தென்கொரியாவில் உயிரிழந்த மகளை மீண்டும் சந்தித்த தாய் - எவ்வாறு சாத்தியமானது?

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் மகளை சந்தித்த தாய்

பட மூலாதாரம், MBC

துயரம் என்பது நமது வாழ்வின் ஓர் அங்கம்தான். ஆனால் அதற்காக, ஏற்படும் துயரம் அனைத்தையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடிவதில்லை. அதுவும் ஒரு குழந்தையை இழந்தால் அந்த துயரை என்னவென்று சொல்வது?

ஆனால் தென்கொரியாவில் தனது ஏழு வயது மகளை இழந்த தாய் ஒருவர் மெய்நிகர் உலகம் மூலம் தனது துயரத்தை ஆற்ற முயற்சித்திருக்கிறார்.

குணப்படுத்த முடியாத ரத்தம் தொடர்பான குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது மூன்றாவது மகளான நா நியோனை இழந்துவிட்டார் ஜாங் ஜி சங் என்ற தாய்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு ஒன்று எட்டு மாதம் முயற்சி செய்து நா நியோனின் முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்கியது.

குழந்தை நட்சத்திரம் ஒருவரின் செய்கையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி அதன் மூலம் நா நியோனின் அசைவை உருவாக்கினர். அவளின் குரலையும் அதனுடன் உருவாக்கினர்.

தாயும் மகளும் நிஜ வாழ்வில் விளையாடச் சென்று வந்த பூங்கா ஒன்றையும் அவர்கள் வடிவமைத்தனர்.

"மீட்டிங் யூ" (உன்னை சந்திக்கிறேன்) என்ற அந்த ஆவணப்படம், எம்பிசி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது அதை மில்லியன் கணக்கான தென்கொரியர்கள் பார்த்துள்ளனர்.

அதில் மகளும், தாயும் "சேரும்" காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமானது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட அந்த மகள் தனது தாயிடம் சென்று, அம்மா நீ எங்கே இருந்தாய், என்னைப் பற்றி நினைத்தாயா, என்று கேட்பாள்.

அந்த செயற்கை உருவத்தை அனைத்துக்கொள்ள அந்த தாய் கண்ணீருடன் அடியெடுத்து வைப்பதை அந்த தயாரிப்பு குழுவினர் பார்த்துக் கொண்டிருப்பர்.

அந்த மகளின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சோகத்தில் அமர்ந்திருப்பர்.

பிரிந்தோரை சந்தித்தல்

பட மூலாதாரம், MBC

இந்த ஆவணப்படம் இறந்துபோன அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திக்க முடியும் என்பதற்கு பின்னால் உள்ள மனரீதியான தாக்கம் மற்றும் அதற்குபின் உள்ள வாழ்க்கை நியதி குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது.

சிலர் இந்த முயற்சி ஆறுதல் தரும் ஒன்று என்று தெரிவித்தாலும், சிலர், மக்கள் தங்கள் துயரங்களிலிருந்து கடந்து செல்வதை இது தடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தையை இழந்த தாயின் சோகத்தை எம்பிசி தொலைக்காட்சி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

யூ டியூபில் பதியப்பட்ட இந்த காணொளியை 13 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 19,000 பேர் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இந்த சோதனை முயற்சி அந்த தாயின் சோகத்தை மேலும் அதிகரிக்கும் என்றும், இது அவரின் வாழ்க்கையின் நம்பிக்கையை குலைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க அந்த மகளின் தாய் ஜாங் ஜி சங், இது தனக்கு பெரிதும் உதவியது என்றே கூறுகிறார். தனது மகள் இறந்தபின் அவர் அவளின் பெயரை பச்சை குத்திக் கொண்டார். அவளின் புகைப்படத்தை வீடு முழுவதும் மாட்டினார். அவளின் சாம்பலை தனது கழுத்து சங்கலியில் அணிந்து கொண்டார்.

அடியெடுத்து வைப்பதை, தனது கனவில் நா நியோன் சோகமாக காணப்படுவாள், ஆனால் இந்த மெய்நிகர் உலகில் அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள் என்று அந்த தாய் தெரிவித்தார்.

பட மூலாதாரம், MBC/ YouTube

பிடித்தமானவர்கள் இறந்தபிறகு அவர்களை சரியாக வழியனுப்பவில்லை என நினைத்தால் இந்த தொழில்நுட்பம் ஓர் உதவியாகவே இருக்கும் என்கிறார் கொரிய பல்கலைக்கழகத்தின் மனநல துறையை சேர்ந்த கோ சு க்யு.

பயம், மறதி நோய், மன அழுத்தம், அதிக பதற்றம் ஆகியவற்றை குணப்படுத்த ஏற்கனவே மெய்நிகர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்கிறார் யோன்சாய் பல்கலைக்கழகத்தின் டாங் க்வி லி.

வயது முதிர்ந்த நோயாளிகளின் மறதி நோயை குணப்படுத்த, வர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில் நுட்பம் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி இரண்டும் பயன்படுத்தப்பட்டது. நோயாளிகள் காலத்தில் பின்னோக்கி சென்று, மறந்த நினைவுகளை உயிர்ப்பித்துக்கொள்ள இது உதவியது.

ராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறிய தருணம் மெய்நிகர் உலகம் மூலம் மீண்டும் உருவாக்கப்பட்டது. வயது முதிர்ந்த மறதி நோயாளிகளுக்கு அந்த தருணத்தை நினைவுகூர்வதன் மூலம் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தும் முயற்சி இது.

இம்மாதிரியான சோதனை முயற்சிகளின்போது ஆலோசகர்கள் உடனிருப்பது சிறந்தது என்கிறார் டாங் வி லி.

ஒரு பிரியாவிடை

இந்த யோசனையை தங்கள் குழு கவனமாக கையாண்டது என்று பிபிசி கொரிய சேவையிடம் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் லி குவான் சோக்.

அந்தப் படத்தின் முடிவில் நா நியோன் தனது தாய்க்கு பூக்கொத்து ஒன்றை வழங்கி, தான் அசதியாக இருப்பதாக படுத்துக் கொள்வாள். மேலும் தனது தாயை எப்போதும் நேசிப்பதாக அவள் தெரிவிப்பாள்.

இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பிரியாவிடை பெற்றுக் கொண்டபின் நா நியோன் தூங்கிவிடுவாள். அதன்பின் அவள் ஒரு வெள்ளை பட்டாம்பூச்சியாக மாறி அழகாக பறந்துவிடுவாள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: