மழை, புயல், வெள்ளம், வெப்பம்: வேற்று கிரகங்களின் வானிலை எப்படி இருக்கும் தெரியுமா?

கிரகம் படத்தின் காப்புரிமை Stocktrek Images/Getty

கந்தக அமில மழையிலிருந்து சூப்பர்சோனிக் மீத்தேன் காற்று வரையில், மற்ற கிரகங்களின் சூழ்நிலைகளைச் சமாளிக்க உங்களுக்குத் தண்ணீர் புகாத உடைகள் முதல் பல விஷயங்கள் தேவைப்படும்.

வானிலை பற்றி நாம் அடிக்கடி குறைபட்டுக் கொள்கிறோம். குறிப்பாக இங்கே பூமியில் தீவிர வானிலை மாற்றங்கள் மிகவும் சாதாரணமாகிவிட்டன. ஆனால் மணிக்கு 5,400 மைல்கள் வேகத்தில் சூறாவளி வீசும் அல்லது ஈயத்தை உருக்கும் அளவுக்கான வெப்பம் உள்ள பகுதியில் நமது விடுமுறையைக் கழிப்பதாக இருந்தால் எப்படி இருக்கும்?

நல்லதோ கெட்டதோ, நமது கிரகத்தில் மட்டும் வானிலை நிரந்தரமானதாக இல்லை - இப்போது இப்படி உள்ளது, விண்வெளியில் மற்ற பகுதிகளில் இதைவிட அதிக மோசமானதாகவும் உள்ளது.

நமக்கு அருகில் உள்ள வீனஸ் கிரகத்திலிருந்து நாம் தொடங்குவோம். சூரிய மண்டலத்தில், வாழ்வதற்கு ஏற்பில்லாத மிக மோசமான கிரகம் அது. அடிப்படையில், நரகம் என்று அதைக் குறிப்பிடுகிறார்கள். காற்று மண்டலத்தின் அடர்த்தி அதிகம். பெரும்பான்மையாகக் கரியமில வாயு நிறைந்தது. காற்று மண்டலத்தின் அழுத்தம், பூமியில் இருப்பதைவிட 90 மடங்கு அதிகம். காற்று மண்டலத்தின் அடர்த்தி அதிகம் என்பதால் சூரியனின் வெப்பத்தைப் பிடித்து வைத்துக் கொள்கிறது. எனவே 460 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகமான வெப்பம் காணப்படுகிறது. எனவே அங்கே நீங்கள் காலடி வைத்தால் நொறுங்கிப் போவீர்கள், கொதிக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். அதுதான் மோசம் என்று நினைக்க வேண்டாம். வீனஸ் கிரகத்தில் பெய்யும் மழை, அதிவேகமாக அரித்துவிடக் கூடிய கந்தக அமிலம் கொண்டதாக இருக்கும். வேறு கிரகங்களிலிருந்து செல்பவர்களின் தோலை எளிதில் எரித்துவிடக் கூடிய அளவில் இருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

கிரகத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால், இந்த மழை திரவம் தரையைத் தொடுவதற்கு முன்னதாகவே ஆவியாகிவிடுகிறது. அப்படி இருந்தாலும், வீனஸ் கிரகத்தில் `பனி' இருக்கிறது என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது. கையில் தூக்கி வீசும் பனியைப் போன்றதாக அது இல்லை: அதன் காற்று மண்டலத்திலிருந்து ஆவியாகும் உலோகங்களின் மிச்சங்களால் உருவானதாக அவை உள்ளன.

சூரிய மண்டலத்தின் அடுத்த முனையில் வாயுக்கள் நிறைந்த யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் உள்ளன. பூமியிலிருந்து அதிக தொலைவில் இருக்கும் நெப்டியூனில், உறைந்த நிலையில் மீத்தேன் மேகங்கள் உள்ளன. சூரிய மண்டலத்தில் மிகவும் ஆபத்தான வேகத்தில் சூறாவளி வீசும் கிரகமாக உள்ளது. கிரகத்தின் மேற்பரப்பு சமவெளியாக இருப்பதால், , சூறாவளியைத் தடுக்கும் அமைப்புகள் எதுவும் இல்லை. அதனால் மணிக்கு 1,500 மைல்கள் வரையிலான வேகத்தில் சூறாவளி வீசுகிறது.

தாங்க முடியாத அளவுக்குச் சப்தம் இருப்பதுடன், அங்குச் சென்றால் வைரம் போன்ற கட்டிகளின் மழையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் அழுத்தத்துக்கு உள்ளாகி இப்படிக் கட்டிகளாக வரும். ஆனால் கற்கள் விழுவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியிருக்காது. நீங்களே உடனடியாக உறைந்து போயிருப்பீர்கள்.

வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் டாம் லாவ்டென் என்பவர், பால்வெளி வானிலை பற்றி ஆர்வம் கொண்டிருக்கிறார். மற்ற கிரகங்களில் வானிலை எப்படி இருக்கும் எனக் கண்டறிய முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

``வீனஸ் கிரகத்தின் காற்று மண்டலத்தின் மேல் பகுதி, சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடியாக உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது'' என்று அவர் கூறுகிறார். அதன் கந்தக அமில மேகங்களுக்கு மேலே, ஒரு பகுதியில் ஏறத்தாழ பூமியின் காற்று மண்டல அழுத்தத்திற்கு இணையான அழுத்தம் காணப்படுகிறது என்கிறார் அவர்.

``அந்த காற்று மண்டலத்தில் நீங்கள் சுவாசிக்க முடியாது. ஆனால், சூடான காற்று நிரப்பிய பெரிய பலூன் அல்லது பூமியின் காற்று மண்டலம் போன்ற சூழ்நிலை கொண்ட ஒரு அமைப்பில் இருப்பது போல நினைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஆக்சிஜன் சுவாசக் கருவி இருந்தால், அநேகமாக டி-சர்ட் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு அங்கே இருக்க முடியும்.''

படத்தின் காப்புரிமை Stocktrek Images/Getty

சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் வேற்று கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சி தான் இவருடைய தனித்தன்மையாக உள்ளது. குறிப்பாக HD 189733b எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தின் மீது இவருக்கு அதிக கவனம் உள்ளது. 63 ஒளி ஆண்டுக் கால பயண தொலைவில் உள்ள அடர் நீல நிறமான அந்தக் கிரகத்தின் வெப்ப நிலை பற்றி தகவல்கள் தெரிந்தவையாக உள்ளன. அது அழகாகத் தோன்றலாம். ஆனால் அங்குள்ள வானிலை மிகவும் பயங்கரமானது. மணிக்கு 5,000 மைல்கள் வேகத்தில் வீசும் காற்று (பூமியில் மணிக்கு 253 மைல்கள் வேகத்தில் வீசியது தான் அதிகபட்ச வேகமானதாகப் பதிவாகியுள்ளது), நம்மைவிட 20 மடங்கு சூரியனுக்கு அருகில் உள்ளதால், காற்று மண்டலத்தின் வெப்ப நிலை 1,600 டிகிரி சென்டிகிரேட் அளவில் இருக்கிறது. அது உருகிய எரிமலைக் குழம்பின் வெப்ப நிலை அளவுக்கு உள்ளது.

``பூமியில் உள்ள பாறைகளை அங்கே வைத்தால் அவை திரவமாக அல்லது வாயுவாக மாறிவிடும்'' என்கிறார் லாவ்டென். உருகிய கண்ணாடியாக மழை பொழிகிறது, மேலிருந்து கீழாக அல்லாமல், பக்கவாட்டில் வருகிறது.

பூமியின் அளவு மற்றும் நிறைக்கு இணையான அளவில் சிறிய கிரகங்கள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். `ரெட் ட்வார்ப்' அல்லது எம் ட்வார்ப், நட்சத்திரங்களைச் சுற்றி வருபவையாக அவை உள்ளன. அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது அடுத்த கேள்வியாக உள்ளது. இதமான வெப்ப நிலை, திரவமான நீர் கொண்ட மேற்பரப்பு இருந்து, அந்தக் கிரகம் - பூமியுடன் நிலவு பிணைந்திருப்பதைப் போல - பிணைப்பு கொண்டதாக இருக்க வேண்டும்.

அதாவது அதன் ஒரு பகுதியில் நிரந்தரமாகப் பகல் வெளிச்சம் இருக்கும். மறுபுறம் இரவாகவே இருக்கும்.

``கம்ப்யூட்டர் மாடல்களை உருவாக்கினால், சூறாவளி நிகழ்வுகள் பகல் பொழுதுக்கான பக்கத்திலிருந்து இரவுப் பொழுதுக்கான பக்கத்தை நோக்கி நகர்கின்றன. பகல் பொழுதுக்கான பக்கத்தில் உள்ள திரவ நீர் ஆவியாகி மேகமாக மாறி, காற்றின் திசையில் இரவுப் பொழுதுக்கான பக்கத்துக்குச் சென்று உறைந்து பனியாக மாறுகிறது. ஒருபுறம் பாலைவனம் போலவும், மறுபுறம் துருவப் பகுதியைப் போலவும் இருக்கும்'' என்று அவர் கூறுகிறார்.

உண்மையில் நமது கிரகத்தைப் போல எதுவும் இருக்காது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: