பால்வழி மண்டலத்தில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?

பால்வழி மண்டலத்தின் மையப்பகுதி 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது படத்தின் காப்புரிமை James Josephides / ASTRO 3D

நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தின் மையப்பகுதியில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரளயம் போன்ற ஆற்றல் வெடித்து கிளம்பியதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்பெர்ட் பிழம்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய கருந்துளைக்கு அருகே தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பெரும் பிரளயத்தின் தாக்கம் 2,00,000 ஒளியாண்டுக்கு அப்பாலும் உணரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் நிறுவப்பட்டதை விட, பால்வழி மண்டலத்தின் மையம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்ற இந்த கண்டுபிடிப்பு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை புரிந்துகொள்ளப்பட்டவற்றை மாற்றவேண்டிய நிலைமைக்கு வழிவகுக்கும்.

"பால்வழி மண்டலம் குறித்த நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு தலைகீழாக மாற்றுகிறது" என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் உறுப்பினரான ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மக்தா குக்லீல்மோ.

"நாம் எப்போதும் நமது பால்வழி மண்டலம், பிரகாசமற்ற மையப்பகுதி கொண்ட செயலற்ற நட்சத்திர கூட்டம் என்றே நினைத்து வந்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த பிரளயமானது இரண்டு மிகப் பெரிய "அயனியாக்க கூம்பு வடிவ அலைகளை" உருவாக்கியதாகவும், அவை பால்வழி மண்டலத்தை ஊடறுத்து வெளிப்பட்டு, மாகெல்லானிக் மேகக்கூட்டத்தில் அதன் முத்திரையை பதித்ததாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை MARK GARLICK/SCIENCE PHOTO LIBRARY

இந்த அமைப்பு பால்வழி மண்டலத்திலிருந்து சுமார் 2 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு ஆராய்ச்சியில், இந்த மிகப் பெரிய பிரளயத்துக்கு, பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய கருந்துளையின் அணுக்கதிர் வீச்சுதான் காரணமாக இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

தனுசு ராசிக்கு அருகே அமைந்துள்ள இந்த மிகப் பெரிய கருந்துளையின் நிறை நமது சூரியனை விட நான்கு மில்லியன் மடங்கு அதிகம்.

இதுகுறித்து மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும், இந்த ஆய்வின் முடிவுகளை புறந்தள்ளிவிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

"பிரளயம் வெளிப்படுத்திய ஒளி, கிட்டத்தட்ட ஒரு கலங்கரை விளக்கத்தின் ஒளி போல இருபுறமும் கூம்பு வடிவில் இருந்திருக்கக் கூடும். இருளை கற்பனை செய்து பாருங்கள். பின்னர் யாரோ ஒருவர் கலங்கரை விளக்கத்தை ஒரு குறுகிய காலத்திற்கு செயல்பட வைப்பதை போன்று நினைத்து பாருங்கள்" என்று கூறுகிறார் இந்த ஆய்வின் தலைமை விஞ்ஞானியான சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிளாண்ட்- ஹாவ்தோர்ன்.

ஹப்பிள் தொலைநோக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் விரிவான முடிவுகள் அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் எனும் சஞ்சிகையில் வெளியிடப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்