Coronavirus news: திறன்பேசி மூலம் கொரோனாவை கண்டறிவது சாத்தியமா?

'கொரோனா வைரஸை கண்டறிய திறன்பேசி போதும்' - எப்படி சாத்தியம்? படத்தின் காப்புரிமை Getty Images

உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது உங்களுக்கும் பரவிவிடும் என்று அச்சமா? இனி கவலை வேண்டாம், உங்களது சந்தேகத்தை, அச்சத்தை போக்குவதற்கு உங்களது திறன்பேசியே போதும் என்கிறது சீன அரசாங்கம்.

ஆம், உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து உங்களை எச்சரிக்கும் திறன்பேசி செயலி ஒன்றை சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

வெறும் திறன்பேசியை கொண்டு கொரோனா வைரஸை கண்டுபிடிப்பது சாத்தியமா? இந்த செயலி எப்படி செயல்படுகிறது? இதை யாரெல்லாம் பயன்படுத்த முடியும்? இதுபோன்று தொழில்நுட்பத்தை மையாக கொண்டு கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு சீனா எடுத்துள்ள மற்ற நடவடிக்கைகள் என்னென்ன உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

எப்படி செயல்படுகிறது இந்த கொரோனா கண்டுபிடிப்பு செயலி?

படத்தின் காப்புரிமை Getty Images

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ நெருங்கிவிட்டது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60,000 தாண்டும் என்று கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பத்துக்கும் குறைவான நாட்களில் புதிய மருத்துவமனையை கட்டுதல், கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது.

கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், தன்னருகே எவருக்காவது கொரோனா பாதிப்பு உள்ளதா என்னும் பெரும்பாலானோரின் அச்சத்தை போக்குவதற்கும், 'குளோஸ் காண்டாக்ட் டிடெக்டர்' எனும் செயலி சீன அரசின் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

"பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், பயன்பாட்டாளர்கள் தங்களது அலைபேசி எண், பெயர் மற்றும் அரசு வழங்கிய அடையாள அட்டை ஒன்றின் எண் ஆகியவற்றை பதிவிட்ட பிறகு அதை பயன்படுத்த தொடங்கலாம்" என்று சீன அரசு ஊடகமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த செயலியை கொண்டு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை ஒருவர் அடையாளம் காண முடியும் என்று கூறுகிறது சீனாவின் தேசிய சுகாதார ஆணையம். இந்த இடத்தில், நெருங்கிய தொடர்பு என்பது மிகவும் குறைந்த தொலைவில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை குறிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

'குளோஸ் காண்டாக்ட் டிடெக்டர்' எனும் இந்த செயலியை பயன்படுத்துபவரின் அருகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது சந்தேகத்துக்கு உரிய ஒருவரோ/ பலரோ இருக்கும் பட்சத்தில், செயலியை பயன்படுத்துபவர் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் அல்லது சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் எச்சரிக்கை செய்தி திரையில் தோன்றும்.

இந்த செயலியை பயன்படுத்தி தேடலை மேற்கொண்டால், தேடுபவர் நீலநிறத்திலும், நோயாளிகளின் இருப்பிடங்கள் சிவப்பு நிறத்திலும் காட்டப்படுவதாக தெஹ்ரீம் அசீம் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த செயலி எப்படி செயல்படுகிறது?

சீனாவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களின் குழுமம், சுகாதார ஆணையத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த செயலிக்கு அந்நாட்டின் சுகாதாரம், தரை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகங்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், மேலும் துல்லியமான, நம்பகமான மற்றும் அதிகாரபூர்வ தரவை உறுதிப்படுத்த அவை உதவி செய்துள்ளதாக சின்ஹுவா முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த செயலி எதன் அடிப்படையில் செயல்படுகிறது? என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு சீன அரசு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

சீன அரசாங்கத்தின் இந்த தெளிவற்ற செயல்பாடு இந்த செயலி குறித்த அச்சங்களை எழுப்புகிறது. உலகின் மிகப் பெரிய மின்னணு கண்காணிப்பு அமைப்பை கொண்ட நாடாக அறியப்படும் சீனா, மக்களின் ஒப்புதலே இல்லாமல் அவர்களது தனிப்பட்ட தகவலை பயன்படுத்துகிறதா என்ற கேள்வி மீண்டுமொருமுறை எழுந்துள்ளது.

மிகப் பெரும் கண்காணிப்பு திட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

சீன அரசாங்கம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிதிறன் மிக்க கண்காணிப்பு கேமராக்களை வைத்து மக்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. உதாரணமாக, குற்றச்செயல் புரிந்த ஒரு நபர், சம்பவ இடத்திலிருந்து நாட்டின் எந்த இடத்திற்கு சென்றாலும் அவரது ஒவ்வொரு அசைவையும் உடனுக்குடன் கண்டறிவதுடன், குறிப்பிட்ட நபரின் முழு பின்னணியையும் விரல் நுனியில் பெறுவதற்கு வகை செய்யும் அமைப்பை சீனா திறம்பட செய்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் முதலிய தொழில்நுட்பங்களின் வியப்பளிக்கும் பயன்பாடுகளை கொண்டு இவற்றை சீனா சாத்தியப்படுத்தி வருகிறது.

உதாரணமாக, சீனாவின் இந்த கண்காணிப்பு அமைப்பின் செயல்பாடு குறித்து சோதிப்பதற்காக பிபிசி செய்தியாளர் ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு அதிகாரிகளின் ஒப்புதலுடன் முயற்சி செய்தார். அச்சமயத்தில் சீனாவில் 17 கோடி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், மேலும் 40 கோடி கேமராக்களை பொருத்தும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. அப்போது, சம்பவ இடத்திலிருந்து நகர தொடங்கிய பிபிசி செய்தியாளரை உடனடியாக பின்தொடர்ந்த அதிநவீன கேமராக்கள், அதுகுறித்த தகவல்களை காவல்துறையினருக்கு பகிர, ஏழே நிமிடங்களில் அவரது சோதனை முடிவுக்கு வந்தது.

இதுபோன்று எண்ணற்ற விடயங்களை கண்காணிப்பு கேமராக்களை கொண்டே நிறைவேற்றி வரும் சீன அரசாங்கம், இப்போது இதே அமைப்பை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் செயலிக்கும் பயன்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேமராக்களால் நோயை கண்டறிய முடியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

சீனாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்று கேட்டு சீன அரசாங்கம் கடந்த வாரம் அந்நாட்டிலுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியதாக கூறுகிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

அதன்படி, தற்போதுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் திட்டங்கள் குறித்து அந்நிறுவனங்கள் அறிக்கை சமர்பித்துள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக, சீன அரசின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்களின் மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக மெக்வி எனும் நிறுவனம் அறிவித்தது. அதாவது, அதிநவீன இன்ஃராரெட் கேமராவை கொண்டு ஒருவரது உடல் வெப்பநிலையை கண்டறிந்து அதை அந்த நபரின் தனிப்பட்ட தரவுகளின் ஒப்பிடும் வகையிலான தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தியுள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் இந்த திட்டம் ஏற்கனவே சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது.

இந்த வகையில் பார்த்தோமானால், சீனாவில் ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள கோடிக்கணக்கான கண்காணிப்பு கேமராக்களை அடிப்படையாக கொண்டே கொரோனா பாதிப்புள்ளவர்களை கண்டறியும் இந்த செயலியை சீனா அறிமுகப்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், சீனா ரயில்வே அறிவியல் அகாடமியை சேர்ந்த அதிகாரி ஒருவர், "தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரயில்களில் பயணிப்பவர்களில் யாருக்கு கொரோனா பாதிப்பு அல்லது அறிகுறி உள்ளதை கண்டறியும் முறை அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களால் தொழில்நுட்பத்தை கொண்டு சந்தேகத்திற்குரிய பயணி யார்? அவருக்கு அமர்ந்தவர்கள் யார், யார்? அவர் பயணித்த ரயில் மற்றும் பெட்டியின் எண் உள்ளிட்டவற்றை திரட்டி துறைசார் அதிகாரிகளுக்கு அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்று சீன அரசு ஊடகத்திடம் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கும் ட்ரோன்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

"ஆமாம் ஆண்டி, நான் தான் ட்ரோன் பேசுகிறேன்! நாங்கள் மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம். ஆனாலும், நீங்கள் வெளியில் உலாவி கொண்டிருக்கிறீர்கள்" - இது ஏதோ திரைப்படத்தில் வரும் அனிமேஷன் காட்சியல்ல, சீனாவில் தடையை மீறி வெளியில் சுற்றும்/ முகமூடி அணியாத மக்களை எச்சரிக்கும் ட்ரோன்களின் பேச்சுதான்.

சீனாவின் பல்வேறு பகுதிகளில் முகமூடி அணியாமலோ, தடையை மீறியோ செயல்படுபவர்களை எச்சரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ட்ரோன்கள் பரவலாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மூலம் அங்கு பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பல்வேறு நிலைகளில் ரோபோக்களின் பயன்பாட்டை மருத்துவமனை நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, நோயாளிகளுக்கு உணவு, உடைகள், மருந்து மாத்திரைகளை வழங்குவது, பரிசோதனைகளுக்கு தேவையான மாதிரிகளை பெற்று வருவது உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை ரோபோக்கள் மேற்கொண்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :