ஜாக் டோர்ஸி: ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் நிறுவனரின் கணக்கு - பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்

ஜாக் டோர்ஸி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜாக் டோர்ஸி

ட்விட்டரின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

ஜாக் டோர்சியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதற்கு தாங்களே காரணம் என சக்லிங் ஸ்க்வாட் எனும் ஒரு குழு தெரிவித்துள்ளது.

ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்ட 15 நிமிடங்களிலேயே, இதுகுறித்து கண்டறியப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்கு இடைப்பட்ட நேரத்தில், மிகவும் வன்முறையை தூண்டக்கூடிய இனரீதியிலான ட்வீட்டுகள் பதியப்பட்டன.

"ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. எங்களது தரப்பில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில பதிவுகள் @jack என்ற ஜாக்கின் கணக்கில் இருந்து நேரடியாக பதிவு செய்யப்பட்டன. பிற பதிவுகள் பிற கணக்குகளில் இருந்து ரீட்வீட் செய்யப்பட்டன.

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தின் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'சக்லிங் ஸ்குவாட்' என்னும் அந்தக் குழு இதற்கு முன்பு பிரபலமான பல ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்துள்ளது.

ஹேக் செய்யப்பட்டது எப்படி?

படத்தின் காப்புரிமை Getty Images

ஒருவர் தனது ட்விட்டர் கணக்கை மூன்றாம் தரப்பு சேவையின் மூலம் பயன்படுத்தும்போது இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

குறுச்செய்தி ஒருங்கிணைப்பு மேம்படுதலுக்காக 2010ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தால் வாங்கப்பட்ட `க்ளவுட்ஹூப்பர்` என்னும் தளத்தின் வழியாக இந்த ட்வீட்டுகள் பதியப்பட்டுள்ளன.

அதாவது, ஒரு ட்விட்டர் பயன்பாட்டாளர் தனது ட்விட்டர் கணக்கில் நேரடியாக சென்று பதிவிடுவதை விடுத்து, திறன்பேசியில் சாதாரண குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற முறையின் மூலம் ட்விட்டரில் பதிவுகளை இடுவதற்கு க்ளவுட்ஹூப்பர் எனும் சேவை உதவுகிறது.

அந்த சேவையை பயன்படுத்துவதற்கு அத்தியாவசியமான ஜாக் டோர்ஸியின் சிம் கார்டை ஹேக்கர்கள் 'சிம் சுவைப்பிங்' எனும் முறையின் மூலம் போலியாக உருவாக்கி அதன் மூலம் இந்த ட்விட்டர் பதிவுகளை இட்டுள்ளனர்.

எனவே, இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஜாக் டோர்ஸி தரப்பிலோ அல்லது ட்விட்டர் நிறுவனத்தின் தரப்பிலோ எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்றும், டோர்ஸி பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு இதில் முக்கிய பங்கு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், ட்விட்டரின் தலைமை நிர்வாகியான ஜாக் டோர்ஜி பிறரைக் காட்டிலும் இம்மாதிரியான தாக்குதல்கல் நடக்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும், பிற டிவிட்டர் கணக்குகளின் பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்புவதாலும் ஜாக் டோர்ஸிக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்