய தொடங்கினார் சரவணமுத்து.

மெக்கானிக் மனநிலையிலேயே வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டிருப்பது சரவணமுத்துவின் பழக்கம். கார் மெக்கானிக், டிங்கரிங் செய்வதிலும் வித்தியாசமான முறைகளை இவர் கையாண்டு வந்துள்ளார்.

மெக்கானிக் மற்றும் வெல்டிங் வேவை செய்து கொண்டிருந்த சரணவமுத்து, தொழிற்கல்வி மற்றும் பொறியியல் மாணவர்களின் புராஜெட் பணிகளையும் செய்து கொடுத்து வருவாய் ஈட்டி வந்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் செய்வதற்காக கொண்டுவரும் புராஜெட்டில் இருக்கும் குழப்பங்களை அந்த மாணவர்களுக்கு புரிய வைத்து, வேறு மாதிரியாக, வித்தியாசமாக செய்வதற்கு இவர் ஆலோசனைகளை கொடுத்தும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் செய்து கொடுத்திருந்த சில புராஜெட்டுகளுக்கு விருதுகளும் கிடைத்துள்ளன.

இவ்வாறு எனது பணியால் சிலர் விருதுகள் பெற்றபோது, தனக்கு விருது பெறுவதற்கான வாய்ப்பு உண்டா? என்று சிலரிடம் அவர் கேட்டபோது, பலரும் "நீ படித்திருக்கிறாயா? உனக்கு இது தேவையா? அரசு என்ன உனக்கு வேலை கொடுக்க போகிறதா? வேலையை செஞ்சியா? காசு கிடைத்ததா?, போய்கிட்டே இரு" என்று கூறிவிட்டதாக தெரிவிக்கிறார் சரவணமுத்து.

உன்னுடைய கண்டுபிடிப்பை இனிமேல் விற்காதே என்று அறிவுரை கூறிய ஒருசில நல்லவர்களால் இப்போது கண்டுபிடிப்பாளராக உயர்ந்துள்ளதாக குறிப்பிடுகிறார் சரணமுத்து.

வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

2015ஆம் ஆண்டு இந்த டாய்லெட் படுக்கையை சரவணமுத்து கண்டுபிடித்தார். அந்த படுக்கை முழுவதையும் செய்ய வசதியில்லாத காரணத்தால், அதற்கான மாதிரியை மட்டுமே செய்திருந்தார்.

இதுபற்றி செய்தி ஒன்று வெளிவரவே, சென்னையில் ஆறு மாதங்களாக படுத்தப்படுக்கையான தாயை வைத்து பராமரித்து வந்த குருமூர்த்தி என்பவர் அந்த செய்தியை வாசித்து, சரவணமுத்துவை தொடர்பு கொண்டுள்ளார்.

குருமூர்த்தியிடம் நிதியுதவி பெற்று முதல் "டாய்லெட் படுக்கையை" செய்து முடித்து அவரிடம் வழங்கியுள்ளார் சரவணமுத்து. மேலும், இந்த படுக்கை இயங்குகின்ற காணொளியை பதிவு செய்து இந்திய ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளார் சரவணமுத்து. இவ்வாறு அவர் அனுப்பிய பல கண்டுபிடிப்புகளில், இதுமட்டும் சிறந்த கவனம் பெற்றுள்ளது. இந்திய ஆராய்ச்சி மையத்தில் இருந்து வந்து அவரது கண்டுபிடிப்பை பார்த்து சென்றுள்ளனர்.

மூன்று ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை இந்த கண்டுபிடிப்பை எவ்வாறு மேம்படுத்தி வருகிறார் என்று இந்திய ஆராய்ச்சி மையத்தில் இருந்து தொடர்ந்து வந்து பார்த்து சென்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஜனவரியில் வந்து பார்த்து ஆய்வு செய்தவர்கள் மிக சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இந்திய ஆராய்ச்சி மையம் அறிவியல் கண்காட்சி ஒன்றை நடத்துவதாகவும், அதில் சரவணமுத்து கலந்துகொள்ள வேண்டுமெனவும் இந்திய ஆராய்ச்சி மையம் கேட்டுக்கொண்டது.

இந்த கண்டுபிடிப்பை காந்தி நகருக்கு அனுப்பும் செலவு முதல் எல்லாவற்றையும் இந்திய ஆராய்ச்சி மையமே செய்துள்ளது.

குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற இந்த கண்காட்சியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கி வைத்தார். காந்தி நகரில்தான் தேசிய புத்தாக்க நிறுவனம் உள்ளது.

இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 167 கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியில், தனது கண்டுபிடிப்பான "டாய்லெட் படுக்கை" முதலில் வைக்கப்பட்டதை பார்த்து மிகவும் பெருமிதம் அடைந்ததாகக் கூறுகிறார் சரவணமுத்து.

அந்த அரங்கில் தனது கண்டுபிடிப்பு தேசிய அளவில் இரண்டாவது இடம்பெற்று விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றதாக சரவணமுத்து குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற 10 மாநிலங்களில் தமிழ் நாட்டில் இருந்து தனக்கு கிடைத்ததால் பெருமிதம் அடைந்ததாக கூறுகிறார் சரவணமுத்து.

குவியும் முன்பதிவுகள்

இந்த கண்டுபிடிப்புக்கு தேசிய அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்னரே, இந்த "டாய்லெட் படுக்கையை" செய்து கொடுக்க சரவணமுத்துவுக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

இதுவரை 1,868 டாய்லெட் படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வென்றாக செய்ய, ஒரு படுக்கைக்கு இரண்டு மாத காலமும், 61 ஆயிரம் ரூபாய் செலவு ஆவதாகவும் சரவணமுத்து குறிப்பிடுகிறார்.

இதனை ஒரு நிறுவனமாக தொடங்கி, உற்பத்தியை பெருக்கினால், அதிக படுக்கைகளை செய்து, குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்க செய்ய முடியும் என்று சரவணமுத்து தெரிவிக்கிறார்.

இது பற்றி அரசிடம் உதவி கேட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர், சுகாதார துறையினர் இவரிடம் இதுபற்றி பேசியுள்ளதாகவும் சரவணமுத்து பிபிசியிடம் தெரிவித்தார்.

நோயாளிகள் பலருக்கும் உதவுகின்ற இந்த டாய்லெட் பாமரர்களையும் சென்றடைய வழிபிறக்க வேண்டும் என்பது சரவணமுத்துவின் நோக்கமாக உள்ளது.

அடுத்த திட்டம்

அடுத்த திட்டமாக, மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் பற்றிய கண்டுபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக சரவணமுத்து தெரிவித்தார். கிணறு தூர்வாருதல், செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வோரை தூசிகள், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் தாக்கும் ஆபத்து உள்ளது.

இவர் கண்டுபிடித்த சிறு இயந்திரத்தை பணிசெய்யும்போது இடுப்பில் கட்டிக்கொண்டு சுவிட்சை இயக்கினால், சுற்றியிருக்கும் காற்றை உள்வாங்கி சுத்தப்படுத்தி அவர்களுக்கு சுத்தமான காற்றாக சுவாசிக்க கொடுக்கும் என்று ஆய்வு செய்து வரும் புதிய கண்டுபிடிப்பை விளக்கினார் சரவணமுத்து.

சுற்றி நடக்கும் நிகழ்வுக்கு பதில்தான் "டாய்லெட் படுக்கை"

தன்னை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளுக்கு தான் கொடுத்த பதில்தான் இந்த "டாய்லெட் படுக்கை" என்கிறார் சரவணமுத்து.

இணையம், மின்னஞ்சல் பற்றி அறியாத எனக்கு, எல்லா உதவிகளையும் செய்து, பல மட்டங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி என்னை வெளிச்சத்திற்கு கொண்ட வந்தவர் புகைப்படக் கலைஞராக ஜோஸ் குமாரை எனக்கு அளித்த பேட்டியின்போது நன்றியோடு நினைவுகூர்ந்தார் சரவணமுத்து.

'சிங்கம்' அண்ணாமலை ஐபிஎஸ்: நான் அரசியலில் ஈடுபட போகிறேனா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :