கொரோனா வைரஸ் தடுப்பூசி - கோவிஷீல்டு, கோவேக்சின், கோவிட்-19 பூஸ்டர் டோஸ் குறித்த விவரங்கள்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?

பட மூலாதாரம், Reuters

உலகெங்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் பலவும் பயன்பாட்டில் இருந்தாலும் சில தடுப்பு மருந்துகள் மட்டுமே உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ளன.

அவை ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொமிர்னாட்டி (Comirnaty), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள வேக்ஸ்சேவ்ரியா (Vaxzevria), மாடர்னா நிறுவனத்தின் ஸ்பைக்வேக்ஸ் (Spikevax), ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் 'Ad26.COV2.S ' தடுப்பூசி, சீனோவேக் தயாரித்துள்ள கொரோனாவேக் ( CoronaVac), சீனோஃபார்ம் நிறுவனத்தின் 'BBIBP-CorV' தடுப்பூசி, இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவேக்சின், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நோவாவேக்ஸ் (NVX-CoV2373) தடுப்பூசி, உள்ளிட்ட 10 தடுப்பு மருந்துகள் ஆகும்.

இவற்றில் சீனோவேக் மற்றும் சீனோஃபார்ம் ஆகியவை சீன நிறுவனங்கள் ஆகும்.

மேலே உள்ள எட்டு மருந்துகள் தவிர நோவோவேக்ஸ் மருந்தின் அதே சூத்திரத்தை பயன்படுத்தி சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் கோவோவேக்ஸ், வேக்ஸ்சேவ்ரியா மருந்தின் அதே சூத்திரத்தை பயன்படுத்தி சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு ஆகிய இரண்டும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும்.

ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்து இந்தியாவில் 'கோவிஷீல்டு' (CoviShield) எனும் பெயரில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

முந்தைய வகை கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளால் உண்டாகும்போது புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு 'திரிபு' (variant) என்று அழைக்கப்படும்.

இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசிகள் எவை?

கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பு மருந்துகளே இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் வேறு சில தடுப்பு மருந்துகளுக்கும் இந்திய அரசு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.

சென்ற ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி 2022, ஜனவரி 3 முதல் இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்கும் குறைவான வயதுள்ள சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கின. அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு மருந்து மட்டுமே வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

அத்துடன் ஜனவரி 10 முதல் முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் (ஊக்குவிப்பு டோஸ்) தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளும் இதற்குப் பயன்படுத்தபடுகிறது.

இந்தியாவில் கோவிஷீல்டு, இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவேக்சின், ரஷ்ய அரசின் ஸ்புட்னிக் - வி, சைடஸ் காட்டிலா நிறுவனத்தின் சைகோவ்-டி, மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஜேன்சன் (Ad26.COV2.S), அமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவேக்ஸ் தயாரித்துள்ள கோவோவேக்ஸ், பயாலஜிக்கல் -இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஆகிய எட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படுமா?

ஒமிக்ரான் கொரோனா திரிபு மீது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் தாக்கம் குறித்து பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றினால் தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படும் போது, அதிலிருந்து சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி காக்கும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சதவீதம், கொரோனா தொற்றின் முந்தைய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கிய பாதுகாப்பைவிட சற்று குறைந்தது.

ஆனால், பூஸ்டர் தடுப்பூசி, தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் மருத்துவமனை செல்ல வேண்டியில்லாத நிலையை ஏற்படுத்தும் என, நம்பப்படுகிறது.

கோவிஷீல்டு குறித்து நமக்கு என்ன தெரியும்?

பட மூலாதாரம், Getty Images

'அடினோவைரஸ்' எனப்படும் சிம்பன்சி விலங்குகளில் காணப்படும் பொதுவான சளி வைரஸில் இந்த கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வைரஸை, கொரோனா வைரஸ் போல உருமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் அவ்வைரஸ் உடலுக்கு எந்த வித உபாதையையும் ஏற்படுத்தாது.

இந்த தடுப்பூசியை நம் உடலில் செலுத்திய பின், அது நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆன்டிபாடிக்களை உருவாக்கச் செய்து, கொரோனா வைரஸ் வந்தால் தாக்கி அழிக்கத் தயார்படுத்தும்.

இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக 8 முதல் 16 வார கால இடைவெளியில் செலுத்தப்படுகிறது. 2 - 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்து மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வரும் 'கோவிஷீல்டு' தடுப்பூசி நோயெதிர்ப்பு திறனைத் தூண்டுவதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

 • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, அந்த வைரஸ் அறிகுறி மேம்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு தொற்றை தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 • நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் அளவை இன்னும் சரியாகக் கணித்துக் கொடுத்தால், இந்த மருந்து 90% வரை பாதுகாப்பளிக்கும் என்கிறது இந்த மருந்து சார்ந்த தரவுகள்.
 • மிகவும் அதீத குளிரில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை சேமித்து வைக்க வேண்டியதில்லை என்பதால், இது ஃபைசர் ,மாடர்னா நிறுவனங்களின் மருந்துகளை விடவும் விநியோகிக்க எளிமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 • சிம்பன்ஸீ குரங்குகளில் காணப்படும் சளியை உண்டாக்கும் வைரஸ் (common cold virus) கிருமியின் பலவீனமாக்கப்பட்ட தொற்றைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிருமி மனித உடலில் பெருக்கம் ஆகாத வகையில் இதன் தன்மை மாற்றப்பட்டுள்ளது.

கோவேக்சின் குறித்து நமக்கு என்ன தெரியும்?

பட மூலாதாரம், Getty Images

கோவேக்சின், செயலற்ற கொரோனா வைரஸைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசி இது. இதை ஆங்கிலத்தில் Inactivated Vaccine என்கிறார்கள். எனவே இதை உடலில் செலுத்துவது பாதுகாப்பானது.

இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் என்கிற, 24 ஆண்டுகளாகச் செயல்படும் இந்திய நிறுவனம் உருவாக்கியது. இதுவரை இந்த நிறுவனம் 16 தடுப்பூசிகளை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி தனிமைப்படுத்தி வைத்த கொரோனா வைரஸ் மாதிரியைக் கொண்டு, கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது பாரத் பயோடெக்.

இந்த தடுப்பூசியை நம் உடலில் செலுத்தும் போது, நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம், இறந்த கொரோனா வைரஸைக் கூட அடையாளம் கண்டு, அதை எதிர்க்க ஆன்டிபாடிக்களை உருவாக்கும்.

இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்துகள் நான்கு வார இடைவெளியோடு வழங்கப்படுகிறது. இத்தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்கலாம்.

இந்த தடுப்பூசியின் செயல் திறன் 81 சதவீதமாக இருப்பதாக, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் முதல் நிலைத் தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு நெறியாளர்கள், இத்தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருந்த போதே கடந்த ஜனவரியில் 2021-ல் அவரசர அவசரமாக அனுமதி கொடுக்கப்பட்டதற்காக பொதுவெளியில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நிபுணர்கள் இத்தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பினர் என்பது நினைவுகூரத்தக்கது.

ஸ்புட்னிக் V தடுப்பூசி குறித்து நமக்கு என்ன தெரியும்?

பட மூலாதாரம், Getty Images

ஸ்புட்னிக் V தடுப்பூசி ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் இருக்கும் கமலேயா இன்ஸ்டிட்யூட்டால் தயாரிக்கப்பட்டது. இறுதி பரிசோதனை குறித்த தரவுகள் வெளியாவதற்கு முன்னரே இத்தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதால் தொடக்கத்தில் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளானது.

தற்போது ஸ்புட்னிக் V-யின் நன்மைகள் விளக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

கொரோனா வைரஸின் ஒரு சிறு பகுதியை நம் உடலில் எடுத்துச் செல்ல, ஒரு சளி வைரஸைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காத வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் மரபணுக்கள் பாதுகாப்பாக நம் உடலுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே நாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவுக்கு ஆளாகாமல், நம் உடல், கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து, அதனோடு சண்டையிட கற்றுக் கொள்கிறது.

இத்தடுப்பூசி மருந்தை 2 - 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்கலாம். எனவே இந்த கொரோனா தடுப்பூசியை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான சரக்கு போக்குவரத்து எளிதாகிறது.

மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிகள் - ஒற்றுமைஎன்ன?

 • மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் ஆகிய இரு தடுப்பூசிகளுமே RNA - வைரஸ் ஜெனிடிக் கோட் வகையைச் சேர்ந்தவை.
 • mRNA தடுப்பு மருந்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசிகள் கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டின் மிகமிகச் சிறு பகுதியைப் பயன்படுத்தி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டும் என்றும், இந்தத் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை எவ்வாறு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உடலுக்கு கற்பிக்கும்.
 • மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் ஆகிய இரு தடுப்பூசிகளும் இரு டோஸ்கள் உடலில் செலுத்தப்பட வேண்டும்.

அமெரிக்க நிறுவனமான மாடெர்னா (Moderna) தாங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்து, அது செலுத்தப்பட்டவர்களில் 95% பேருக்கு கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இந்த மருந்தின் பரிசோதனை 30,000 பேரை வைத்து செய்யப்பட்டது. இவர்களில் பாதிப் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்து நான்கு வார இடைவெளியில் செலுத்தப்பட்டது. மீதிப்பேருக்கு 'போலி மருத்துவம்' செய்யப்பட்டது. அதாவது அவர்களின் உடலிலும் தடுப்பு மருந்துதான் செலுத்தப்படுகிறது என்று அவர்கள் நம்பவைக்க பட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images

இந்த 30,000 பேரில் கோவிட்-19 தொற்று அறிகுறிகள் தென்பட்ட முதல் 95 பேரில் 90 பேருக்கு உண்மையான தடுப்பு மருந்தும், ஐந்து பேருக்கு 'டம்மி' தடுப்பு மருந்தும் செலுத்தப்பட்டது.

இதன் வெற்றி விகிதம் 94.5% என்று மாடெர்னா நிறுவனம் தெரிவிகிறது. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்த தடுப்பு மருந்து, அது செலுத்தப்பட்ட 90% பேருக்கு பாதுகாப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இ இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.

ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி

 • ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் இரு டோஸ்களுக்கு இடையே 21 நாள் இடைவெளிஇருக்க வேண்டும்.
 • ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி 90% பேருக்கு பலனளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி -75 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமிக்கப்பட வேண்டும்.
 • ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி அமெரிக்கா மட்டுமல்லாது ஜெர்மனி, பெல்ஜியம் என உலகின் பல நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாடர்னா தடுப்பூசி

 • மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால (28 நாட்கள்) இடைவெளியும் இருக்க வேண்டும்.
 • மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 94.5% பேருக்கு பலனளித்துள்ளது.
 • மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.
 • மாடர்னா அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து இயங்குகிறது. ஒப்புதல் பெற்றபின் பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும்.

ரஷ்ய ஆய்வாளர்கள் உருவாக்கிய ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஆக்ஸ்ட் மாதம் அனுமதி வழங்கியது ரஷ்யா.

உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷ்யாதான்.

தாங்கள் உருவாக்கிய ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி குறித்த முதல் ஆய்வு அறிக்கையை ரஷ்ய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இன்னும் பரிசோதனை நிலையிலேயே இருந்தாலும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சமூக ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வழங்கப்பட்டு வருகிறது.

 • 16,000 பேரை வைத்து இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது. இவர்களில் ஒரு குழுவினருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. ஒரு குழுவினருக்கு 'டம்மி' மருந்து கொடுக்கப்பட்டு உண்மையான மருந்து கொடுக்கப்பட்டது என்று நம்பவைக்கப்பட்டது.
 • இது ரஷ்யாவின் தேசிய நோய் தொற்றியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டது. ரஷ்யா, இந்தியா, வெனிசுவேலா, பெலாரூஸ் ஆகிய நாடுகளில் மூன்றாம்கட்ட பரிசோதனையில் உள்ளது.
 • கொரோனா தடுப்பு மருந்தை பெற்றவர்களில் 20 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளானது. உடலில் செலுத்தப்பட்ட 92% பேருக்கு இந்து கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று தரவுகள் கூறுகின்றன.
 • திரவ நிலையில் மைனஸ் 18 டிகிரி குளிர் வெப்பத்தில் இதை சேமித்து வைக்க வேண்டும்.
 • ஆரம்ப சோதனைகள் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதைக் காட்டின என ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ சஞ்சிகையான தி லான்செட் -ல் வெளியாகி உள்ள அந்த அறிக்கையில், தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் உடலில் நோயெதிர்ப்பான்கள் உருவானதாகவும், கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைகோவ் டிதடுப்பூசி

 • சைகோவ் டி டி.என்.ஏ-வை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாகும்.
 • மூன்று டோஸ்களைக் கொண்ட சைகோவ் டி கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களில் 66 சதவீதத்தினருக்கு, அறிகுறியை வெளிப்படுத்தும் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைத்தது என கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் கூறுகிறது.
 • டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்கள் தான் ஓர் உயிரின் அடிப்படை கட்டமைப்பு. இவையே மரபியல் தகவல்களை பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கடத்துகின்றன.
 • எல்லா கொரோனா தடுப்பூசிகளைப் போல டி.என்.ஏ தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட உடன், மனித உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு உண்மையான கொரோனா வைரஸ் உடன் போராட கற்றுக் கொடுக்கின்றன.

சைகோவ் டி பிலாஸ்மிட்கள் அல்லது சிறிய டி.என்.ஏ வளையங்களை பயன்படுத்துகிறது. அதில் மரபியல் தகவல்கள் இருக்கும். இந்த தடுப்பூசியை தோலின் இரு அடுக்குகளுக்கு மத்தியில் கொண்டு சேர்க்க பிலாஸ்மிட் அல்லது சிறிய டி.என்.ஏ வளையங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நம் உடலில் இருக்கும் செல்களுக்கு பிலாஸ்மிட்கள் மூலம்தான் புரத முள்முடியை உருவாக்கும் செய்தி கடத்தப்படுகிறது. இந்த புரத முள் முடிகள் மூலம்தான் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் நுழைகிறது.

கோவோவேக்ஸ்

கோவோவேக்ஸ் தடுப்பு மருந்து அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. நோவாவேக்ஸ் வழங்கிய உரிமத்தின் கீழ் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட்டால் இது தயாரிக்கப்படுகிறது.

இந்த தடுப்பு மருந்து குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் தடுப்பு மருந்து தேவையை இது பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவோவேக்ஸ் நேனோபர்ட்டிகிள் வகை தடுப்பு மருந்தாகும். நானோபர்ட்டிகிள் வகை தடுப்பு மருந்களில் சில நேனோமீட்டர் அளவே உள்ள, நோய் எதிர்ப் பொருட்களைத் (ஆன்டிபாடி) தூண்டக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படும்.

இது கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளர்கள் மத்தியில் 91 சதவீதம் செயல் திறனும், மிதமான மற்றும் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பதில் 100 சதவீதம் செயல் திறனும் கொண்டிருப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.

கோர்பிவேக்ஸ்

கோர்பிவேக்ஸ் பயாலஜிக்கல் -இ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்தாகும்.

கோர்பிவேக்ஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி ப்ரோடீன் சப்-யூனிட் (RBD protein sub-unit) வகை தடுப்பு மருந்தாகும்.

சப்-யூனிட் வகை தடுப்பு மருந்துகள் நோய் கிருமியின் முழு உருவமும் செலுத்தப்பட்டு உருவாக்கப்படாது. நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் செயல்படத் தூண்டப் போதுமான, கிருமியின் உறுப்பு மட்டுமே பயன்படுத்தப்படும்.

கொரோனா வைரஸின் புரத இழையில் உள்ள ஆர்.பி.டி ப்ரோடீன் கோர்பிவேக்ஸ் தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து ஏன் அவசியம்?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அபாயத்தில் பல கோடி மக்கள் உள்ளனர்.

இதற்கான தடுப்பு மருந்து போட்டுக் கொ்டால் உடலுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் கிடைக்கும். இதன்மூலம் அவர்கள் உடல்நலம் குன்றுவது, மரணிப்பது ஆகியவை தடுக்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: