மனைவிகளை ’ரகசிய கண்காணிப்பு’ மென்பொருட்கள் மூலம் வேவு பார்க்கும் கணவர்கள்

  • ஜோ டிட்டி
  • சைபர் பாதுகாப்பு செய்தியாளர்
கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

"என் நண்பர்கள் குறித்த அந்தரங்க தகவல்களை என் கணவர் அறிந்திருந்தார்", அப்போதுதான் இவை அனைத்தும் தொடங்கியது என்கிறார் ஏமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

"என் தோழி சாராவின் குழந்தை குறித்த தகவல்கள் போல, நான் என் நண்பர்களோடு நடத்திய உரையாடல்களிலிருந்து சில வசனங்களை சொல்வார். அவை குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. உங்களுக்கு இதுகுறித்து எப்படி தெரியும்? என்று கேட்டால், நானே அவரிடம் முன்பு கூறியுள்ளேன் என்றும், இப்போது, மறந்துபோய் கேட்கிறேன் என்றும் கூறுவார்" என்கிறார் ஏமி.

ஒரு நாள் முழுவதும், தான் எங்கு இருந்தேன் என்பது தனது கணவருக்கு எப்படி தெரியும் என்பதை தெரியாமல் பல நேரம் வியந்துள்ளதாக கூறுகிறார் ஏமி.

"சில நேரங்களில், நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த தேநீர் விடுதியை தற்செயலாக தாண்டி சென்றதாகவும், அப்போது எங்களை பார்த்ததாகவும் கூறுவார். எல்லாவற்றைப் பற்றியும் நான் கேள்வி எழுப்ப ஆரம்பித்தேன். யாரையும் நம்பவில்லை, என் நண்பர்களைக்கூட நான் நம்பவில்லை", என்கிறார் ஏமி.

பல மாதங்களாக இதுபோல நடந்த சம்பவங்களில், ஒரு மோசமான திருமண வாழ்க்கையாக மாறியது. குடும்பத்துடன் ஹாலோவீன் பண்டிகைக்கான குடும்ப சுற்றுலா சென்று வந்தபோது, இதற்கான ஒரு மோசமான முடிவிற்கு ஏமியின் திருமணம் வந்து நின்றது.

"ஹாலோவீனிற்காக நாங்கள் பூசணிக்காய் வாங்க பல தோட்டங்களுக்கு சென்றோம். எங்களின் வார இறுதிநாள் மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. அதாவது, என் கணவர் என்னை எந்த விஷயத்திலும் குறை கூறவில்லை. எங்களின் ஆறு வயது மகன் தரையில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடி வந்தான்."

பட மூலாதாரம், Getty Images

"என் கணவர் தான் எடுத்த புகைப்படத்தை என்னிடம் காட்டுவதற்காக அவரின் கைபேசியை என்னிடம் காட்டினார். அதை பார்க்க நான் குணிந்தபோது, அவரின் கைபேசியில் ஒரு `அலர்ட்` வந்தது. அதில்,`ஏமியின் மேக் குறித்த இன்றைய அறிக்கைத் தயாராக உள்ளது` என்று குறிப்பிட்டு இருந்தது" என்று தனது அதிர்ச்சியான நேரத்தை விவரிக்க தொடங்குகிறார் ஏமி.

"எனக்கு இடி விழுந்ததுபோல இருந்தது. ஒரு நிமிடம் சுவாசிப்பதையே நிறுத்தி விட்டேன். கழிவறைக்கு செல்ல வேண்டும் எனக்கூறி நகர்ந்து சென்றுவிட்டேன். என் மகனுக்காக எதுவுமே நடக்காதது போல நான் இருந்தாகவேண்டிய சூழல் இருந்தது".

"என்னால் எப்போது முடிந்ததோ, உடனடியாக ஒரு நூலகத்திற்கு சென்றேன். அங்கு இருந்த கணினியில் அவர் பயன்படுத்திய கண்காணிப்பு மென்பொருள் என்ன என்பதை பார்த்தேன். அதன் பிறகுதான், பல மாதங்களாக என்னைச்சுற்றி நடந்து வந்தவை அனைத்தும் புரிய ஆரம்பித்தது".

ஸ்டால்க்வேர்(Stalkerware) என்று அழைக்கப்படும், கண்காணிப்பு செயலி ஆன்லைனில் நேரடியாகவே விற்கப்படுகின்றன.

இதன் மூலமாக, ஒருவர் என்ன செய்கிறார் என்பதை அவரின் கைபேசியில் உள்ள கேமரா மூலம் கண்காணிக்க முடியும். அவர்கள் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ் மூலம் பார்க்க முடியும். அவர்களுக்கு வரும் செய்திகள் அனைத்தையும் படிக்க முடியும். அவர்களின் போனில் என்ன செய்கிறார்கள் என்பதை முழுமையாக பதிவு செய்ய முடியும்.

கேஸ்பர்ஸ்கை என்ற சைபர்-பாதுகாப்பு நிறுவனத்தின்படி, கடந்த ஆண்டு மட்டும், இத்தகைய மென்பொருட்களை தங்களின் கைபேசியில் கண்டறிந்த மக்களின் எண்ணிக்கை 35% அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இதுவரை, இத்தகைய ஸ்டால்வேர் மென்பொருட்களை 37,523 பேரின் போனில் இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த எண்ணிக்கை என்பது, மிகக்குறைவு என்றும், உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்கிறார் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியாளரான டேவிட் எம்.

"பலர் தங்களின் கணினிகளை பாதுகாக்கிறார்கள். ஆனால், தங்களின் கைபேசியை பாதுகாப்பதில்லை." என்கிறார்.

காஸ்பர்ஸ்கையின் கண்டுபிடிப்பின்படி, ரஷ்யாவில்தான் இத்தகைய மென்பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்தியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

தங்களை ஒருவர் கண்காணிக்கிறார் என்று ஒருவர் உணர்ந்தால், அதை சரிசெய்து, தடை செய்ய சில வழிகள் உள்ளன என்று மற்றொரு பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

எஸ்ட் என்ற நிறுவனத்தை சேர்ந்த ஜேக் மூர், "மக்கள் தங்களின் ஃபோன்களில் உள்ள செயலிகள் என்னென்ன என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், வைரஸ் உள்ளதா என்பதை பார்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். உங்களின் போனில் உள்ள ஏதாவது ஒரு மென்பொருளை என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அது என்ன என்று ஆராய்ந்து, அழிப்பது நல்லது."

நீங்கள் ஒரு செயலியை பயன்படுத்தவில்லை என்றால் அதை அழித்துவிடுங்கள் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

தனது கணினி இவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன், தொழில்நுட்பங்களின் மீது அதிதீவிர நம்பிக்கையற்ற தன்மையை வளர்த்துக்கொண்டுள்ளார் ஏமி. இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வருவதாக அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

இத்தகைய கண்காணிப்புகளில் சிக்கிய மற்றொருவர் ஜெசிக்கா. ஜெசிக்காவின் கைபேசியில் உள்ள மைக்ரோபோனின் மூலமாக கண்காணித்த அவரின் முன்னாள் கணவர். ஜெசிக்காவும், அவரின் நண்பர்களும் பேசிக்கொள்வதை அப்படியே அவரிடம் சொல்லிக்காட்டுயிருக்கிறார் அவரின் முன்னாள் கணவர்.

இத்தகைய ஒரு உறவிலிருந்து வெளியே வந்து ஆண்டுகள் கடந்தாலும், இன்னும்கூட நண்பர்களை சந்திக்கும்போது, கைபேசியை காரிலேயே வைத்து செல்கிறார் ஜெசிக்கா.

இவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு, இதன் தாக்கம் பல காலத்திற்கு இருப்பதை பார்க்கமுடிவதாக கூறுகிறார், ஜெம்மா டாயிண்டன்.

குடும்ப வன்முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து வைக்கும் சேவை மையத்தை சேர்ந்த இவர், "இது, ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைக்கும். ஒரு போன் அல்லது லேப் டாப்பை ஆயுதம்போல நம்மை பார்க்க வைக்கும், காரணம் அவ்வாறுதான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மனதை பொருத்தவரையில், தொழில்நுட்பம் என்பது அவர்களை சுற்றி போடப்பட்ட ஒரு வேலி. இவர்களில் பலர், இணையதளத்திலிருந்து விலகி செல்கின்றனர். இது உங்களின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும். இத்தகைய மென்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது." என்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் ஏமி, தற்போது கணவரை விவாகரத்து செய்து விட்டதோடு, அவரிடமிருந்து பல மைல் தூரத்தில் வாழ்கிறார்.

தன்னை முன்னாள் கணவர் நேரில் வந்து பார்க்கக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவையும் பெற்றுள்ளார் ஏமி. அவர்களின் குழந்தை குறித்த எந்த ஒரு விஷயத்தையும், ஏமியும், அவரின் முன்னாள் கணவரும் கடிதப்பறிமாற்றம் மூலமாக மட்டுமே பேசிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

சோதனை முயற்சி

மூன்று மாதங்கள் ஒருவரை கண்காணிக்க 140 பவுண்ட் செலவு செய்யப்படும் ஒரு மென்பொருளை நான் வாங்கி முயற்சித்து பார்த்தேன். ஆன்லைனில் அதை வாங்கி, அலுவலகத்தில் பயன்படுத்தும் எனது போனில் இன்ஸ்டால் செய்தேன். எனக்கு எப்போதெல்லாம் பிரச்சனை ஏற்பட்டாலும், அதை அந்நிறுவனம் சரிசெய்து கொடுத்தது.

வேவுபார்க்கும் இத்தகைய மென்பொருட்களை, `பணியாளர்களை கண்காணிக்கும் கருவி` அல்லது `பெற்றோர்களுக்கான கருவி` என்ற பெயரில் சேவை அளிக்கிறது.

பல நாடுகளில் உங்களின் கணவர்/மனைவியின் மீது இத்தகைய மென்பொருட்களை பயன்படுத்துவது சட்ட விரோதமான ஒன்றாகும். ஆனாலும், கணவர் அல்லது மனைவியை ஏமாற்றும் நபர்களை கண்காணிக்கும் கருவி இது என்ற பெயரில் அதை விற்பனை செய்யும் அதே இணையதளம், செய்தி கட்டுரைகளில் குறிப்பிடுகின்றன.

"இதை என் மனைவியின் போனில் இஸ்டால் செய்யப்போகிறேன். இது ரகசியமாக இருக்குமா?" என்று அந்த நிறுவனத்துடனான வீடியோ சாட்டில் நான் நேரடியாகவே கேட்டுள்ளேன். அதற்கு, இந்த மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அது மறைவான `ஸ்டெல்த்` வகையிலேயே செயல்படும் என்றும், இதில் என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்கிறோம் என்றும் எனக்கு பதில் அளிக்கப்பட்டது.

அதே கைபேசியில், சைபர்-பாதுகாப்பு தொடர்பான சில மென்பொருட்களை பதிவிறக்கினேன். அவை அனைத்தும், `பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன்கொண்ட மென்பொருள் உள்ளது` என்ற அலர்ட்டை எனக்கு அளித்தன.

தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது குறித்து சட்டரீதியாக இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது என்கிறார் ஏமி.

"இதில், `உங்களின் மனைவியை நீங்கள் கண்காணிப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லை` என்று கூறி வரும் அலர்ட்டை தொடர்ந்து, ஒரு கண் சிமிட்டும் ஸ்மைலி உள்ளது. இத்தகைய மென்பொருட்களை தயாரிப்பவர்களுக்கு, அவர்களின் வாடிக்கையாளர்கள் இதை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று தெரியும். இவர்களின் மென்பொருட்கள் மிகவும் தீவிரமான பாதிப்புகளை உருவாக்குகின்றன." என்கிறார் அவர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :