பாம்புக்கடியால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு: விஷமுறிவு மருந்துகளின் தரத்தில் சந்தேகம்

பாம்பு படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப்படம்

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாம்பு கடிக்கு பலியாகும் நிலையில், பாம்பு கடிக்கு குறைந்த செலவில் தரமான விஷமுறிவு மருந்துகளை தயார் செய்யும் ஆய்வில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் பங்குகொள்வது தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் ஓராண்டில் பாம்பு கடிக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை 81,000 முதல் 1,38,000 வரை உள்ளது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், பாம்பு கடியால் சுமார் நான்கு லட்சம் பேர் நிரந்தரமாக மாற்றுத்திறனாளியாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளது.

இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில்தான் பாம்பு கடி இறப்புகள் அதிகம் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் பாம்பு கடிக்கு பலியாகும் 1.30 லட்சத்தில் சுமார் 50,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் மரணங்களை கருத்தில் கொண்டு, கடந்த மே மாத இறுதியில், பாம்பு கடி இறப்புகளுக்கு கவனம் தேவை என்று கூறிய உலக சுகாதார நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த வெல்கம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஓர் ஆய்வை நடத்தவுள்ளது.

படத்தின் காப்புரிமை Alamy

இதில், பாம்பு கடிக்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சையை மேலும் தரமானதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை எளிதில் கிடைக்கும் வகையில் விஷமுறிவு மருந்து தயாரிக்கவுள்ளதாக லான்சென்ட் மருத்துவ சஞ்சிகையின் தலையங்கம் கூறுகிறது. இந்த ஆய்வில் இந்தியாவை சேர்ந்த ஆய்வாளர்களும் பங்குபெறவுள்ளனர்.

உலகளவில் 60 சதவீத விஷபாம்புகளுக்கு மட்டுமே விஷமுறிவு மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், தயாரிக்கப்பட்ட விஷமுறிவு மருந்துகளில் பாதிக்கும் குறைவான மருந்துகள் பயனற்றவை, அதிக விலையுள்ளவை, எளிதில் கிடைக்க முடியாதவை அல்லது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளாக உள்ளன என்றும் தெரியவந்துள்ளது என்கிறது லான்சென்ட்.

பாம்பு கடி மரணங்களை தடுக்க தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்து எத்தகையது, அதன் தரத்தை உயர்த்துவது குறித்து ஆய்வாளர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

100 ஆண்டுகளாக மாறாத மருந்து தயாரிப்பு முறை

படத்தின் காப்புரிமை Emanuele Cremaschi/Getty Images

இந்தியாவில் பாம்பு கடி விஷமுறிவு ஆய்வில் நிபுணராக கருதப்படும் ஆராய்ச்சியாளர் கார்த்திக் சுனாகரிடம் இது பற்றி பேசினோம். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றும் கார்த்திக், விஷமுறிவு தொடர்பாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

''இந்தியாவில் நான்கு விதமான பாம்புகளில் இருந்துதான் பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த நான்கு பாம்பு இனங்களை தாண்டி, அதிக விஷமுள்ள பாம்புகளும் இந்தியாவில் உள்ளன. அந்த பாம்புகள் கடித்தால், தற்போது நம்மிடம் உள்ள விஷ முறிவு மருந்து பலனளிப்பது சந்தேகம்தான்,'' என்கிறார்.

அதேபோல தற்போது தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துகளின் தரத்தை கேள்விக்கு உட்படுத்தவேண்டியுள்ளது என்கிறார் கார்த்திக்.

''கடந்த 100 ஆண்டுகளில் விஷ முறிவு மருந்து தயாரிக்கும் முறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக நமக்கு கிடைக்கும் மருந்தின் தரம் உயர்ந்ததாக இல்லை. அதனால், தற்போது விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் முறையில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம். தற்போதுள்ள முறைப்படி, பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், குதிரைகளில் செலுத்தப்பட்டு, பின்னர் குதிரைகளின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பொருள் (anti-body) விஷமுறிவு மருந்தாக பயன்படுத்தபடுகிறது. இந்த தயாரிப்பு முறையில் மாற்றம் தேவை,''என்கிறார் கார்த்திக்.

படத்தின் காப்புரிமை Barcroft Media/Getty Images

விஷமுறிவு மருந்தின் தரம் குறைவதற்கான காரணத்தை விளக்கிய கார்த்திக், ''குறிப்பாக குதிரைகளின் உடலில் செலுத்தப்பட்டு, பின்னர் அவற்றில் உருவாகும் நோய் எதிர்ப்பொருளை எடுக்கும்போது, சில தேவையற்ற பொருட்களும் (foreign objects, toxins) அதனுடன் சேர்ந்திருக்கும். இதன்காரணமாக, விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டாலும், அதன் தரம் காரணமாக, அதிக அளவில் விஷமுறிவு மருந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். சிலவேளைகளில் பக்கவிளைவுகள் ஏற்படும்,'' என்கிறார்.

பாம்பு விஷம் சேகரிப்பில் அக்கறை தேவை

இந்தியாவின் பாம்பு மனிதர் என்று அறியப்படும் ரோமில்ஸ் விட்டேகருடன் இணைந்து பணியாற்றும் நிபுணர் ஞானேஸ்வர், தமிழகத்தை போல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் விஷமுறிவுக்கான பாம்பு விஷம் சேகரிப்பு அதிகரிக்க வேண்டும் என்கிறார்.

படத்தின் காப்புரிமை Antonio Masiello/Getty Images

''தமிழகத்தில் வனத்துறையின் அனுமதியுடன் 1982 முதல் இருளர் மக்களின் கூட்டுறவு பண்ணை மூலம் விஷம் சேகரிக்கபட்டு, மருந்து தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் இதுபோன்ற முயற்சி உடனடியாக மேற்கொள்ளபட வேண்டிய தேவை தற்போது உள்ளது. இந்தியாவின் மற்ற இடங்களில் இருந்தும் சேகரித்தால்தான், புவியியல் ரீதியாக வித்தியசமான குடும்பங்களைச் சேர்ந்த பாம்புகளின் திரவம் மூலம் மருந்து தயாரிக்கமுடியும்,'' என்கிறார்.

உலகளவில் இந்தியாவில்தான் விஷமுறிவு மருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக கூறும் அவர், ''இந்தியாவில் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்து ஒரு குப்பி ரூ.500-க்கு கிடைக்கிறது. இதே அளவு அமெரிக்காவில் கிடைக்க ஒரு லட்சம் ரூபாய் தேவை. இந்தியாவில் உள்ள மருந்தின் தரத்தை உயர்த்த வேண்டும். அந்த மருந்தால் ஒவ்வாமை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் அந்த மருந்தை அதிக செயல்திறன் வாய்ந்ததாக உருவாக்க வேண்டும்,''என்கிறார் ஞானேஸ்வர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :