பருவநிலை மாற்றம்: ‘தண்ணீர் பிரச்சனை, இடப்பெயர்வு, வறுமை’ - மீண்டும் ஓர் அழுத்தமான எச்சரிக்கை

பருவநிலை மாற்றம்: 'தண்ணீர் பிரச்சனை, இடப்பெயர்வு, வறுமை' - மீண்டும் ஓர் அழுத்தமான எச்சரிக்கை படத்தின் காப்புரிமை Getty Images

பருவநிலை மாற்றம் பணக்காரர்களைவிட ஏழைகளை மிக மோசமாக பாதிக்கும். அதேநேரம் ஜனநாயகத்திற்கு, தனிமனித உரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை ஒன்று.

பருவநிலை மாற்றம் மனித உரிமை, ஏழ்மையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குமென ஓர் அறிக்கையை அண்மையில் ஐ.நா வெளியிட்டது. இந்த அறிக்கையை தயாரித்தவர் ஃபிலிப் ஆல்ஸ்டோன்.

அந்த அறிக்கையில் பல அஞ்சதக்க விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

'ஏழ்மையை நோக்கி 12 கோடி மக்கள்'

"கடந்த 50 ஆண்டுகால வளர்ச்சி, சுகாதாரத் துறை மற்றும் வறுமை ஒழிப்பில் நாம் அடைந்த முன்னேற்றம் இவை அனைத்துக்கும் அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2030ம் ஆண்டுக்குள் 12 கோடி மக்களை இந்த பருவநிலை மாற்றம் வறுமையில் தள்ளும். குறிப்பாக வறுமையில் உழலும் நாடுகளில் இந்த பருவநிலை மாற்றமானது மோசமான ஆதிக்கம் செலுத்தும் என்கிறார் இந்த அறிக்கையை தயாரித்த ஃபிலிப்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏற்கெனவே பருவநிலை மாற்றம் குறித்து நாம் வைத்திருக்கும் இலக்கை அடைந்தாலும், ஒரு கோடி மக்கள் வறுமை நிலையை நோக்கி தள்ளப்படுவார்கள், பெரிய அளவில் இடப்பெயர்வு நிகழும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார் அவர்.

ஏழ்மையில் இருப்பவர்கள் புவி வெப்பமயமாதலுக்கு பெரிய அளவில் காரணமில்லை என்றாலும், அவர்கள்தான் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வறுமையின் காரணமாக இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள முடியாதவர்கள் அவர்கள் என்கிறார் ஃபிலிப்.

இந்த அறிக்கையில் இன ஒதுக்கல் என்ற பதத்தை அவர் பயன்படுத்துகிறார்.

"நாம் 'பருவநிலை இனஒதுக்கல்'ஐ எதிர்க்கொள்ளும் சூழலில் இருக்கிறோம். அதிக வெப்பம், பசி இதிலிருந்து எல்லாம் பணக்காரர்கள் தங்களை தற்காத்து கொள்வார்கள். ஆனால், அவர்களை தவிர்த்து பிறர் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்" என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கிறார் அவர்.

'வாழ்வதற்கான உரிமை'

மனித உரிமைக்கும் பருவநிலை மாற்றத்திற்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. ஆனால், அதை பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புறம் தள்ளுகிறோம். வாழ்வதற்கான உரிமை, அடிப்படை உரிமைகளான உணவு, இருப்பிடம், குடிநீர் இவை அனைத்தும் பெரிய அளவில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் மீதும் பெரிய அளவில் தாக்கம் செலுத்தி இருப்பதாக கூறுகிறார் ஃபிலிப்.

`தனியார்மயம் தீர்வல்ல'

சிலர் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சமத்துவமின்மை மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உண்மையான தீர்வை தேடி கொண்டிருக்க, சிலர் இதனையும் பொருளாதார வாய்ப்பாக கருதுகிறார்கள்; தனியார்மயத்தை தீர்வாக முன் வைக்கிறார்கள். உண்மையில் தனியார்மயம் தீர்வல்ல. இது இன்னும் சிக்கலை அதிகப்படுத்தவே செய்யும் என்கிறார் ஃபிலிப்.

படத்தின் காப்புரிமை Getty Images

இப்படியாக பிரச்சனை இருக்கிறது. இதற்கெல்லாம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதை ஒப்பு கொள்வதுதான் தீர்வுக்கான வழி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கிறார் ஃபிலிப்.

'தமிழகத்தின் நிலை என்ன?'

"தமிழகத்திலும் இப்படியான நிலைதான் நிலவுகிறது. ஆனால், அதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை" என்கிறார் சூழலியல் எழுத்தாளர் இரா. முருகவேள்.

பருவநிலை மாற்றம் குறித்து 'பருவநிலை அகதிகள்' எனும் புத்தகத்தை எழுதியவர் இரா. முருகவேள்.

படத்தின் காப்புரிமை Facebook

அவர், "1980களில் பெரிய அளவில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கோவையை நோக்கி பெரிய அளவில் இடப்பெயர்வு நிகழ்ந்தது. ஏதுமற்ற பிச்சைக்காரர்கள்தான் நடைபாதையில் வசிப்பார்கள் என்ற பொதுவான எண்ணம் அப்போதுதான் உடைந்தது. நிலம் வைத்திருந்தவர்கள், வீடு வைத்திருந்தவர்கள் என பலர் விவசாயம் பொய்த்ததால் வாழ்வாதாரத்திற்காக கோவை நடைபாதைகளில் குடியேறினர். கிடைத்த வேலைகளை செய்தனர். அடுத்து 90களில் இதுபோல மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்தனர். இறுதியாக தஞ்சை பகுதிகளிலிருந்தும் பிழைப்புக்காக பெருநகரங்களில் குடியேறினர். இவர்களை பருவநிலை அகதிகளாக அரசு பார்க்காமல் வெறும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக மட்டுமே அரசு பார்த்தது, பார்க்கிறது" என்கிறார்.

மேலும் அவர், "உள்நாட்டு மீன் உற்பத்தி, அதாவது கிராமத்தில் உள்ள குளங்கள், கண்மாய்கள், நதிகள் இதனை நம்பி மீன் பிடித்தல் தொழில் செய்யும் சில இனக்குழுக்கள் இருந்தன. இவர்களுக்கெல்லாம் என்ன ஆனது? இவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? பருவநிலை மாற்றத்திற்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை நாம் கணக்கில் எடுத்து கொள்வதே இல்லை" என்கிறார் முருகவேள்.

படத்தின் காப்புரிமை Getty Images

பருவநிலை பிரச்சனைகளிலிருந்தும் பணம் ஈட்டவே நிறுவனங்கள் விரும்புகின்றன என்று கூறும் முருகவேள், "இப்போது பெரிய அளவில் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது. அதற்கு என்ன தீர்வு என்று பார்க்காமல், இதனை பயன்படுத்தி தண்ணீரை தனியார்மயமாக்க பார்க்கிறார்கள். இது கலகத்திற்குதான் வழிவகுக்கும்" என்று தெரிவிக்கிறார்.

பொருளாதார அமைப்பில் மாற்றம்

பொருளாதார அமைப்பில் மாற்றத்தை கொண்டு வருவதும், மிகை உற்பத்தியை குறைப்பதுதான் உண்மையான தீர்வாக இருக்கும் என்று சொல்லும் முருகவேள், ஏதோவொரு நாடு கரியமில வாயுவை அதிகம் உமிழ்வதால் மற்றொரு நாடு பாதிக்கப்படுகிறது என்கிறார்.

இதே கருத்தைதான் முன் வைக்கிறார் 'திஸ் சேஞ்சஸ் எவரிதிங் கேபிடலிஸம் Vs தி கிளைமேட்' புத்தகத்தை எழுதிய நையோமி க்ளையன்.

அவர் தனது புத்தகத்தில், "நமது பொருளாதார முறையும், நமது புவியும் சண்டையிட்டு கொண்டுள்ளன. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், நமது பொருளாதார முறை நம் வாழ்வில் அதிக தாக்கம் செலுத்துகிறது. பொருளாதார முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும், இல்லையென்றால் பருவநிலை மாற்றத்தின் இடர்களை அனுபவிக்கதான் வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: