உடல் நலம் மற்றும் உணவுப் பழக்கம் பற்றி மனிதக் கழிவு மூலம் அறிவதென்ன?

ஆரஞ்சு

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா முழுக்க கழிவுநீரை ஆய்வு செய்ததில், பணவசதி உள்ளவர்கள் மற்றும் ஏழைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்ற வித்தியாசத்தைக் காண முடிந்தது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆய்வகத்தில், வழக்கத்திற்கு மாறான சில சோதனைப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன: ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோரின் மனிதக் கழிவுகள் அங்கு சேமித்து, பத்திரப்படுத்தப் பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உறைய வைக்கப்பட்டு இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வேறுபட்ட சமூக வர்க்கத்தினரின் உணவுப் பழக்கங்களைப் பற்றி அறிவதற்கு உதவும், புதையல்களாக அவை கருதப்படுகின்றன. அவற்றை எல்லாம் சேகரிப்பதன் முக்கிய காரணம்?

ஆய்வாளர் ஜேக் ஓ'ப்ரையனும், பி.எச்டி மாணவர் பில் ச்சோய் என்பவரும், ஆஸ்திரேலியாவில் 2016இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்த மாதிரிகளைச் சேகரித்தனர். இது மாதிரியான முதலாவது ஆய்வாக இது அமைந்துள்ளது.

வெவ்வேறு உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் பழக்கங்களை அறிவதற்காக ஆஸ்திரேலியா முழுக்க, பல தரப்பு மக்களின் கழிவுநீரை ஆய்வு செய்வது இதன் அடிப்படையாக உள்ளது. உயர் சமூக பொருளாதார தட்டு மக்களிடம் நார்ச்சத்து மிகுந்த, சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகளை உண்ணுதல் மற்றும், காஃபி அருந்தும் உணவுப் பழக்கம் அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறைந்த சமூகப் பொருளாதார மக்கள் பகுதியில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன மருந்துகள் உபயோகம் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சுருக்கமாகக் கூறினால், பொருளாதார நிலை உயர்வாக இருந்தால், அவர்களுடைய உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அனைத்து தகவல்களுமே அந்த மக்களின் மனிதக் கழிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

நுகர்வுநிலை சிறு விளக்கம்

ஒரு சமுதாய மக்களின் உணவு மற்றும் ரசாயன மருந்து பயன்பாடு குறித்த தகவல்களை, அவர்களிடம் உருவாகும் கழிவுநீரை ஆய்வு செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என்று, வார்த்தை அளவில் சொல்லப்பட்ட விஷயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது.

வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களை ஏறத்தாழ துல்லியமாக இந்த நடைமுறை மூலம் கண்டறிந்து விடலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது பொது சுகாதாரத் துறைக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மக்களின் கழிவுநீரை ஆய்வு செய்து, அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டறிவது, கழிவுநீர் மூலம் நோய் கண்டறிதல் எனப்படுகிறது. இந்த நடைமுறை சுமார் இருபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளிலும், சட்டவிரோத மருந்து பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளிலும் இது நடைமுறையில் உள்ளது. நிகோடின் போன்ற அனுமதிக்கப்பட்ட ரசாயன மருந்து உபயோகம் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளன.

நோய் தாக்குதல் உருவாதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும் சில ஆராய்ச்சியாளர் குழுக்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றுகின்றன. ஆனால் உணவுப் பழக்கத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்பது இதுவரை கருத்தாக்க நிலையில்தான் உள்ளது.

உணவுப் பழக்கம் மற்றும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட மருந்து பயன்பாட்டைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஏற்கெனவே நடைபெறும் நிலையில், குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் இவற்றின் சராசரி பயன்பாட்டு அளவை மதிப்பிடுவதற்கு கழிவுநீர் பகுப்பாய்வு நடைமுறை உபயோகமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Alamy

ரசாயன மருந்து பயன்பாடு அல்லது அவர்கள் என்ன உணவு உண்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு செய்தபோது, சில நேரங்களில் மக்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இருப்பது தெரிய வந்தது என்கிறார் ச்சோய்.

கழிவுநீர் பகுப்பாய்வு இரண்டு முக்கிய வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் ஓ'ப்ரையன். சமுதாயங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அடையாளம் காண உதவும் என்பது முதலாவது விஷயம். காலப் போக்கில் அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை கண்காணிக்க உதவுவது இரண்டாவது விஷயம்.

காபி பொருள் தொடர்பு

எதை ஆய்வு செய்வது என்று சரியாகக் கண்டறிவது தான் முதலாவது சவால். கழிவுநீர் என்பது சிறுநீர் மற்றும் மலம் என்பதாக மட்டும் கிடையாது. தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பொருட்கள், உணவுக் குப்பைகள், தொழிற்சாலை அல்லது வணிக ரீதியிலான பொருட்களின் கழிவுகளும் இதில் எடுத்துக் கொள்ளப்படும்.

மனித கழிவுகளை உருவாக்கும் குறிப்பிட்ட உணவு அல்லது பெரும்பகுதி உணவு என்பது குறித்த தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய வேண்டும்.

நார்ச்சத்து உணவு பயன்பாட்டைக் கண்டறிய இந்த ஆய்வில் இரண்டு அம்சங்கள் பயன்படுத்தப் படுகின்றன. தாவரங்கள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகள் சாப்பிடுவது என எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நார்ச்சத்துள்ள மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கமாகக் கருதப்படுகிறது.

இவை அனைத்திலும், அதிக சமூக பொருளாதார முன்னேற்றம் உள்ள மக்களிடம், இவற்றின் பயன்பாடு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பணக்காரர்கள் வாழும் பகுதிகளில் நார்ச்சத்து மற்றும் சிட்ரஸ் ஆகியவை அதிகம் காணப்பட்டன.

பட மூலாதாரம், Steve Christo - Corbis

காஃபி பயன்பாடும் பண வசதி மிகுந்தவர்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படுவது கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக, அதிக வாடகை தருபவர்கள் வாழும் பகுதிகளில் இது காணப்பட்டது. மற்ற ஆய்வுகளும் இதே மாதிரி முடிவுகளை தெரிவித்துள்ளன.

இளநிலை பட்டம் அல்லது அதற்கு அதிகமான கல்வித் தகுதி உள்ளவர்கள் வாழும் பகுதிகளில் எஸ்பிரஸ்ஸோ அல்லது காஃபி சார்ந்த மற்ற பானங்களின் பயன்பாடு அதிகமாகக் காணப்பட்டது.

தினமும் ஒன்று அல்லது இரண்டு காஃபி குடிக்கும் பழக்கம், பண வசதி அதிகம் உள்ளவர்களிடம் இருக்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று இதில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் பணக்காரர்கள் மத்தியில் காஃபி சாப்பிடும் கலாசாரம் அதிகமாக உள்ளது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமூகப் பொருளாதார அடிப்படையில் மற்றொரு புறத்தைப் பார்த்தால், டிரமடோல் (வலி நிவாரணி ஓபியாய்ட்), அடெனோலோல் (ரத்த அழுத்தத்துக்கான மருந்து) மற்றும் பிரெகாபாலின் (நரம்பு செயல்பாட்டு மருந்து) போன்ற ரசாயன மருந்துகளின் பயன்பாடு ஏழைகள் வாழும் பகுதிகளில் அதிகம் கண்டறியப்பட்டது.

இருந்தபோதிலும் கடைசி இரண்டு மருந்துகளும் வயதானவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில், குறைந்த வருவாய் உள்ளவர்கள் வாழும் பகுதிகளில் காணப்பட்டது. மற்ற வகையான வலி நிவாரணிகள், மருந்துகள், மன அழுத்தம் நீக்கும் மருந்துகள் அதிகம் ஒதுக்கப்பட்ட நிலைக்கு ஆளான மக்கள் வாழும் பகுதிகளில் கண்டறியப்பட்டது.

நேரடியாக பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் வாழும் பகுதிகளை ஒப்பிடுவது அதிர்ச்சிகரமான தகவலை வெளியிடலாம் என்று ச்சோய் கூறுகிறார். ''வெறுமனே புள்ளிவிவரங்களை மட்டும் பார்த்தால் - ஒரு சமுதாயத்தை, இன்னொரு சமுதாயத்துடன் ஒப்பிட்டால் நார்ச்சத்து விஷயத்தில் பல மடங்கு வித்தியாசத்தை உணரலாம்,'' என்கிறார் அவர்.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் இந்த ஆய்வை மீண்டும் நடத்த ஆராய்ச்சியாளர்கள் விரும்புகின்றனர். ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அதன் மூலம் கண்டறிய அவர்கள் முயற்சிக்கின்றனர். மற்ற ஆராய்ச்சி வழிமுறைகளில் கண்டறியப்படாத விஷயங்கள் அல்லது இன்னும் அதிகமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை அறியலாம் என்று கருதுகின்றனர்.

உதாரணமாக, வெவ்வேறு சமூக, பொருளாதார குழுவினர் மத்தியில் நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்பாடு ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது அரசின் மானியத்துடன் கூடிய சுகாதார சேவை திட்டம் நன்றாக செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது.

எதிர்கால கணக்கெடுப்பில் இதில் மாற்றம் தெரிய வந்தால், சில தரப்பினர் இந்த மருந்துகளை ஏன் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், சில தரப்பினர் இவற்றைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்டறிய ஆய்வு நடத்த வேண்டியிருக்கும்.

'நாடி அறிதல்'

உடல்நலத்தின் சமூகக் கட்டமைப்பு என்ற உலகளாவிய தத்துவத்தை உறுதி செய்வதாக இந்த ஆய்வு முடிவு அமைந்துள்ளது. உடல்நலத்துடன் தொடர்புடைய புகைபிடித்தல் அளவுகள் மற்றும் உடல் பருமன் குறைதல் போன்றவை ஒருவரின் சமூக, பொருளாதார அந்தஸ்துடன் இணைந்து மேம்படுகின்றன என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது.

தங்களுடைய நாட்டில் எல்லோரும் சமத்துவமாக வாழ்கிறார்கள் என்று ஆஸ்திரேலியர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக, கழிவுநீர் ஆய்வறிக்கை தெரிவித்திருப்பது, முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைவிட அதிக சமத்துவமான சமூகமாக ஆஸ்திரேலிய மக்கள் கருதப்பட்டாலும், 2018 அறிக்கையின்படி வருவாய் ஏற்றத்தாழ்வுகளில் ஓ.இ.சி.டி. சராசரியைவிட ஆஸ்திரேலியா உயர் நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

வருவாய் அதிகமுள்ள முதல் 20% மக்கள்தொகையில் உள்ள ஆஸ்திரேலியர் ஒருவர், அடிமட்டத்தில் உள்ள ஐந்தில் ஒரு பகுதி மக்களைவிட, நிறைய உபரி வருமானம் கொண்டவராக இருக்கிறார். பொதுவாகக் கூறினால், அதிக பணம் இருந்தால், அழுகும் தன்மை உள்ள பழங்கள், காய்கறிகளை வாங்கும் சக்தி அதிகம் என்றும், அதிக கல்வி அறிவு என்பது ஊட்டச்சத்தான உணவுகள் பற்றிய புரிதல் அதிகமாக இருக்கும் என்பதும் அர்த்தமாகிறது.

பட மூலாதாரம், Getty Images

வர்க்கம் மற்றும் உணவுப் பழக்கத்தின் தொடர்பில் குறிப்பிட்ட ஒரு விதிவிலக்கை இந்த ஆய்வு கண்டறிந்தது: ஆங்கிலம் பேசாத மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் நார்ச்சத்து மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்தது.

வகுப்பு மற்றும் உணவுப் பழக்கத்தின் தொடர்பில் குறிப்பிட்ட ஒரு விதிவிலக்கை இந்த ஆய்வு கண்டறிந்தது: குறைந்த சமூக பொருளாதார நிலையில் இருந்தாலும் ஆங்கிலம் பேசாத மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்தது. நிரந்தர வசிப்பிடம் இல்லாதவர்களிடமும் அதிக காய்கறி உணவுகள் பாரம்பரிய உணவுப் பழக்கமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.

கழிவுநீர் பகுப்பாய்வை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதாக குயின்ஸ்லாந்து ஆய்வு ஆர்வத்தை தூண்டக் கூடியதாக உள்ளது என்று விக்டோரியா மாகாணத்தில் டீக்கின் பல்கலைக்கழகத்தில் நோய் தொற்று கண்டறிதல் துறையின் தலைவர் பேராசிரியர் கேத்தரின் பென்னட் கூறியுள்ளார்.

''அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டுள்ள நிலையில், நோய் பரவுதல் தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வாக இது உள்ளது என்று நாங்கள் கூறுகிறோம். தனிப்பட்டவரின் தகவல்களை நாங்கள் பயன்படுத்தவில்லை, சேகரிக்கப்பட்ட பலருடைய தகவல்களைத்தான் பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை அந்த வார்த்தை குறிப்பிடுகிறது,'' என்கிறார் கேத்தரின்.

ஆஸ்திரேலியாவில் சிகரெட்களில் சாதாரண பேக்கேஜிங் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, கழிவுநீரில் நிகோடின் அளவு குறைந்திருப்பதை இதுபோன்ற ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது என்று அவர் தெரிவித்தார். ''புகைபிடிப்பவர்கள் அதன் அளவை குறைத்துக் கொண்டார்களா அல்லது அந்த மக்கள் மத்தியில் புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைவா என்பது தான் நமக்குத் தெரியாத விஷயமாக இருக்கும். இந்த சூழலியல் ஆய்வுகளில் நாம் எப்போதும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் பரவலாகப் பார்க்கும் போது, இதற்கான காரண காரியங்களை உங்களால் விவாதிக்க முடியாது.''

இருந்தபோதிலும், சமீபத்திய உணவுப் பழக்கம் மற்றும் ரசாயன மருந்து ஆய்வைப் போன்ற, நிகோடின் ஆய்வுகளும் மற்ற ஆராய்ச்சிகளுடன் ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. கழிவுநீர் ஆய்வு பரவலாக துல்லியமாக உள்ளது என்று காட்டுவதாக அவை உள்ளன. மக்களின் உடல்நலம் மற்றும் உணவுப் பழக்கங்களை கண்காணிக்க நேரடி வழிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் இது போன்ற ஆய்வுகள் துல்லியமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :