சந்திரயான்-2 நிலவில் செலவிடப் போவது எத்தனை நாள் தெரியுமா?

சந்திரயான் படத்தின் காப்புரிமை Getty Images

சந்திராயன் விண்கலம் நேற்று ஏவப்பட்ட நிலையில், நிலவில் அதன் ஆயுள்காலம் எத்தனை நாள் குறித்த தகவல்கள் வெளியாகின்றன.

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 நேற்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டிற்கான இருபது மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முதல்நாள் மாலை 6.43க்கு துவங்கப்பட்டது. இதற்குப் பிறகு ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பணிகள் துவங்கின. இந்தப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது.

ராக்கெட் ஏவப்பட்டு இரண்டு நிமிடங்களில் அதன் வெப்பத் தடுப்பு கவசம் விலகியது. அடுத்ததாக அதனுடைய க்ரையோஜெனிக் ராக்கெட் செயல்பட ஆரம்பித்தது. சரியாக 16.55 நிமிடங்களில் க்ரையோஜெனிக் எஞ்சின் நிறுத்தப்பட்டு, திட்டமிட்டபடி சந்திரயான் - 2 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்தது.

இந்த புறப்பாடு இரண்டு காரணங்களுக்காக வெகுவாகக் கவனிக்கப்பட்டது. முன்னதாக சந்திராயன் - 2ன் பயணம் ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 2.51க்குத் துவங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதாவது ராக்கெட் புறப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பாக சில தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராக்கெட்டின் பயணம் ரத்துசெய்யப்பட்டது.

இதற்குப் பிறகு பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, இன்று ஜூலை 22ஆம் தேதி ஏவப்படுமென அறிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை ISRO

இரண்டாவதாக, இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா தனது விண்வெளி ஆய்வில் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடிக்கவிருக்கிறது. ஏற்கனவே சந்திரயான் -1ன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருக்கிறது. இருந்தாலும், முதன் முறையாக இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா அனுப்பும் கருவிகள் நிலவில் தரையிறங்குகின்றன. ஆகவே, நிலவில் மெதுவாக, திட்டமிட்டபடி, குறிப்பிட்ட தரையிறங்க முடியுமா, இதுவரை யாரும் அடையாத தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமா என்பதை இந்தியா இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதிக்கும்.

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோவின் தலைவர் சிவன்,

2ஐச் சுமந்து சென்ற புவிசார் செயற்கைக்கோள் ஏவு வாகனம் - ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் - திட்டமிட்ட தூரத்தைவிட கூடுதலாக பறந்திருப்பதாகவும் இதனால் சந்திரயானைக் கட்டுப்படுத்த கூடுதல் கால அவகாசம் கிடைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சந்திரயானின் பயணத்தில் நாளை செய்ய வேண்டிய பணிகள் இன்றே முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

'இது நிலவை நோக்கிய இந்தியாவின் வரலாற்று பயணத்தின் தொடக்கமாக உள்ளது என்று தெரிவித்த அவர், கடந்த வாரம் ராக்கெட் ஏவுவதற்கு முன்பாக தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதும் விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றி, அதனை ஒன்றரை நாட்களுக்குள் சரிசெய்ததாகவும் அடுத்த ஒன்றரை நாட்கள், அந்தப் பணிகள் சரியாக நடைபெற்றிருக்கிறதா என்பதை சோதித்து உறுதிசெய்ததாகவும் தெரிவித்தார்.

"இந்த மிகப்பெரிய திட்டம் இஸ்ரோ குழுவின் கடினமான உழைப்பால் சாத்தியமானது. குறிப்பாக பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் பிற ஊழியர்கள் இதற்காக தொடர்ந்து பணி செய்தனர்."

படத்தின் காப்புரிமை ISRO

"சந்திரயான் - 2 திட்டத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பணிவார்ந்த நன்றிகளை தெரிவிப்பது எனது கடமை."

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகத் துவங்கிய இந்தத் திட்டத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகல் பார்க்காமல், தங்கள் குடும்பத்தை மறந்து பணியாற்றியதாக கூறிய சிவன், இத்தோடு பணிகள் முடிவடைந்துவிடவில்லையென்றும் அடுத்த ஒன்றரை மாதத்திற்கு தொடர்ச்சியாக பணிகள் இருப்பதாகவும் 'விக்ரம் லாண்டர்' நிலவில் தரையிறங்கி, அதிலிருந்து பிரக்யான் வாகனம் நிலவில் உலாவ ஆரம்பிக்கும் 15 நிமிடங்கள்தான் இந்தத் திட்டத்தில் மிக முக்கியமானவை என்றும் சிவன் கூறியிருக்கிறார்.

"இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் இதற்காக காத்திருக்கிறது. அதை தற்போது நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் '' என்று சிவன் தான்ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

விண்வெளி அறிவியல் குறித்து நீண்டகாலம் எழுதிவரும் மூத்த இதழாளர் டி.எஸ்.சுப்ரமணியன் பிபிசி தமிழின் சாய்ராமிடம் சந்திராயன்-2ன் சிறப்பு குறித்து பேசினார்.

"நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பின்பு, சந்திராயன் 2 செயற்கைகோள், அதில் பொருத்தப்பட்டுள்ள 8 உணரிகளை (சென்சார்) கொண்டு நிலவின் பல்வேறு பகுதிகளை படமெடுத்து உடனுக்குடன் அனுப்புவதுடன், தண்ணீர் மற்றும் ஹீலியம் வாயுவின் இருப்பு, வளிமண்டல அமைப்பு, பனிக்கட்டிகள், நிலவு நடுக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சுமார் ஓராண்டு காலம் ஆய்வு மேற்கொள்ளும்," என்று கூறினார் சுப்ரமணியன்.

தமிழ்நாட்டுத் தொடர்பு

"அதே சூழ்நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில், சந்திராயன் 2 விண்கல தொகுப்பிலுள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த விக்ரம் எனும் சுமார் 1,400 கிலோ எடையும் 4 உணரிகளையும் கொண்ட தரையிறங்கும் கலன், நிலவின் மேற்பரப்பிலிருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் உயரம் வரையில் படிப்படியாக தனது வேகத்தை குறைத்து, பிறகு மிகவும் மெதுவாக நிலவில் தரையிறங்கும்.

சந்திராயன் 1 திட்டம், சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவின் பரப்பை நோக்கி அனுப்பப்பட்ட கலன் திட்டமிட்டபடி வேகமாக சென்று நிலவில் மோதி உடனடியாக செயலிழந்தது. ஆனால், சந்திராயன் 2 திட்டத்தில் விக்ரம் கலன் தொழில்நுட்பரீதியாக மிகவும் சவால் நிறைந்த செயல்பாட்டை நாட்டின் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக மேற்கொள்ள உள்ளது.

தரையிறங்கும் கலத்தின் வேகத்தைக் கூட்டி, குறைப்பதுடன் நிலவின் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படும் அதன் இன்ஜின் தமிழகத்தின் மகேந்திரகிரியிலுள்ள இஸ்ரோவின் ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது" என்று விளக்குகிறார் டி.எஸ். சுப்ரமணியன்.

வாழ்நாள் 14 நாட்களே...

பாறைகள், தண்ணீர், பனிக்கட்டிகள், சரிவுகள், மேடுகள் உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து கலன்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத பகுதியை கண்டறிந்தவுடன், நான்கு சக்கரங்களை கொண்ட விக்ரம் என்னும் தரையிறங்கும் கலன் நிலவின் நிலப்பரப்பில் இறங்கும்.

படத்தின் காப்புரிமை ISRO

சுமார் நான்கரை மணிநேரம் கழித்து, அதிலிருந்து 'பிரக்யான்' எனும் நிலப்பரப்புக்கு ஏற்றவாறு தகவமைத்து கொள்ளும் ஆறு சக்கர உலாவி (ரோவர்) வெளியே வந்து பல மீட்டர் தூரம் நகர்ந்து ஆய்வு மேற்கொள்ளும். இந்த வாகனத்தில் இரண்டு உணரிகளும், வேறுபல கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

சந்திராயன் 2 விண்கலத்தொகுப்பின் தரையிறங்கு கலம் ஏன் இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க உள்ளது? அதன் பயன்கள் என்னென்ன? என்று சுப்ரமணியனிடம் கேட்டபோது, "வெறுமனே நிலவில் தரையிறங்குவது இத்திட்டத்தின் குறிக்கோள் அல்ல. இதுவரை யாரும் செல்லாத இடமாக இருக்க வேண்டும், அதிக சூரிய ஒளி கிடைக்க வேண்டும், பூமியுடனான தொடர்பாடல் சுமூகமாக நடைபெற உதவும் பகுதியாக இருக்க வேண்டும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் இருப்பை ஆராய வேண்டும் என்பது போன்ற இஸ்ரோவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். சந்திராயன்-2 கால்பதிக்கவுள்ள நிலவின் தென் துருவம் இடர்ப்பாடு மிகுந்தது.

சந்திராயன் 2 திட்டத்தின் சிறப்பு அம்சமான தரையிறங்கும் கலன் மற்றும் உலாவியின் ஆயுட்காலம் ஒரேயொரு நிலவு நாள்தான். அஞ்சவேண்டாம். அதாவது, நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம்" என்று கூறினார் டி.எஸ். சுப்ரமணியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்