மீத்தேன் அள்ளிக் கொடுக்கும் கொலைகார ஏரி: சகாரா பாலைவன நாடான ருவாண்டாவின் கதை

காணொளிக் குறிப்பு,

ருவாண்டா: ஏரிக்கு அடியில் மீத்தேன் - இப்படிதான் எடுக்கிறது இந்த ஆப்ரிக்க தேசம்.

ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் கவனிக்கப்படும் நாடாக ருவாண்டா மாறி வருகிறது. குறிப்பாக மின் ஆற்றல் துறையில்.

அந்நாட்டில் ஏரிக்கு அடியில் புதைந்திருக்கும் மீத்தேனை எடுக்கிறார்கள். மீத்தேன் எடுக்கிறார்கள் என்பதை நாம் ஒரு வரியில் குறிப்பிட்டுக் கடந்தாலும், அதன் பின்னால் ஆபத்துகளும் ஏராளமாக உள்ளன.

ஏரிக்கு பயணம்

மீத்தேன் எப்படி எடுக்கப்படுகிறது. அது எப்படி எரிசக்தியாக மாற்றப்படுகிறது என்பதை அறிய ருவாண்டாவில் உள்ள கிவூ ஏரிக்கு பிபிசி குழு சென்றது.

பட மூலாதாரம், Getty Images

கிழக்கு ஆப்பிரிக்காவின் பிரம்மாண்டமான ஏரிகளில் ஒன்றாக ருவாண்டாவின் கிவூ ஏரி உள்ளது.

அழகான அதன் தோற்றம், துடுப்புப் படகு சவாரி மற்றும் மீன்பிடி பொழுது போக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கிறது. நாட்டுக்குப் பெருமளவு வருவாயை ஈட்டித் தரும் வாய்ப்பு அங்கே உள்ளது.

ஆனால் இந்த கிவூ ஏரியின் ஆழத்தில்தான் ருவாண்டாவின் எதிர்காலத்தை அதன் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் சக்தி படைத்த மதிப்புமிக்க விஷயம் புதைந்துள்ளது.

ஆம். மீத்தேன்தான்.

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கிவூவாட் திட்டம் என அழைக்கிறார்கள்,

கிவூவாட் திட்டம்

கிவூவாட் திட்டம் 14 கிலோமீட்டர் நீளமான கரையைக் கொண்டதாக உள்ளது. ஏரியிலிருந்து மீத்தேன் எடுக்கும் இதுபோன்ற உற்பத்தித் திட்டம் உலகில் முதல் முறையாக இங்குதான் அமைக்கப்பட்டுள்ளது .

பட மூலாதாரம், Getty Images

ஏரிக் நடுவே ஒரு மிதவை நிலையத்தை உருவாக்கி இந்த திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள்.

இந்த மிதவை நிலையத்தை உருவாக்க ஏழு ஆண்டுகள் ஆனது. காங்கோ குடியரசு எல்லையில் உள்ள ஏரியின் கரையில் இது அமைந்துள்ளது.

இங்குள்ள பொறியாளர்கள் 12 மணி நேர ஷிப்டு பணியில், 24 மணி நேரமும் வேலை பார்த்து, ஏரியில் உள்ள நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.

கிவூ ஏரியில் மீத்தேன் மட்டுமல்ல நிறைய வாயுக்கள் உள்ளன.

குறிப்பிட்ட ஆழத்தில் இந்த வாயுக்கள் அழுத்தத்துடன் இருக்கின்றன. இந்த ஏரி 480 மீட்டர் ஆழம் கொண்டுள்ளது.

இருந்தபோதிலும், புவியியல் அசைவு போன்ற ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இந்த வாயுக்கள் கசியக் கூடிய ஆபத்தும் உள்ளது.

கொலைகார ஏரிகள்

எரிசக்திக்கு இந்த ஏரிகள் பெரிய அளவில் உதவினாலும் சர்வதேச அளவில் பேரழிவு சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள மூன்று ஏரிகளில் கிவூ ஏரியும் ஒன்று. இவை கொலைகார ஏரிகள் எனப்படுகின்றன.

1986 ஆம் ஆண்டில் கேமரூனில் உள்ள நியோஸ் என்ற இதைப் போன்ற ஏரியில் கரியமில வாயுக் கசிவு ஏற்பட்டது. அருகில் உள்ள கிராமங்களில் 1700 பேர் இதில் மரணம் அடைந்தனர். அந்தப் பாதையில் உள்ள உயிரினங்கள் அனைத்துமே செத்து மடிந்தன.

கிவூ ஏரியிலிருந்து வாயுக்கள் வெளிப்படுமானால், இன்னும் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம். நியோஸ் ஏரியைவிட இது 1700 மடங்கு பெரியது. இதைச் சுற்றி 2 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர்.

பட மூலாதாரம், கிவூ ஏரி

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஜெஃப்ரி அபியோடுன், உடல்நலன் பாதுகாப்பு & சுற்றுச்சூழல் மேலாளர், கிவூவாட்,``கிவூ ஏரியில் ஏராளமான வாயுக்கள் குவிந்துள்ளன. நியோஸ் ஏரியைவிட பல மடங்கு அதிகமாக உள்ளன. அதனால்தான் ஏரியின் படுகையிலிருந்து அவற்றின் அளவைக் குறைப்பதற்கு, இதுபோன்ற ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது.'' என்கிறார்.

300 பில்லியன் கன மீட்டர் கரியமில வாயு, 60 பில்லியன் கன மீட்டர் மீத்தேன் இந்த ஏரியில் உள்ளன.

இந்த மீத்தேனை பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவது ருவாண்டாவின் மின்சார தேவையைப் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். அந்த நாட்டுக்கு மிகவும் தேவையான விஷயமாக மின்சாரம் உள்ளது.

ஜெஃப்ரி அபியோடுன்,``நாட்டின் தேவையில் 30 சதவீதத்தை இந்தத் திட்டம் பூர்த்தி செய்வதாக இருக்கும்.'' என்கிறார்.

எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?

மிதவை நிலையத்தின் அடியில் பெரிய குழாய்களில் தண்ணீருடன் கலந்த வாயு கொண்டு வரப்படுகிறது.

பிரிக்கும் இயந்திரத்தின் மூலம் இந்த தண்ணீர் செலுத்தப்படுகிறது. குறிப்பிட்ட ஆழத்தில் தண்ணீரிலிருந்து வாயு பிரிந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

ரொனால்ட் செருயியோட், பராமரிப்பு மேலாளர், கிவூவாட்,``சாம்பெயின் பாட்டிலை திறக்கும் போது ஏற்படும் மாற்றத்தைப் போன்ற விளைவு தான் இங்கும் ஏற்படுகிறது. தண்ணீரை மேலே செல்ல நீங்கள் அனுமதிக்கும்போது, ஏரியின் அழுத்தத்தால் அது உந்தப்படும்போது, தண்ணீர் மேலே வருகிறது," என்கிறார்.

மிதவை நிலையத்தின் வாஷ் கோபுரங்களுக்குத் தண்ணீர் அனுப்பி சுத்தம் செய்யப்படுகிறது. கரியமில வாயு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகியவை அகற்றப்படுகின்றன. தண்ணீர் மீண்டும் ஏரியிலேயே விடப்படுகிறது.

பிரிக்கப்படும் மீத்தேன், மின்சார உற்பத்திக்காக, மின் உற்பத்தி நிலையத்துக்கு, குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.

ஜெஃப்ரி அபியோடுன், ``இதுதான் புதுமை சிந்தனையின் வரையறை. வடிவமைப்பு நிலையிலிருந்து ஒரு உற்பத்தித் திட்டத்தை உருவாக்கி, கட்டமைப்பு செய்து, இப்போது செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்," என்று கூறுகிறார்.

இப்போது ருவாண்டாவில் 51 சதவீத மக்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. 2024க்குள் நூறு சதவீத பகுதிகளுக்கும் மின்சார வசதி அளிக்க முடியும் என்று அரசு நம்புகிறது.

பெரிய இலக்கை எட்டுவதற்கு உதவும் வகையில், இன்னும் மூன்று மிதவை நிலையங்களை அமைக்க இத் திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: